நேரு - கமலா கௌல் திருமண வாழ்க்கை!





Image result for Nehru illustration




நேரு - கமலா கௌல் திருமண வாழ்க்கை!

இந்தியாவின் முதல் பிரதமராக பணியாற்றிய நேரு, கடுமையான உழைப்புக்கு பெயர் பெற்றவர். தினசரி பனிரெண்டு மணிநேரங்களுக்கு மேல் உழைத்தவர். நாட்டின் பிரதமராகவும், வெளியுறவுக்கொள்கை அமைச்சராகவும் இருந்தார். இவரின் அரசியல் வாழ்வு அளவுக்கு, இவரின் திருமண வாழ்வு அதிகளவு குறிப்பிடப்படவில்லை.

நேரு, இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜிலுள்ள ட்ரினிட்டி கல்லூரில் படித்து வந்தார். தந்தை மோதிலால் நேருவுக்கு அவரை ஆங்கிலேயே அரசில் ஐசிஎஸ் அதிகாரியாக வேலைசெய்ய வைக்கவேண்டும் என்று ஆசை. ஆனால் நேரு படிக்கும் காலத்திலேயே உலக அரசியலில் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார். கல்லூரியில் படிக்கும்போது ஐசிஎஸ் அதிகாரியாக தேர்வு பெறுவதற்கான மதிப்பெண்களை அவர் பெற்றிருக்கவில்லை. ஆங்கில அரசில் பணிபுரியும் எண்ணமும் அவருக்குக் கிடையாது.

விருப்பமற்ற திருமணம்

அந்த கால நடைமுறைப்படி நேருவுக்கு திருமணம் செய்வதற்கான பேச்சு தொடங்கியது. இதுகுறித்து தன் தாய்க்கு 1907 ஆம் ஆண்டு நேரு கடிதம் எழுதினார். ”திருமணத்திற்கு பொருத்தமான பெண்ணை நீங்களே தேர்ந்தெடுங்கள். அதில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் அப்பெண்ணுடன் என்னால் நல்ல முறையில் வாழமுடியுமா என்று தெரியவில்லை” என்று எழுதினார். ஆனால், மோதிலால் நேரு, அதனை எளிமையாக கையாண்டு, நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று பதில் எழுதி அனுப்பினார்.

நேரு, பி.ஏ. எல்எல்பி படித்து இந்தியா திரும்பினார். தந்தை மோதிலால் அன்று அலகாபாத்தில் மிக பிரபலமான வழக்குரைஞர். நேரு அவரது உதவியாளராகப் பணிபுரிந்தார். மோதிலாலுக்கு நேருவின் மீது நம்பிக்கை வரத்தொடங்கியது இக்காலகட்டத்தில்தான். 

ஆசை மணமகள்!

1916 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நேருவுக்கு திருமணம் செய்வதற்கான முயற்சிகள் தொடங்கின. காஷ்மீரிலுள்ள பண்டிட் குடும்பத்தினரிடையே பெண்களை சலித்து தேடத் தொடங்கினர். அதில்தான், அங்கு மாவு ஆலை அதிபரின் பெண் கமலா கௌல் கிடைத்தார். அப்போது அவருக்கு வயது பதிமூன்று. நேருவின் ஆங்கிலப்புலமைக்கு மாறாக கமலா இந்தி உருது மொழிகள் மட்டுமே படித்திருந்தார்.

1916 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 அன்று இருபத்தாறு வயது நேருவுக்கும் அவரை விட பத்து வயது இளையவரான கமலா கௌலுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கான உறவினர்கள் செல்ல அலகாபாத்திலிருந்து வாகனங்களை அல்ல ரயிலையே புக் செய்துவிட்டார் மோதிலால் நேரு. டெல்லியில் நடைபெற்ற திருமணம் அன்று பெரும் பொருட்செலவில் விமரிசையாக ஒரு வாரம் நடைபெற்றது. அலகாபாத்திலும் இசை, கவிதை நிகழ்ச்சிகள் என கொண்டாட்டங்கள் தொடர்ந்தன. நேரு, வழக்குரைஞர் தொழிலைக் கைவிட்டு காந்தியின் அகிம்சைப் போராட்டங்களில் பங்கேற்றார். இது அவரது குடும்பத்தின் பொருளாதாரத்தைப் பாதித்தது. ஆனால் நேரு இதுகுறித்து பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

மனைவிக்கு சிகிச்சை!

 1917 ஆம் ஆண்டு நேருவுக்கு மகள் பிறந்தாள். இந்திரா பிரியதர்ஷினிதான் அக்குழந்தை. இதன்பின் குடும்பம் மீது அவருக்கு சிறிது கவனம் பிறந்தது.
1924 ஆம் ஆண்டு கமலா, ஆண்குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். ஆனால் அக்குழந்தை திட்டமிட்ட நாட்களுக்கு முன்னதாக பிறந்ததால், இரண்டே நாட்களில் இறந்துபோனது.

இதோடு இந்த பிரசவத்தால் கமலாவின் உடல்நிலை கெட்டது. கூடுதலாக, அவருக்கு காசநோயின் அறிகுறிகள் தென்பட்டன. அந்நேரத்தில் நேருவுக்கும் காய்ச்சல் வர, சிலமாதங்கள் ஓய்வெடுக்கத் தீர்மானித்தார். ஐரோப்பாவில் தன் மனைவி கமலாவுக்குச் சிகிச்சை செய்ய நினைத்தார். ஆனால் அதற்கு நேருவிடம் பணமில்லை. அந்நேரத்திலும் கருத்துகள் முரண்பட்டாலும் மகனுக்கு பத்தாயிரம் ரூபாய் அளித்து உதவியது, தந்தை மோதிலால்தான்.

அரசியல் ரீதியான குழப்பங்களுடன் ஐரோப்பா பயணப்பட்டவரை பிரிட்டிஷ் அரசு, அரசியல்ரீதியான நடவடிக்கைகள் கூடாது என உறுதிபடுத்திக்கொண்டு பாஸ்போர்ட்டை வழங்கியது. 1926 ஆம்  ஆண்டு மார்ச் 1 அன்று, பாம்பே சென்று அங்கிருந்து கப்பலில் ஸ்விட்சர்லாந்து சென்றார். இருபது மாதங்கள் ஜெனீவாவில் தங்கி மகளை பள்ளியில் சேர்த்து மனைவி கமலாவைக் கவனமாக பார்த்துக்கொண்டார்.

காதல் மனைவி கமலா!

கமலா, நேருவுக்கு அறிவுசார்ந்த துணையாக இருக்கவில்லை. அதை அவருமே உணர்ந்திருந்தார். மணமான மூன்றாவது ஆண்டே(1919) காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. பின், 1925 ஆம் ஆண்டு அவருக்கு பிறந்த ஆண்குழந்தை இரண்டே நாளில் இறந்துபோனது. 1928 ஆம் ஆண்டு உருவான கரு கலைந்தது. கமலாவுக்கும், நேருவுக்குமான நெருக்கம் கிடைத்தது 1931 ஆம் ஆண்டு இலங்கைக்கு(அன்று சிலோன்) சென்றபோதுதான். பின்னர், கமலா இறந்தபோது அவரின் போட்டோவையும், உடலின் அஸ்தி சாம்பலையையும் தன்னுடனேயே நேரு வைத்திருந்தார். 

தொகுப்பு: ச.அன்பரசு

நன்றி: சசிதரூர் - தி இன்வென்ஷன் ஆஃப் இந்தியா

படம் - பிஸினஸ் ஸ்டாண்டர்டு