கோவிட் 19 பாதிப்பைக் கட்டுப்படுத்த எந்த மருந்தும் கிடையாது!







மருத்துவர் முத்து செல்ல குமார்.

 




கோவிட் 19 பாதிப்பைக் கட்டுப்படுத்த எந்த மருந்தும் கிடையாது!


இன்று கோவிட் 19 நோய் பாதிப்பு பல நாட்டு மக்களுக்கும்  வேகமாக பரவி,  உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட நோயாளிகளைத்  தனிமைப்படுத்தி கண்காணித்து சிகிச்சைகளை வழங்கும் பணிகளை உலக நாடுகள்  செய்யத் தொடங்கி வருகின்றன. வைரஸ் பாதிப்பு, அதன் சோதனைகள், சூழல் ஆகியவற்றைப் பற்றிய பல்வேறு வதந்திகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதுபற்றி மருத்துவரும், பேராசிரியருமான முத்து செல்ல குமாரிடம் பேசினோம். 


"கோவிட் - 19 நோய் பாதிப்பு உருவாக்கும் வைரஸிற்கு சார்ஸ் கோவி 2 (SARS Cov2) என பெயரிட்டுள்ளனர். இந்த வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் ஆல்பா, காமா, பீட்டா, டெல்டா என பிரித்து வகைப்படுத்தியுள்ளனர்.  இவற்றின் புரத அமைப்பு, செயல்பாடு பொறுத்து வகைப்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் உறுதிப்படுத்தும் சோதனை இருமுறை செய்யப்படுகிறது.  இரண்டாம் முறை செய்யும் சோதனையில்,  வைரஸ் தொற்றை உறுதிப்படுத்துவார்கள். பெரும்பாலும் இதில் தவறு நேருவதில்லை. 


வைரஸ்களை முற்றிலும் ஒழிக்கவென பொதுவாக எந்த மருந்துகளும் கிடையாது. அதனை அழிக்க, உற்பத்தியைத்  தடுக்க  மருந்துகள் கிடையாது.  தமிழகத்தில் வழங்கப்படும்  பப்பாளிச்சாறு, நிலவேம்பு குடிநீர் என்பதெல்லாம் வைரஸை முழுமையாக அழிக்காது. நவீன மருத்துவமுறையான அலோபதியிலும் இதற்கு மருந்துகள் கிடையாது. காரணம்,  கொரோனா வைரஸ் தன் செயற்பாட்டையும், அமைப்பையும்  மாற்றிக்கொண்டே இருக்கிறது. இதற்கு தற்போது தடுப்பு மருந்துகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர்.


பொதுவான கொரோனா வைரஸ் என்பது சளி, லேசான காய்ச்சலை மட்டுமே உருவாக்கும். இப்போதுள்ள கொரோனா வைரஸ், சார்ஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. சார்ஸ் நோய் சீனாவில்தான் உருவாகி பரவியது. எட்டாயிரம் பேரை பாதித்து 774 பேர்களை பலிகொண்டது. கொரோனா வைரஸ் சார்ஸ் வைரஸின் அமைப்பை ஒத்திருக்கிறது. இதனை பீட்டா வைரஸ் என வகைப்படுத்துகிறார்கள். உலக நாடுகள் தம் நாடுகளில் ஏற்பட்ட வைரஸ் பாதிப்பைக் கண்டறிந்து அதன் மாதிரிகளை உலக சுகாதார நிறுவனத்திற்கு அனுப்பித் தருவார்கள். இதன் அடிப்படையில்தான் அதன் பாதிப்பை, மரபணு மாற்றங்களை கண்டறிகிறார்கள். இந்நோய்க்கான தடுப்பு மருந்துகள் இம்முறையில் தயாரிக்கப்பட வாய்ப்பு உள்ளது. 


கொரோனா வைரஸ் விபத்தாக மனிதர்களுக்குத் தொற்றுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக வெறிநாய்க்கடியைச் சொல்லலாம். வௌவால் மூலம்தான் வெறிநாய்க்கடியும் பரவுகிறது. வௌவால் வாழ்கின்ற குகைகளுக்கு செல்கின்றவர்களுக்குப்  பரவி நகரங்களில் உள்ள மக்களுக்கும் தொற்றி பரவலாகிறது. 

வௌவால்களின் உடலில் எழுபதுக்கும் மேற்பட்ட நுண்ணுயிரிகள் இருக்கும். 


நோய் பாதிப்பைக் கண்டறியும்  சோதனைகள் எளிமையானவை. இதற்கு நோயாளிகளின் சளியை எடுத்து சோதித்தாலே போதும். கூடுதலாக ரத்த மாதிரிகளை எடுத்து எலிசா சோதனை செய்தும் கண்டறியலாம். வைரஸ்களின் உடலிலுள்ள புரதங்களை எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் மூலம் கண்டறியலாம். இதிலுள்ள புரதங்களின்  அமைப்பை மையமாகக் கொண்டே பெயரிடுகிறார்கள். கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதம் மூலமே அதற்கு கொரோனா என பெயர் வைக்கப்பட்டது.  


வைரஸ்கள் உடலைத் தாக்கும்போது, உடலில் நோய் எதிர்ப்புத் திறன் உருவாகும். வெள்ளையணுக்களும், உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பும் உடலில் நுழையும் நோய்களை எதிர்த்து போராடும். இவற்றால் எதிர்க்க முடியாத அளவில் வைரஸ்கள் பல்கிப் பெருகும்போது காய்ச்சல், உடல் வலி ஆகியவை உண்டாகிறது. இவற்றை முழுமையாக உடலை விட்டு வெளியேற்றுவதை உறுதிசெய்ய எந்த சோதனைகளும் கிடையாது. நோய் எதிர்ப்புத்திறன் வலுவாகும்போது, வைரஸ்களின் செயல்பாடு முடங்கிவிடும்" என்றார் மருத்துவர் முத்து செல்ல குமார்.

 






 

கருத்துகள்