ஆப்பிள் மூலம் சீனா லாபம் ஈட்டுகிறதா?





Image result for trump caricature

ஆம், இல்லை என்று கூற முடியாது. ஆனால் சீனா இதில் ஈட்டும் லாபம் குறைவுதான். ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு உள்ள கோபம், அமெரிக்காவிற்கும் சீனாவுக்குமான வர்த்தக இடைவெளிதான். கடந்த ஆண்டில் மட்டும் 420 பில்லியன் டாலர்கள் இடைவெளி உருவாகி இருக்கிறது.


ஆப்பிள் நிறுவனம் இதுகுறித்து, நாங்கள் சீனாவில் காசு குறைவு என்பதற்காக தயாரிக்கவில்லை. அங்கு தயாரிப்பதற்கான திறன்கள் உள்ளது என்று கூறியுள்ளதைக் கவனிக்க வேண்டும். இதை ட்ரம்ப் காது கொடுத்து கேட்க வாய்ப்பில்லை.


அடிப்படையில் ஒரு முதலாளி உற்பத்திச்செலவு குறைவான இடத்தில்தானே கொடுத்து தன் பொருளை உற்பத்தி செய்வார். அதுதான் அவருக்கு அதிக லாபத்தைக் கொடுக்கும். வியாபாரத்தை சேவையாக யாராவது செய்வார்களா? குறைந்த முதலீடு அதிக லாபம் என்பதுதான் பெரும்பாலான வியாபாரிகளின் வணிக தந்திரம்.

ஐபோனின்(ஐபோன் எக்ஸ் ) தயாரிப்புச்செலவு ஒரு போனுக்கு 370 டாலர்கள். இந்த செலவு அமெரிக்காவில் செய்தால் சரி என்கிறார் ட்ரம்ப். இங்கு வரி அதிகம் என்பதால் பெரும்பாலும் சீனாவில் தயாரித்து அசெம்பிள் செய்து விற்பனைக்கான விஷயங்களை மட்டும் அமெரிக்க ஸ்டோர்களில், இணையத்தில் செய்கிறார்கள். சீனா அமெரிக்காவுக்கு 505 பில்லியன் டாலர்களுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது 2017 ஆம் ஆண்டு கணக்கு.

தற்போதும் செல்போன்கள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்களை - 70.36 பில்லியன்கள் அளவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. அடுத்ததாக, கணினிகள், தொலைத்தொடர்பு பொருட்கள் உள்ளே வருகின்றன.

விரைவில் ட்ரம்ப் அமெரிக்காவுக்கு வரும் 300 பில்லியன் மதிப்பிலான இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக சொல்லி கலவரம் மூட்டியுள்ளார். ஐபோன் 7 இன் விலை 237 டாலர்கள் எனில், பல்வேறு டெக் கம்பெனிகளான இன்டெல், சாம்சங், பாக்ஸ்கான் ஆகிய நிறுவனங்களுக்குப் போக சீனாவுக்கு கிடைப்பது எட்டு டாலர்கள் மட்டுமே.

ஆனால் இதைப் புரிந்துகொள்ளாமல் அடுத்த தேர்தலில் வெற்றிபெறும் அவசரத்தில் ட்ரம்ப் கற்பனையான எதிரியாக சீனாவைக் கைகாட்டுகிறார். இதனால் விளையப்போவது மக்களுக்கான பிரச்னைதான். சீனாவின் பொருட்கள் மட்டமானவை என்பதை இன்று யாருமே நம்ப மாட்டார்கள். ஹூவெய், ரெட்மீ, ஆப்போ, விவோ ஆகிய நிறுவனங்களின் டிஜிட்டல் பொருட்கள் அவ்வளவு தரமாக உள்ளன.

ஏன் அமெரிக்காவில் தயாரிக்கக் கூடாது?

தொண்ணூறுகளில் பல்வேறு டெக் கம்பெனிகள் ஆசிய நாடுகளுக்கு நகர்ந்துவிட்டன. ஆப்பிள் சீனா கம்பெனிகளுக்கு போன் பாகங்களைத் தயாரிக்க அனுமதிக்க காரணம், அங்கு ஏற்கனவே தொழிற்சாலைகள் இருக்கின்றன. எனவே, ஆப்பிளுக்கு புதிய தொழிற்சாலைகளை உருவாக்கும் காசு மிச்சம். அதை மார்க்கெட்டிங்குக்கு செலவழிக்கலாம். லாபம் பார்க்கலாம். அமெரிக்காவில் புதிய தொழிற்சாலை அமைத்தால், ஏராளமாக செலவாகும். லாபம் குறையும். இதெல்லாம் தேவையா? இங்கு பாக்ஸ்கான் ஆலை விஸ்கான்சின் மாநிலத்தில் இயங்குகிறது. இதற்கான வரிச்சலுகை 3 பில்லியன் டாலர்கள். அனைத்து நிறுவனங்களுக்கும் இப்படி சலுகை கொடுத்தால், வரிகளை யார் கட்டுவது சொல்லுங்கள்.






நன்றி: தி கான்வர்சேஷன்.

படம் - போர்டு பான்டா