விண்வெளி பயிற்சிகள் எப்படி வழங்கப்படுகின்றன?
விண்வெளி பயிற்சிகள் எப்படி வழங்கப்படுகின்றன?
வானில் மிதந்தபடி சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றுவதை கவனித்திருப்பீர்கள். சாதாரணமாக பூமியில் ஒரு வேலை செய்யும்போதே, பல்வேறு பிரச்னைகள் உண்டு. எப்படி புவியீர்ப்பு விசை இல்லாத இடத்தில் விண்வெளி உடை அணிந்து வேலை செய்கிறார்கள்?
விண்வெளி வீரர்களை இதற்கென தயார் செய்கிறார்கள் என்பதே உண்மை. விண்வெளி மையங்கள், வீரர்களுக்கு பல நூறு மணிநேரங்கள் இதற்காக கடுமையாக பயிற்சியளித்து அவர்களை விண்வெளியில் எச்சூழலையும் சமாளிக்கும்படி தயார் செய்கிறார்கள். இதில் மூன்று பிரிவு உண்டு.
புதிதாக பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் முதலில் ஓராண்டு அடிப்படை பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள். விண்வெளி தொழில்நுட்பம், அறிவியல், மருத்துவத் திறன்கள் மற்றும் சர்வதேச விண்வெளி மையம் குறித்து கற்பது அவசியம். இதோடு ஸ்கூபா டைவிங் குறித்தும் கற்றுக் கொடுப்பார்கள்.
முதல் பகுதி நிறைவு பெற்றபிறகு, அடுத்தாண்டு பயிற்சிகள் இன்னும் தீவிரமாகும். சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள பல்வேறு பகுதிகள் குறித்து பயிற்சியாளர்களுக்கு கற்றுத் தரப்படும். விண்கலங்களில் பயணிப்பது குறித்த பயிற்சிகளோடு, புவியீர்ப்பு விசைகளைச் சமாளிப்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.
பின்னர், எடையற்ற புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில் பணியாற்றுவது பற்றிய பயிற்சிகள் தொடங்கும். இதில் இதர குழு உறுப்பினர்களோடு இணைந்து பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். ரஷ்யா, கனடா, அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஒன்றாகச் சேர்ந்து பயிற்சிகளை மேற்கொள்வர். இதன்மூலம், பல்வேறு மொழிகளை இப்பயிற்சியில் வீரர்கள் கற்றுக்கொள்வார்கள்.
விண்வெளி வீரர் ஆக விருப்பமா?
விண்வெளியில் எந்த உதவியுமின்றி பறக்க சூப்பர்மேன் போல நமக்கு சக்தி கிடையாது. ஆனால் சற்றே அறிவியலின் துணையை நாடினால், நீங்கள் விண்வெளியில் பறக்க முடியும். அமெரிக்காவின் நாசா, ஐரோப்பாவின் இஎஸ்ஏ விண்வெளி நிறுவனங்களில் பல்வேறு நாட்டு விண்வெளி வீரர்கள் இடம்பிடித்து உள்ளனர்.
இந்த தகுதியை எப்படி எட்டிப்பிடிப்பது? பல்லாண்டுகள் இதற்காகவே அறிவியல் நூல்களைப் படிக்கவேண்டும். இதனை உங்களுடைய பயிற்சிகள் தொடங்கும் முன்பே செய்யவேண்டும். பெரும்பாலான விண்வெளி வீரர்கள் 27 முதல் 37 வயது வரையானவர்கள்.
அறிவியல் நூல்களைப் படிக்க வேண்டும் என்று கூறினாம் அல்லவா? பல்கலைக்கழகத்தில் அல்லது கல்லூரியில் பொறியியல் படிப்பு ஒன்றை முடித்திருக்க வேண்டும். கூடுதலாக விமானத்தை இயக்கும் திறனைப் பெற்றிருந்தால் நீங்கள் விண்வெளி வீரராகும் தகுதி கூடும். பெரும்பாலும் வீரர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருவதால், அவர்கள் ஆங்கிலம் அல்லது ரஷ்யமொழி பேசுவார்கள். எனவே இம்மொழியை முடிந்தளவு கற்றுக்கொள்வது நல்லது.
பயிற்சியை வெற்றிகரமாக முடிக்க அசாதாரண மனபலமும், ஆரோக்கியமான தாக்குப்பிடிக்கும் சக்தி கொண்ட உடலும் தேவை. விண்கலத்தில் மிகச்சிறிய இடத்தில் பணியாற்றும் அவசியம் உள்ளதால், பயிற்சி பெறும் நண்பர்களிடத்தில் நல்ல தகவல் தொடர்பு இருப்பது அவசியம். இத்தனைக்கும் நீங்கள் ஓகே சொன்னால் தாராளமாக விண்வெளி பயிற்சிக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக