நவகாளி யாத்திரை! - கலவரத்தை நிறுத்திய காந்தியின் பயணம்
நவகாளி யாத்திரை! - கலவரத்தை நிறுத்திய காந்தியின் பயணம்
ஆங்கிலேயர் ஆட்சியின் பிடியிலிருந்து இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரமடைந்தது. அதற்கு முன்னதாகவே இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை, சமாளிக்க முடியாத ஒன்றாக மாறத் தொடங்கியிருந்தது. இதன்விளைவாக, இந்தியா சுதந்திரமடைந்த நாளின்போது கூட காந்தி கலவரங்களைத் தடுப்பதற்கான பணியில் இருந்தார்.
1946 ஆம் ஆண்டு முஸ்லீம் லீக் கட்சி, தனிநாடு கோரிக்கைக்காக தொடர்ச்சியாகப் போராடி வந்தது. இந்நோக்கத்தை அரசுக்கு வலியுறுத்த பேரணி நடத்த முடிவானது. இறுதியாக, ஆகஸ்ட் 16 ஆம் தேதியை நேரடி நடவடிக்கை நாளாக அறிவித்தது முஸ்லீம் லீக் கட்சி. முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த இடங்களில் நடந்த கட்சிப் பேரணி, திடீரென வன்முறைப் பாதைக்குத் திரும்பியது. இதன் விளைவாக, கோல்கட்டாவில் வாழ்ந்த இந்துக்களின் கடைகளும், வீடுகளும் கொள்ளையிடப்பட்டன. இதற்கடுத்த நாள் இந்து அமைப்புகள், முஸ்லீம்களின் மீது வன்முறை வெறியாட்டம் நடத்தினர். பல்லாயிரக்கணக்கான மக்கள், இக்கலவரத்தில் பலியானார்கள். கலவரத்தை முடிவுக்கு கொண்டுவருவது எப்படி என வழிதெரியாமல் ஆங்கில அரசும் திகைத்து நின்றுவிட்டது.
இதனால் மன வேதனையுற்ற காந்தி, கலவரம் நடந்த பகுதிகளுக்கு யாத்திரையாகத் தன் தொண்டர்களுடன் சென்றார். காந்தியின் மனோவேகத்திற்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை. காரணம் அப்போது அவரின் வயது 77.
காந்தி, கலவரத்தைத் தடுத்து நிறுத்த மக்களைச் சந்தித்துப் பேசினார். தான் போக முடியாத இடங்களில் தன் சார்பில் பிரதிநிதிகளை அனுப்பினார். இந்தியாவின் சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க முடியாதபடி கோல்கட்டா, பீகார், நவகாளி கலவரங்கள் தடுத்துவிட்டன என்பதே உண்மை.
கலவரங்கள் முழுமையாக குறையவில்லை என்றாலும், காந்தியின் தொண்டர்கள் செய்த பணிகளால் ஓரளவு அமைதியான சூழல் உருவானது. கோல்கட்டா கலவரத்தைத் தொடர்ந்து வங்கதேசத்தின் நவகாளிப் பகுதியில் முஸ்லீம்கள் இந்துக்களைத் தாக்கினர். இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாயினர். பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து உள்நாட்டிலேயே அகதிகளானார்கள். நவம்பர் ஆறாம் தேதி வங்கதேசத்தின் நவகாளிக்கு காந்தி சுற்றுப்பயணமாக சென்றார். அங்கு சென்றதும், சௌமுகானி எனுமிடத்தில் தனது முதல் அமைதிச் சொற்பொழிவை ஆற்றினார். இதனை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம் மக்கள் கேட்டு கண்ணீர் மல்கினர்.
நவகாளியில் 114 நாட்கள் தங்கியிருந்தார் காந்தி. அங்கு கலவரத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களுக்கு, தனது தொண்டர்களை அனுப்பி வைத்தார். அவர்களின் அமைதிப் பிரசாரத்தால் அங்கு அமைதி திரும்பியது. முஸ்லீம் மக்களின் வீடுகளில் தங்கி கலவரப் பகுதிகளுக்குச் சென்று மக்களை சமாதானப்படுத்தினார். முஸ்லீம் லீக்கின் மிரட்டலால், முஸ்லீம்கள் காந்தியின் கூட்டத்திற்கு வருவது குறைந்தது.
”வங்காளத்தில் என்னுடைய அகிம்சா தர்மத்திற்கு கடும் சோதனை ஏற்பட்டுள்ளது. இத்தேர்வில் நான் தேறாவிட்டால், நான் கடைபிடித்த வழிமுறைதான் அதற்கு காரணம். இன்று நான் தோற்றாலும் பிற்காலத்தில் வருபவர்கள் இம்முறையில் வெல்வார்கள்” என்று காந்தி பேசியுள்ளார்.
கலவரப்பகுதிகளில் காந்தி, தன் தொண்டர்களை நிவாரணப் பணிகளைச் செய்யப் பணித்தார். “சத்தியமும் அகிம்சையும் என்னை அறுபது ஆண்டுகளாகக் காப்பாற்றி வந்தன. அந்த இரு சக்திகளும் என்னை பெரும் சோதனைகளுக்கு ஆளாக்கியுள்ளன. நவகாளியில் நான் இருளையே காண்கிறேன். வெளிச்சத்தைக் காணவில்லை.” என்று கூறினார். பின்னர் தொடங்கிய கால்நடை யாத்திரையில் நாற்பத்தி எட்டு கிராமங்களுக்குச் சென்று வந்தார். பீகார் முஸ்லீம் மக்கள் இந்துக்களால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு செல்ல முடிவெடுத்தார் காந்தி. நவகாளிக்கு நான் திரும்பி வருவேன் என்று காந்தி கூறிய வாக்குறுதி பின்னர் நிறைவேற்றப்படாமலேயே போனது, சோகம்தான். இன்றும் கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசியல் தலைவர்கள் ஆறுதல் கூற வருவதை துணிச்சலாக தொடங்கியவர் காந்திதான். அரசியல்வாதிகளிடமிருந்து காந்தி மாறுபடுவது, அவர் கொண்ட மக்கள்நேயம்தான்.
ஆதாரம்: நவகாளி யாத்திரை, சாவி.
https://www.hindutamil.in/news/opinion/columns/515057-mahatma-gandhi.html
கருத்துகள்
கருத்துரையிடுக