சம ஊதியம் கனவல்ல - நாகலாந்து கிராமம் சாதனை





Image result for nagaland chizami


இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுவிட்சர்லாந்தில் சம ஊதியம் கேட்டு பெண் ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆனால் வளர்ந்துவரும் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் கொண்ட இந்தியாவில் அது சாத்தியமாகி உள்ளது. குறிப்பாக, நாகலாந்து கிராமத்தில் இதனை சாத்தியப்படுத்தியுள்ளனர். அதுவும் இன்று நேற்றல்ல, கடந்த 30 ஆண்டுகளாக இதனை செய்து வருகின்றனர்.

நாகலாந்தின் சிசாமி மாவட்டத்தில்தான் இந்த அதிசயம் நடந்துள்ளது. நாங்கள் முதலில் உழைப்பிற்கு ஊதியமாக தானியங்களைப் பெறும் வரையில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் உழைப்பிற்கு சம்பளம் அளிக்கப்பட்டபோது, அதில் பெரும் இடைவெளியையும் வேறுபாட்டையும் உணர்ந்தோம் என்கிறார் 74 வயதான விவசாயக்கூலியான காஃப்கோ.

சிசாமி மாவட்டத்தில் விவசாய வேலைகளை பெண்கள்தான் செய்கிறார்கள். பெரும்பாலான உதவிகளை நாடாமல் அவர்கள் உழைப்பது ஆச்சரியமாக உள்ளது. அங்கு வாழ்நிலை அப்படித்தான் இருக்கிறது. பெண்கள் சங்கம் அமைத்து ஆண்களின் சம்பளம், உழைப்பு ஒன்றாக இருந்தாலும் அதிகமாக இருப்பது குறித்து கேள்விகளை 2007 ஆம் ஆண்டு முதல் எழுப்பி ஊதியத்தை உரிமையாக பெற்றிருக்கிறார்கள்.

இங்கும் முன்னர் குடும்பத்தலைவராக ஆண்களே இருந்துள்ளனர். அரசியலில் நுழையவும் பெண்களுக்கு தடை இருந்துள்ளது. இவர்களுக்காக நார்த் ஈஸ்ட் நெட்வொர்க் எனும் தன்னார்வ அமைப்பு குரல் கொடுக்கத் தொடங்க அனைத்து காட்சிகளும் மெல்ல மாறின.

பெண்கள் இதழ் ஆண்களை வில்லனாக கட்டுரைகள் எழுதி சம்பாதிக்கின்றன. அப்படி இல்லாமல் நாகலாந்தில் உள்ள முக்கியமான ஆண் வல்லுநர்களை பெண்கள் சங்கத்தினர் அணுகி தங்கள் சார்பாக பேச கோரினர். அப்படி மாவட்ட மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்த மரு.வெத்ஸெலோ டி மெரோ என்பவர் உதவிக்கு வந்தார். அவர் உள்ளூர் கௌன்சிலில் பேச மாற்றம் சாத்தியமானது.


தற்போது விவசாயம் மற்றும் விவசாயம் சாராத வேலைகளுக்கு ஊதியம் ரூ. 450- 400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிசாமி மாவட்டத்தில் 5 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இங்கு விவசாயம் சார்ந்த வேலைகளை சார்ந்து 30 சதவீத குடும்பங்கள் உள்ளன.

ஆனால் வேலை சார்ந்த ஊதிய இடைவெளியில் இந்தியா இன்றும் முன்னணியில்தான் உள்ளது. தொண்ணூறுகளில் 38 சதவீதம் என்றால் 2012 காலகட்டத்தில் 34 சதவீதமாகி உள்ளது என்கிறது இந்திய தொழிலாளர் அமைப்பு - ஐஎல்ஓ.

1976 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சம ஊதியம் குறித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால் இதனை பல்வேறு நிறுவனங்கள் கடைப்பிடிப்பதில்லை. ஊதிய வேறுபாடு 50 முதல் 100 வரைக்கும் உள்ளது என்கிறார் வணிக பணியாளர் சங்கத்தைச் சேர்ந்த  ராமேந்திர குமார்.

சிசாமி மாவட்டத்தைத் தொடர்ந்து பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் அதனைக் காட்டி தங்களது உழைப்பிற்கான பலனைப் பெறத் தொடங்கியுள்ளனர். அதேசமயம் சிசாமி மாவட்டத்தில் சம ஊதியத்திற்கு எதிராக ஆண்களும் முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர். விரைவில் இது கௌன்சிலிலும் எதிரொலிக்கலாம். எனவே சம ஊதியப்போராட்டம் என்பது தற்போது ஓயாது என உறுதியாக கூறலாம்.


நன்றி: டைம்ஸ் - யுதாஜித் சங்கர். தாஸ்