கரண் மேனன்- அமெரிக்காவில் உருவாகிவரும் தனிக்குரல் கலைஞர்!
கரண் மேனன் |
இந்தியாவில் அப்போது விவசாயிகள் போராட்டம் பற்றிய செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தன. அதைப்பற்றி உலக நாடுகள் பலவும் உடனடியாக எந்த கருத்தும் சொல்லவில்லை. சமூக வலைத்தளங்களிலும் பெரிதாக கருத்துகள் உருவாகவில்லை. அப்போது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த மாணவர் கரண் மேனன், விவசாயிகள் போராட்டம் பற்றி எளிமையாக வீடியோ ஒன்றை உருவாக்கி பதிவிட்டார். இதன்பிறகே பல்வேறு அமெரிக்க பிரபலங்கள் விஷயத்தை விளங்கிக்கொண்டு போராட்டத்திற்கு ஆதரவாக பதிவிடத் தொடங்கினார்.
அதற்கு எதிரான இந்திய பிரபலங்கள் எப்படி சமூகவலைத்தளங்களில் தாக்குதல் நடத்தினார்கள் என்பதை நாளிதழ்களில், சமூக வலைத்தளங்களில் அனைவருமே படித்திருப்பீர்கள். நாம் போராட்டம் பற்றி அதிகம் பேசப்போவதில்லை. கரண் மேனன் பற்றித்தான் பேசப்போகிறோம்.
இவரது அப்பா கேரளத்தைச் சேர்ந்தவர். அம்மா, ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். 1980களில் அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தனர். தற்போது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.
கரணுக்கு, வெப்சீரிஸ் ஒன்றில் எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்தபோதுதான், நோய்த்தொற்று பரவல் அதிகரித்தது. இதனால் அந்த வாய்ப்பு பறிபோனது. கல்லூரியில் படிக்கும்போது காமெடி கிளப்புகளில் சேர்ந்து நிகழ்ச்சிகளில் நடத்தி வந்தவர் என்பதால், அதைவைத்து டிக்டாக்கில் ஏதாவது செய்யலாம் என நினைத்தார். அப்போது விவசாயிகள் போராட்டமும் தொடங்க அதன் அடிப்படையைப் புரிந்துகொண்டு ஒரு நிமிட வீடியோவாக உருவாக்கினார். சாதாரணமாக அவர் உருவாக்கும் வீடியோக்கள் 60 ஆயிரம் பார்வைகளைப் பெறும் என்றால் இந்த வீடியோ இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றது.
அப்போது டிக்டாக் சேவை இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தது. எனவே, இவரது வீடியோ டிவிட்டர், இன்ஸ்டாகிராமில் வழியாக வைரலாக பரவியது. நகைச்சுவையான வீடியோக்களை உருவாக்குவதோடு, களப்போராட்டங்களிலும் கலந்துகொள்வதற்கும் தயாராகவே இருக்கிறார் கரண். இந்த வகையில் கருப்பினத்தவர்கள் நடத்திய பல்வேறு போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார்.
உண்மையில் நான் தயாரித்த வீடியோ அந்தளவு வெற்றி பெறும் என்று நம்பவில்லை. விவசாயிகள் போராட்டம் பற்றிய வீடியோ பலருக்கும் பிடித்திருந்தது என நினைக்கிறேன் என்றார் கரண்.
இதன் வழியாக நகைச்சுவை எழுத்து மீது கரணுக்கு நம்பிக்கை பிறந்திருக்கிறது. பல்வேறு அரசியல் சூழல்கள், விதிகள், காவல்துறையினர் நடந்துகொள்ளும் முறை பற்றி வீடியோக்களை செய்து வருகிறார். பெரும்பாலான வீடியோக்களில் இவரது தம்பி எதிர்மறை நாயகன் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்.
இவரது யூடியூப் வீடியோ லிங்க்
https://www.youtube.com/watch?v=qi89CzBDWqE
லைவ்மின்ட்
கருத்துகள்
கருத்துரையிடுக