இளம் செயல்பாட்டாளர்களை சட்டங்கள் மூலம் அச்சுறுத்தும் மத்திய அரசு!

 

 

 

 

Court permits Disha Ravi to get warm clothes, books, copy ...

 

 

 

 

இளம் செயல்பாட்டாளர்களைத் தடுக்கிறதா இந்தியா?


பிரைடே பார் ப்யூச்சர் எனும் கிரேட்டா துன்பெர்க் தொடங்கிய சூழல் அமைப்பை இந்தியாவில் பெங்களூருவில் தொடங்கியவர், திஸா ரவி. தற்போது டூல்கிட் விவகாரத்தில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை கைது செய்வதற்கான டெல்லி போலீசார் பெட்ரோல், டீசல் விலையையும் பொருட்படுத்தாமல் பெங்களூருவுக்கே சென்று திஸாவை கைது செய்துள்ளனர். அப்படியேன்ன தவறை அவர் செய்தார்?

விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து டூல்கிட் எனும் போராட்ட முறைகளில் சில மாறுதல்களை செய்தார். வாட்ஸ் அப்பில் அதனை பகிர்ந்தார் என்பதுதான் குற்றச்சாட்டு . போராடுவதற்கு என்ன பிரச்னை? அதைக்கூட புதிய இந்தியா ஒருவருக்கு அனுமதி தராதா என்ற கேள்வி இக்கைது மூலம் எழுந்துள்ளது. இதன்மூலம் மத்திய அரசின் உளவுத்துறை வெளிப்படையாக சூழல் செயல்பாட்டாளர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை பெரியளவு பாதிப்பை ஏற்படுத்துள்ளளது. மக்களுக்காக போராடினால் உங்களுக்கும் இந்த நிலைமைதான் என்பதால் திஸா ரவியுடன் தொடர்புடைய நண்பர்கள் அனைவருமே பீதியில் ஆழ்ந்துள்ளனர்.


ஜோத்பூரைச் சேர்ந்தவர் கிரித்தி பார்தி. இவர் குழந்தைகளின் உரிமைகளுக்காக போராடி வருகிறார். குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்தி ஊரெங்கும் ஏராளமான எதிர்ப்பைப் பெற்றுள்ளார். இப்படி இவருக்கு வரும் எதிர்ப்புகள் எப்படியென்றால், கொலை செய்துவிடுவோம், வல்லுறவு செய்துவிடுவோம் என்ற ரீதியில்தான் உள்ளது. ஆனாலும் பார்தி எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. இறப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதற்குள் பத்து குழந்தை திருமணங்களை தடுத்தால் போதும் என்கிறார். ஒருமுறை டிவி விவாதத்தின்போது குழந்தை திருமணம் பற்றிய இவரது செயல்பாட்டிற்கு எம்எல்ஏ ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து பாதியிலேயே எழுந்து சென்றிருக்கிறார் என்றால் எதிர்ப்பு எந்தளவில் அவருக்கு உள்ளது என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ளலாம். இதுவரை தனது குழந்தைகள் உரிமைக்கான போராட்டத்தில் 41 திருமணங்களை நேரடியாக தடுத்து நிறுத்தியுள்ளார். சமூகத்திற்கென போராட களமிறங்கி விட்டால் உயிரை பிறருக்காக அர்ப்பணித்துவிடவேண்டியதுதான். வேறுவழியில்லை. சமூக செயல்பாட்டாளர்களுக்கு வரும் எச்சரிக்கை, மிரட்டல்கள், குடும்பத்தினர் சந்திக்கும் அச்சுறுத்தல்களை சொல்லி மாளாது. உங்கள் விருப்பத்திற்கு சமூகத்திற்கான பணிகளை செய்யவேண்டுமானால் இரும்பினாலான முதுகெலும்பை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். என்பதுதான் உண்மை.

சிறை, வழக்கு என்பதை பெற்றோர்கள் நன்றாக புரிந்துகொண்டிருக்கிறார்கள் இதனால் சமூகப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் தங்கள் பிள்ளைகளை படிப்பில் மட்டும் கவனப்படுத்த வழிகாட்டி வருகின்றனர். ஆனால் அனைவரும் இதுபோல ஒதுங்கிச் செல்லவில்லை. ராஜ்வீர் என்பவரின் தங்கை தலித் உரிமைகளுக்காக பாடுபடுபவர். இவரின் தங்கை கடந்த மாதம்தான் போராட்டம் நடத்தியதற்காக காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜ்வீர் தங்கையின் போராட்டத்திற்கு ஆதரவாகவே இருக்கிறார். இவர்களது குடும்பத்தினரின் தைரியத்திற்கு இவர்களது அம்மாவே காரணம். 2013-14ஆம் ஆண்டு இவர்களது கிராமத்துப் பெண் ஒருவர் வல்லுறவு செய்யப்பட்டுள்ளார். அந்த பெண்ணுக்கு அநீதி இழைத்தவர்களை கிராமத்தினர் கிராமத்தில் அடைக்கலம் கொடுத்துள்ளனர்.இதனை தட்டிக்கேட்ட இவர்களது குடும்பத்தை வேறு இடம் போக சொல்லி குடும்பத்தினர் மிரட்டியுள்ளனர். அதற்கு எல்லாம் இவர்கள் பயப்படவில்லை. சிறிதுகாலம் தெலங்கானா மாநிலம் சென்று தங்கிவிட்டு பின்னர் அங்கு வந்துவிட்டனர். ஆனால் போராடும் குணத்தை எப்போதும் கைவிடவில்லை. ராஜ்வீரின் தங்கை டெல்லி பல்கலைக்கழகத்தின் பகத்சிங் மாணவர் யூனியன் தலைவராக உள்ளார். சிறையிலிருந்தபடியே வெளியே வந்தவுடன் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்வதாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார் என்கிறார் ராஜ்வீர். ஜாதிரீதியாகவும் பாகுபாடுகள் இங்கு உண்டு. வேறுவழியே இல்லை. போராடித்தான் ஆகவேண்டும். அதற்கு எங்கள் பயமே கிடையாது என்கிறார்.

கபீர் கலா மஞ்ச் என்ற அமைப்பு இசைப்பாடல்கள் வழியாக ஜனநாயகம், ஜாதிக்கு எதிரான செய்திகளை பரப்பி வருகிறது. ரூபாலி ஜாதவ் இக்குழுவைச் சேர்ந்தவர். நீங்கள் எதற்கும் பயப்படக்கூடாது. அப்போதுதான் எதிராளி முன் நிற்கமுடியும் என்கிறார். இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் புனேவில் எஃப்டிஐஐயில் நிகழ்ச்சி நடத்தும்போது வலதுசாரி மாணவர்கள் குழுவால் தாக்கப்பட்டுள்ளனர். ஜோதி ஜெகதாப், சாகர் கோர்கே, ரமேஷ் கைச்சோர் ஆகிய மூவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசின் அச்சுறுத்தலால் ரூபாலி குழுவினரின் 13 நிகழ்ச்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. வலதுசாரி குழுவினரின் அச்சுறுத்தலால் நிகழ்ச்சி நடத்துபவர்கள் பின்வாங்கிய நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடந்தன. மேலும் ரூபாலிக்கு வேலை கிடைப்பதும் சிக்கலாக தொண்டு நிறுவனம் ஒன்று அவருக்கு உதவியுள்ளது. தற்போது டீஷர்ட்டுகளை வாங்கி அதில் புரட்சிகர வாசகங்களை அச்சிட்டு விற்றுவருகிறார். தேசப்பாதுகாப்பு சட்டத்தில் அரசு இவரை கைது செய்ய நினைத்தும் அதற்கான ஆதாரங்களை அவர்கள் இன்னும் உருவாக்கவில்லை. இதன் காரணமாக விரைவில் ரூபாலி சிறையில் தள்ளப்படவும் வாய்ப்பு உள்ளது.


நில உரிமைகளுக்கான போராட்டங்களை செய்துவரும் சப்னம் ஷா, நேரடியாகவே பல்வேறு தாக்குதல்களை சந்தித்துள்ளார். மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள எம்ஏல்ஏ ஒருவர், தனது அடியாட்களிடம் நீ போகும் இடத்தில் சப்னமை பார்த்தால் உடனே துப்பாக்கியால் சுட்டுவிடு என்று கூட உத்தரவிட்டுள்ளார். ஆனால் சப்னம் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. மிரட்டுபவர்கள் மிரட்டிவிட்டு போகட்டும். அவர்கள் அந்தளவு துணிச்சல் கொண்டவர்களில்லை என்கிறார். ஆனால் சப்னமின் குடும்பத்தினர் அந்தளவு தைரியம் கொண்டவர்கள் அல்ல என்பதால் இதையெல்லாம் விட்டுவிடு என சப்னமிடம் சொல்லி வருகிறார்கள். நாம் ஆயுதங்களோடு சண்டை போடவில்லை. சட்டத்துடன் போராடி வருகிறோம். நீங்கள் வெல்ல வேண்டுமென்றால் போராடித்தான் ஆகவேண்டும் என்றார் ஏக்தா பரிஷத் செயல்பாட்டாளர் நிர்மலா குஜூர்.

ஆனால் அனைவரும் இதேபோல இழப்பதற்கு ஒன்றுமில்லை என துணிச்சலாக இல்லை. காரணம், அரசு உருவாக்கும் பல்வேறு தேசவிரோத சட்டங்கள் மற்றும் கைது நடவடிக்கை பலரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது உண்மை.,


சோனம் ஜோஷி - கேட்டகி தேசாய்

டைம்ஸ் ஆப் இந்தியா



கருத்துகள்