கொரோனாவால் குரலை இழந்தேன்!
கொரோனாவால் குரலை இழந்தேன்!
இங்கிலாந்தைச் சேர்ந்த கானர் ரீட் (Connor Reed) கொரோனா வைரஸ் தாக்கி மீண்டுள்ளார். கடந்த ஆண்டு சீனாவில் பணியாற்றியவர், வைரஸால் தாக்கப்பட்டு உயிர்மீண்டதே மறுபிறப்பு போலத்தான்.
இங்கிலாந்தின் நார்த்வேல்ஸ் பகுதியிலுள்ள லாலன்டுட்னோவைச் சேர்ந்த கானர் ரீட். இவர் சீனாவிலுள்ள வூஹானில் உள்ள பள்ளியொன்றில் பணியாற்றி வந்தார். 2019 நவம்பர் 25 அன்று, சளித் தொந்தரவால் பாதிக்கப்பட்டார். முதலில் அதனை அவர் சாதாரணமாக எடுத்துக்கொண்டார்.
ஏழு நாளில் சளி, மூக்கடைப்பு சரியாகிவிடும் என்று தன் தினசரி வேலைகளை செய்து வந்திருக்கிறார். ஆனால் , திடீரென ஒருநாள் காலையில் அவரால் படுக்கையிலிருந்து எழமுடியவில்லை. உடல்வலியோடு, இடைவிடாத இருமல் தொல்லை வேறு. பல்வேறு கைவைத்தியங்களை செய்தும் பயனில்லை.
“ நுரையீரல் பாதிக்கப்பட்டதால் எனக்கு மூச்சுவிடுதல் சிரமமாகி வந்தது. முழுக்க குரலை இழந்து விட்டிருந்தேன். பேச முயற்சித்தால் கர், புர் என்ற ஒலிதான் வந்தது” என்றார் கானர். உடல்நிலை தேறாததால் உடனே அங்குள்ள மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு எடுக்கப்பட்ட பல்வேறு சோதனைகளின் அடிப்படையில் அவருக்கு நிம்மோனியா வந்திருப்பது உறுதியானது. சில நாட்களுக்குப் பிறகே மருத்துவர்கள் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதைக் கண்டறிந்தனர். இதனால் கானருக்கு சிகிச்சைகள் தீவிரமாக அளிக்கப்பட்டன.
பாதிப்பு சற்று குறைந்தவுடன் பள்ளிக்குச் செல்ல நினைத்தார். ஆனால் வைரஸ் தொற்று பிறருக்கும் பரவும் என மருத்துவர் அறிவுறுத்தியதால் அந்த எண்ணத்தை கைவிட்டார். அப்போதே அரசு கொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்த தொடங்கியது. அடுத்த சில வாரங்களிலேயே ஒரு வீட்டிலிருந்து மூன்று நாட்களுக்கு ஒருவர் வெளியே வரலாம் என அரசு கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கிவிட்டது. வைரஸ் பீதியால் நிறைய கடைகள் அடைக்கப்பட்டுவிட்டன. அதோடு, திறந்திருந்த கடைகளிலும் நேரடியாக கைகளால் பொருட்களை கடைக்காரர்கள் வழங்காமல் நீண்ட கழிகளைப் பயன்படுத்தியுள்ளனர். மருத்துவமனையில் மருத்துவர்கள் சரியான சிகிச்சைகளை அளித்ததன் விளைவாக கானர் ரீட் விரைவில் குணமாகிவிட்டார்.
ஆதாரம்:
https://news.sky.com/story/fighting-coronavirus-one-of-the-first-british-sufferers-describes-his-ordeal-11950631
கருத்துகள்
கருத்துரையிடுக