அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை!
அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை!
உலகமெங்கும் நடந்துவரும் உள்நாட்டுப்போர், மத அடிப்படைவாதம் காரணமாக பல்வேறு நாடுகளிலிருந்து மக்கள் வாழ வழியின்றி பிற நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை 2010-15 காலகட்டத்தில் தீவிரமாக அதிகரித்து வருகிறது. அண்மையில் வெளியான Proceedings of the National Academy of Sciences ஆய்விதழில் அகதிகளின் எண்ணிக்கையை கணிப்பது குறித்து துல்லியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அகதிகளின் எண்ணிக்கையை பெரும்பாலான நாடுகள் கணிப்பது தோராயமான அளவீடுகள் மூலமாகத்தான். வாஷிங்டன் பல்கலைக்கழக(UW) ஆராய்ச்சியாளர்கள் சூடோ பேய்ஸ்(Pseudo bayes) முறை மூலம் கணிக்கின்றனர். இதன்படி தொண்ணூறுகளிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரையில் 1.3 சதவிகிதம் என அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேசமயம் அகதிமக்களில் 45 சதவிகிதம் பேர் தங்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்பி சென்றுள்ளதும் முக்கியமான ஆய்வறிக்கைத் தகவல்.
"இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கையை துல்லியமாக ஆய்ந்தறிவது சாதாரணமான காரியம் அல்ல. அரசு இம்முயற்சியில் இறங்காதபோது அகதிகளுக்கான வசதிகளை முழுமையாக வழங்கமுடியாது" என்கிறார் புள்ளியியல் மற்றும் சமூகவியல் சேர்ந்த ஆய்வாளர் அட்ரியன் ராஃப்டெரி. பல்வேறு நாட்டு அரசுகள் அகதிகளைக் கணக்கிட முயன்றாலும் பழமையான ஆய்வுமுறையில் பல்வேறு தவறுகளும் இடம்பெற்றுள்ளன. ராஃப்டெரி, அவரது முன்னாள் முனைவர் மாணவர் ஜொனாதன் அசோஸ் ஆகியோர் இணைந்து 31 ஐரோப்பிய நாடுகளில் கடைப்பிடிக்கும் அகதிகள் கணக்கெடுப்பு முறையை விட சிறந்த வேகமான புள்ளியியல் முறையைக் கண்டறிந்துள்ளனர்.
"எங்கள் ஆய்வுமுறைப்படி அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு அவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய நாட்டுக்கே திரும்பிச் செல்லும் எண்ணிக்கையும் கூடியுள்ளது. 1994 ஆம் ஆண்டு ருவாண்டாவில் நடைபெற்ற இனப்படுகொலையின்போது வெளியேறிய மக்கள் மூன்றாண்டுகளுக்கு பிறகு அந்நாட்டிற்கே திரும்பினர் என்ற தகவல் பல்வேறு இடங்களில் பதிவாகவில்லை " என்கிறார் ஆய்வாளர் அசோஸ்.
இம்முறையில் 1990-2015 காலகட்டத்தில் இடம்பெயர்ந்த அகதிகளின் எண்ணிக்கை 8.7 கோடி என்றால், தற்போது பல்வேறு நாடுகளில் பயன்படும் அளவீட்டு முறையில் அகதிகளின் எண்ணிக்கை 4.6 கோடி என்று தோராய தகவல் கிடைக்கிறது. தோராயமான அளவீடுகள் மூலம் அகதிகளின் உண்மையான நிலையை கணிப்பது மிக கடினமான ஒன்று.
கருத்துகள்
கருத்துரையிடுக