உலகமயமாக்கலால் காணாமல் போகும் தாய்மொழி! - தேசியமயமாக்கலால் எழும் ஆபத்து

 



Image result for தமிழ்

1952ஆம் ஆண்டு  பாகிஸ்தானின் கிழக்குப்பகுதியில் உள்ள மக்கள் உருது மொழியைத் திணிப்பதற்கு எதிராக கிளர்ந்து எழுந்தனர். அதுதான் தாய்மொழிகள் தினமாக பிப்ரவரி 21ஆம் தேதியைக் கொண்டாடுவதற்கு காரணம். 

பிற நாடுகளில் தாய்மொழிகளைப் பயில்வதற்கான ஆர்வம் குறைந்துவருகிறது.  ஜெர்மனியில் உள்ள  ஹெய்டல் பல்கலைக்கழகத்தில் கூட வங்காள மொழியைக் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை பத்தைக் கடக்கவில்லை. வங்காள மொழி, தமிழ், இந்தி, உருது  உள்ளிட்ட மொழிகளைக் கூட  படிக்க பல்வேறு வெளிநாடுகளில் மாணவர்கள் குறைவாகவே உள்ளனர். மேலும் இந்தியா முழுவதும் புகழ்பெற்ற வங்காளமொழி இலக்கியங்களுக்கு  மெல்ல மவுசு குறைந்துவருகிறது. மேற்குவங்காளத்தில் 53 சதவீத இந்தி பேசும் மக்கள் உள்ளனர். அங்குள்ள கடைகளில் இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளையே பயன்படுத்துகின்றனர். இதனால் இயல்பாகவே வங்காள மொழியின் பயன்பாடு மெல்லக் குறைந்து வருகிறது. 

வங்காளிகள் எங்கு சென்றாலும் மொழியை கைவிடுகிறவர்களில்லை. இங்கிலாந்தில் கூட வானொலி, பத்திரிகை என சிறப்பாக தொடங்கி இயங்கி வருகிறார்கள். மேலும் இங்கு புத்தகத் திருவிழாவும் கூட நடைபெற்று வருகிறது. ஆனாலும் கூட பயன்பாடு என்று வரும்போது தாய்மொழியின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது. எனவே, பலரும் வேலைவாய்ப்புக்கு ஏற்ற மொழிகளைத் தேர்ந்தெடுத்து கற்றுவருகிறார்கள். ஸ்வீடன், நார்வே ஆகிய வெளிநாடுகளிலும் கூட பல்வேறு இனத்தவர்கள் வாழ்கின்றனர். எனவே இவர்களுக்கு தொடக்கப்பள்ளி அளவில் தாய்மொழியைக் கற்பிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

தாய்மொழி தினத்தை யுனெஸ்கோ அமைப்பு 1999ஆம்  ஆண்டு அங்கீகரித்தது. இதன் பொருள், தாய்மொழிகளை அனைவரும் போற்றி வளர்க்கவேண்டும் என்பதே. உலகமயமாக்கல் காரணமாக தினசரி 1500 தாய்மொழிகள் அழிந்துவருகின்றன என்பதை ஆய்வுப்பூர்வமாக யுனெஸ்கோ அமைப்பு சொல்லியுள்ளது. மொழியைக் காப்பாற்றுவதற்கான முயற்சியை மக்கள் ஒவ்வொருவரும் எடுக்கவேண்டும். இதில் தனிநபர்களை குறை சொல்வதில் அர்த்தமில்லை. ஒரே நாடு ஒரே கலாசாரம் எனும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும்போது, மொழியைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் குறிப்பிட்ட மாநில அரசு மற்றும் மக்களைச் சேர்ந்தது. இதனைக் கவனத்தில் கொள்ளாதபோது நேபாளத்தில் ஏற்பட்டுள்ள நிலைக்கு நாமும் தள்ளப்படுவோம். அங்கு மகேந்திரா என்ற மன்னர் தேசியமாக்கல் என்ற நடவடிக்கையில் நேபாளி மொழியை மட்டும் கற்க நடவடிக்கை எடுத்தார். இதன் காரணமாக அங்குள்ள 129 மொழிகளும் ஆபத்தில் வீழ்ந்தன. தற்போது 24 மொழிகள் அழிவின் விளிம்பில் உள்ளன. 


மொழி என்பது அறிவைக் கொண்டுள்ள தொன்மை பொக்கிஷம். இதனை மக்கள் இழக்கும்போது, அது குறிப்பிட்ட இனத்தவருக்கான இழப்பு அல்ல. உலகிற்கான இழப்பு. 


இந்தியன் எக்ஸ்பிரஸ்

தாட் ஹெய்டர்



 








கருத்துகள்