சாதனை செய்யும் நவரத்னா நிறுவனங்கள் பற்றி அறிந்துகொள்வோம்!
சாதனை செய்யும் நவரத்னா நிறுவனங்கள்
நாளிதழ்களை படிக்கும்போது சில அரசு நிறுவனங்களின் விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள். நிறுவனத்தின் பெயருக்கு கீழே நவரத்னா விருது பெற்றது என்று அச்சிட்டிருப்பார்கள். பல்வேறு நிறுவனங்கள், தங்களின் சிறப்பான செயல்பாட்டிற்காக விருதுகளைப் பெறுகிறார்கள். குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டும் அப்படி விருது பெற்றது என்று குறிப்பிடுவது எதற்கு என யோசித்திருக்கிறீர்களா?
பொதுத்துறை நிறுவனங்களை இந்திய அரசு மூன்று பிரிவாக பிரிக்கிறது. மினிரத்னா, நவரத்னா, மகாரத்னா. இவற்றை அவற்றின் மதிப்பு, வருமானம், பங்குச்சந்தை மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்து வகைப்படுத்துகிறார்கள். இதில், செபி அமைப்பின் விதிமுறைகளையும் பின்பற்றுகிறார்கள்.
மினிரத்னா
மினி ரத்னா நிறுவனங்கள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன. பிரிவு 1 இல் உள்ள நிறுவனங்கள் மூன்று ஆண்டுகளுக்கு சிறப்பான லாபத்தைப் பெற்று இருக்கவேண்டும். அவை சார்ந்த தொழில்துறையில் 500 கோடி ரூபாய் முதலீட்டைப் பெற்றிருக்கவேண்டும்.
பிரிவு 2 இல், நிறுவனங்கள் மூன்று ஆண்டுகளுக்கு குறிப்பிட்ட இலக்கிலான லாபத்தை பெற்றிருக்கவேண்டும். தற்போது இந்தியாவில் மினி ரத்னா அந்தஸ்தில் 73 நிறுவனங்கள் (முதல் பிரிவு) உள்ளன. இரண்டாம் பிரிவில் 18 நிறுவனங்கள் உள்ளன.
நவரத்னா
2009ஆம் ஆண்டு இந்திய அரசு சிறப்பாக செயல்படும் நிறுவனங்களுக்கு நவரத்னா விருது கொடுத்து அவற்றின் செயல்பாட்டை மேம்படுத்த முடிவு செய்தது. பொதுவான தகுதிகள் அதன் நிறுவன மதிப்பு, வருமானம் ஆகியவையே.
கூடுதலாக, மினிரத்னா (முதல் பிரிவு), இயக்குநர் குழுவில் நான்கு சுதந்திரமான இயக்குநர்கள், உற்பத்தி, வருமானம் ஆகிய அம்சங்களில் அரசு விதிகளின்படி 60 புள்ளிகளைப் பெறவேண்டும்.
1997ஆம் ஆண்டு இந்திய அரசு, ஒன்பது பொதுத்துறை நிறுவனங்களுக்கு நவரத்னா அந்தஸ்தை அளித்தது. இதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களோடு போட்டியிட முடியும். சுதந்திரமான செயல்பாடு , அரசின் தலையீடு இன்மை, துணை நிறுவனங்களின் உருவாக்கம் ஆகிய அம்சங்கள் இதில் உண்டு.
நவரத்னா விருது பெற்ற பொதுத்துறை நிறுவனங்கள் மொத்தம் 14 உள்ளன. மினி ரத்னா என்பது நிறுவனங்களின் சுதந்திரம், செயல்பாடு என்பதைப் பொறுத்தவரையில் மூன்றாவது நிலையாக பார்க்கப்படுகிறது.
மகாரத்னா
தற்போது இந்தியாவில் பத்து மகாரத்னா விருது பெற்ற பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இதில் அரசு சில நிறுவனங்களை தனியாருக்கு விற்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலைக்கு மினிரத்னா, நவரத்னா நிறுவனங்கள் உயர்வதற்கு சில விதிமுறைகள் உள்ளன. 1000 கோடி முதல் 5 ஆயிரம் கோடி வரையிலான தொழில் முதலீடுகளை நிறுவனங்கள் செய்திருக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவு வருவாய் சம்பாதித்திருக்க வேண்டும். இந்நிறுவனங்கள் தம் மொத்த வருவாயில் 15 சதவீதத்தை சுதந்திரமாக செலவிடும் சுதந்திரத்தை அரசு வழங்குகிறது.
source - https://blog.madeeasy.in/what-is-a-maharatna-company
https://www.jagranjosh.com/general-knowledge/list-of-maharatna-and-navratna-companies-in-india-1467721897-1
குறிப்பு
இக்கட்டுரை முன்னர் எழுதப்பட்டது. இன்று பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றன. அக்காலகட்டத்தை உத்தேசித்து வாசியுங்கள். நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக