குழந்தைகளின் அழுகுரலை மொழிபெயர்க்கும் ஏ.ஐ.!
குழந்தையின் அழுகையை மொழிபெயர்க்கலாமா?
குழந்தையின் பெரும்பாலான நேர ஹாபி, அம்மாவை தன் அருகில் வரவைத்து பாதுகாப்பாக இருப்பதே. பசி, அழுகை, வலி என அனைத்துக்கும் அழுகைதான் ஒரே மொழி. தற்போது ஏ.ஐ. இதிலும் நுழைந்துள்ளது.
குழந்தை இயல்பாக பசிக்கு அழுவதற்கும், வலி, ஆபத்து, அம்மாவின் அண்மை வேண்டும் என்பதற்கும் வித்தியாசம் உண்டு என்பதை செயற்கை நுண்ணறிவு மூலம் நிரூபிக்க முயற்சிக்கிறார்கள். வடக்கு இலினாய்ஸ் பல்கலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதில் தயங்காமல் இறங்கியிருக்கின்றனர்.
இப்பல்கலைக்கழக குழு இதற்காக தனி அல்காரிதம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். கம்ப்ரஸ்டு சென்சிங் என்று அழைக்கப்படும் இம்முறையில் குழந்தையின் அழுகையை மொழிபெயர்த்து தருகின்றனர். இது குழந்தையின் பெற்றோர் மற்றும் டாக்டர்களுக்கும் உதவும் என நம்புகின்றனர்.
எப்படி செயல்படுகிறது?
அல்காரிதம் குழந்தையின் அழுகை ஒலியை அலைவடிவமாக ஆராய்ந்து, அதன் லயம், தாளம், சுருதியை அளவிடுகிறது. முதலிலேயே தகவல் தளத்தில் நாம் குழந்தைகளின் அழுகையை பதிவு செய்து வைத்திருப்போம் அல்லவா? அதனோடு இதனை ஒப்பிட்டு நீ என்ற ஒலி என்றால் பசி, இயா என ஒலி வந்தால் தூக்க உளறல் என வரிசைப்படுத்துகிறார்கள்.
குழந்தைகளின் அழுகை என்பது சிறப்பு மொழிபோலத்தான். குழந்தைகளின் அழுகுரல்கள் சிக்னல்களாக மாற்றப்பட்டு அவர்களின் உணர்வுகளை நாம் புரிந்துகொள்ளலாம் என்கிறார் பேராசிரியர் லிச்சுவான் லியூ.
நன்றி: பிபிசி