ராயல் சொசைட்டில் இந்தியப்பெண்!
ராயல் சொசைட்டில் இந்தியப்பெண்!
இங்கிலாந்தின் லண்டனிலுள்ள ராயல் சொசைட்டியில் முதல்முறையாக இந்தியப் பெண் ஒருவர் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார்.
நானூறு ஆண்டுகள் பழமையான ராயல் சொசைட்டிக்கு அண்மையில் 51 புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் பத்து நபர்கள் வெளிநாட்டினராகவும், ஒருவர் கௌரவ உறுப்பினராகவும் இருப்பார்.
சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின்(THSTI) இயக்குநராக பணியாற்றி வரும் டாக்டர் ககன்தீப், ராயல் சொசைட்டியில் இடம்பெற்று சாதனை புரிந்துள்ளார். இந்தியாவில் தடுப்பூசி திட்டத்தின் மேம்பாட்டிற்காக உழைத்து, பயிற்சி திட்டங்களை உருவாக்கியது இவரின் தேர்விற்கான காரணமாகக் கூறப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க ரோட்டா வைரஸ் மற்றும் டைபாய்டு காய்ச்சலுக்கு எதிரான செயல்பாடுகளை செய்தவர் ககன்தீப். இதற்கான ஆய்வக வசதிகளை உலக சுகாதார நிறுவனம் செய்துகொடுத்தது. இவரின் ஆராய்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளால் இந்தியா மட்டுமல்லாது, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளிலும் தடுப்பூசி முயற்சிகள் முன்னேற்றம் அடைந்தன.
CHIM( Controlled Human Infection Model) எனும் முறையில் நோய்க்கிருமிகளை உடலில் செலுத்தி சோதிக்கும் முறையை இந்தியாவில் பிரபலப்படுத்தியவர் இவரே. தன்னார்வலர்களின் உதவியுடன் நடைபெறும் இச்சோதனை உலகளவில் ஒரு சதவீதமே ஆகும். கடந்த எழுபது ஆண்டுகளில் அமெரிக்கா, ஐரோப்பாவில் ஆயிரம் சிம் (CHIM) பரிசோதனைகள் மட்டுமே நடைபெற்றுள்ளன.
பரிசோதனை முறை பற்றி கூறுங்கள்.
தன்னார்வலர் ஒருவருக்கு கண்காணிப்பு நிலையில் நோய்க்கிருமிகளை உடலில் செலுத்தி, அதன் பாதிப்புகளை ஆய்வு செய்வதே சிம் (CHIM) முறையின் நோக்கம். இந்த சிகிச்சை முறையில் நோய்க்கிருமிகளை உடலில் செலுத்தி 14 நாட்கள் கண்காணிப்பார்கள். இதில் பல்வேறு வேறுபட்ட முறைகள் உண்டு. அமெரிக்காவில் தன்னார்வலர்களுக்கு இன்ஃப்ளூயன்சா வைரஸை மூக்கு வழியாகச் செலுத்துவார்கள். நுரையீரலை அடையும் முன்பே இதனை தடுத்து நோயின் அறிகுறிகளை மருத்துவர்கள் அளவிடுவார்கள்.
சிம் சோதனைகள் தடுப்பூசி மேம்பாடு தவிர வேறு எதற்கு பயன்படுகின்றன?
சிம் சோதனைகள், தடுப்பூசிகள் உருவாக்க மட்டும் பயன்படுவதில்லை. சில சோதனைகள் நோயின் தன்மையை அறியவும் பயன்படுகின்றன.
மருந்துகளை மேம்படுத்த இன்று பயன்படுத்தப்படும் மருத்துவ முறை என்ன?
விலங்குகளை வைத்து மருந்துகளை சோதிப்பது நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. ஆனால் இம்முறை துல்லியமானது அல்ல. எனவே மருந்துகளை மேம்படுத்த மனிதர்களை சோதனைக்குப் பயன்படுத்துவது அதிகரித்துவருகிறது. இதன்விளைவாக, மூன்று கட்டங்களாக அதிகளவு மனிதர்களை மருத்துவச்சோதனைக்கு பயன்படுத்துகின்றனர்.
சிம் சோதனைக்கு உட்படுபவர்களின் பெயர்களை வெளிப்படையாக அறிவிப்பது சாத்தியமாகுமா?
உலக சுகாதார நிறுவனம், சோதனைக்கு உட்படுபவர்களின் பெயர்களை வெளியிடலாம் என்று கூறியுள்ளது. உலக நாடுகள் மற்றும் இந்தியாவிலும் சிம் சோதனைகளில் வெளிப்படைத்தன்மை பேணப்படுவது உறுதி.
நன்றி: தி வீக், ஸ்க்ரோல்.இன்
கருத்துகள்
கருத்துரையிடுக