க்யூஆர் கோடு வழியாக கல்வி!- டிஜிட்டல் வழியாக நடைபோடும் மாணவர்கள்
இன்று அரசு பாடநூல்களில் க்யூஆர் கோட் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. இணையம் இருந்தால் மேற்படி தகவல்களை எளிதாக அறியமுடியும். இது கல்வித்துறையில் பெரிய புரட்சி என்றே சொல்லலாம். குயிக் ரெஸ்பான்ஸ் கோடு என்பது, நாளிதழ்களில் முதல் பக்க விளம்பரங்களிலேயே தென்படத்தொடங்கிவிட்டது. அதனை ஸ்மார்ட்போன்களில் உள்ள க்யூஆர் ஸ்கேனர் ஆப் மூலம் ஸ்கேன் செய்தால், தொடர்புடைய பொருள் பற்றிய விளக்கம் கிடைக்கும்.
பாடநூல்களில் இணைக்கப்பட்டுள்ள புதிய வசதி மூலம் மேலும் மேலும் கற்க வாய்ப்பு கிடைக்கிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு எந்த பாடங்களில் ஆர்வம் உள்ளது என கண்டுபிடிக்க வாய்ப்பு கிடைத்தால் எப்படியிருக்கும்? அதுதான் மத்திய அரசின் சிந்தனையும் கூட. அதற்காகத்தான் மத்திய அரசின் கல்வித்துறை, நந்தன் நீல்கேனியின ஏக் ஸ்டெப் பவுண்டேஷனுடன் கைகோத்துள்ளது. இந்த பவுண்டேஷனின் தீக்சா எனும் ஆப்பில் மாணவர்கள் பாடநூல்களிலுள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்யவேண்டும். அதனை வைத்து மாணவர்கள் ஆர்வம் கொள்ளும் பாடங்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இதன்மூலம் அவர்களின் ஆர்வங்களை அரசு எளிதாக அறிந்துகொள்ள முடியும்.
2017ஆம் ஆண்டு ஐந்து மாநிலங்களில் சோதனை முறையில் அமலான தீக்சா திட்டம், 28 மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சன்பேர்டு எனும் திறமூல முறையில் தீக்சா திட்டம் உருவாக்கப்பட்டது. இதில் மத்திய அரசு மட்டுமன்றி மாநில அரசுகளும் இணைந்துள்ளன. கர்நாடக அரசு, க்யூஆர் கோடு மூலம் கேள்வி, பதில்களை பார்க்குமாறு செய்துள்ளது. சன்பேர்டு திறமூல வடிவத்தை பல்வேறு கல்வி சார்ந்த அமைப்புகளும் டிஜிட்டல் கற்றலுக்காக பயன்படுத்தி வருகின்றன. இந்த வகையில் இன்போசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் சிபுலால் சிக்சாலோகம் எனும் கல்வி திட்டத்தை உருவாக்கியுள்ளார். இதன் பின்னணியில் அத்வைத் எனும் தன்னார்வத் தொண்டு அமைப்பு உள்ளது. இதைப்போன்ற அமைப்பை பெரு, கோஸ்டாரிகா ஆகிய நாடுகளில் உருவாக்க உலக வங்கி யோசித்து வருகிறது.
தீக்சா ஆப், கூகுள் பிளே ஸ்டோரில் 70 லட்சத்திற்கு அதிகமான தரவிறக்கங்களைக் கொண்டுள்ளது. இதனை ஆசிரியர்கள் மட்டுமே 40 லட்சம் பேர் தரவிறக்கியுள்ளனர். க்யூஆர் கோடில் பாடங்கள் பல்வேறு பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கும். இதனை மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் சிறப்பாக விரிவுபடுத்த முயன்று வருகின்றன.
நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக