கடல் சூழலை ஆராயும் தானியங்கி ஆய்வுப்படகு! - செயில்ட்ரோன்

 





Saildrone | PO.DAAC / JPL / NASA



கடலை ஆராயும் செயில்ட்ரோன் ஆய்வுப்படகு!

கடல் பகுதியை ஆய்வுக்கருவிகள், சாதனங்கள் மூலம் ஆராய்வது மெல்ல வேகம் பிடிக்க த் தொடங்கியுள்ளது. இதனை ஆராய்வதில் கடல் பாதுகாப்பு, இயற்கைவளம் , வணிகம் ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. கடல் போக்குவரத்து, அதிலுள்ள வளங்கள், உயிரினங்கள் ஆகியவற்றைப் பற்றி ஆராய்வது என்பது,  நவீன காலத்திலும் சவாலாக உள்ளது. தற்போது அமெரிக்காவில் செயில்ட்ரோன் எனும் தானியங்கி ஆய்வுப்படகு  உருவாக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் ஆய்வுகளை செய்யமுடியும் என்று கூறுகிறார்கள். இதில் ஆய்வுக்காக யாரும் பயணிக்க வேண்டியதில்லை. 

Extending Ship-Based Surveys in Arctic with Ocean Drones – Saildrone
செயில்ட்ரோன்

72 அடி நீளம் கொண்ட செயில்ட்ரோன், பாய்மரப் படகு போன்ற வடிவிலானது. தானியங்கி முறையில் இயங்க கூடிய செயில்ட்ரோன், தோராயமாக 3,688 மீட்டர் தூரம் கடலை ஆய்வு செய்யும் திறன் கொண்டது. காற்று மற்றும் சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி ஓராண்டிற்கு இடையறாது கடலில் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளலாம். இதில் பொருத்தப்பட்டுள்ள சோனார் கருவியிலிருந்து உருவாகும் ஒலி அலைகளால்  7 ஆயிரம் மீட்டர் தூரம் கடலை அளவிடலாம். செயற்கைக்கோளுடன் இணைப்பிலுள்ள செயில்ட்ரோன் மூலம் பெறப்படும் தகவல்களை அரசும், ஆய்வாளர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனை  15 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து உருவாக்கியுள்ளனர். 

செயில்ட்ரோன் மூலம் தற்போது வரை 20 சதவீத கடலை ஆய்வு செய்துள்ளனர். அரசுடன் இணைந்து நியூ ஹாம்ஷையர் பல்கலைக்கழகம், மான்டெரி பே  அக்வாரியம் ஆராய்ச்சி மையம் ஆகிய இரு நிறுவனங்களும் உருவாக்கிய சென்சார்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம்  கடலிலுள்ள உயிரினங்களின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்படவுள்ளன. இதன்மூலம் கடலில் தோன்றிய உயிரினங்களின் பரிணாமவளர்ச்சியை எளிதாக அளவிடலாம்.  

ஆர்க்டிக் பகுதியிலிருந்து அன்டார்டிக் வரையில் 5 லட்சம் கடல் மைல்களை செயில்ட்ரோன் ஆய்வு செய்துள்ளது. ”கடலை ஆய்வு செய்வதில் செயில்ட்ரோன் முக்கியமான மைல்கல். இம்முயற்சியில் நாம் நமது வாழ்நாட்களுக்குள் பல்வேறு விஷயங்களை ஆய்வில் கண்டுபிடித்துவிட முடியும். இதற்கு செலவிடப்படும் ஆற்றலும் புதுப்பிக்க கூடியது என்பதோடு இதனால் ஏற்படும் கார்பன் பாதிப்பும் குறைவு. கடல் வெப்பநிலை பற்றிய தகவல்களையும் சேகரிக்க முடிவதால், கடலில் ஏற்படும் மாற்றங்களை விரைவாக அறியலாம். மிக குறைந்த செலவில் கடல் பற்றிய ஆய்வுகளை செய்யலாம்.” என்றார் செய்ல்ட்ரோன் நிறுவனத்தின் நிறுவனரும், இயக்குநருமான ரிச்சர்ட் ஜென்கின்ஸ். 

கடல் படுகைகளை அனைத்து நாடுகளும் சரியானபடி அளவிட்டு ஆராய்ந்தால் அவர்களுக்கு தோராயமாக ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும் என பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு அமைப்பு(OECD) கூறியுள்ளது.  செயில்ட்ரோன் நிறுவனத்தின் ஆய்வுகளுக்கு தேசிய கடல் மற்றும் சூழல் நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. தற்போது ஆய்வு செய்வதற்கான இடத்தை நிறுவனத்திலுள்ள குழுவினர் தேர்ந்தெடுத்து வருகின்றனர். எதிர்காலத்தில் இப்பணியை செயில்ட்ரோன் செயற்கை நுண்ணறிவு மூலம் தானே செய்யும் என ரிச்சர்ட் ஜென்கின்ஸ் எதிர்பார்க்கிறார்.  


தகவல்

https://qrgo.page.link/3NWYL

https://qrgo.page.link/D3Yyh


qr code

2




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்