ஜாலிப்பக்கம் - சிரித்து இறந்துபோன ஸ்பெயின் மன்னர்! - சிரிப்பே சிறப்பு!
சிரித்தால் சிறப்பு!
சிரிப்பு என்பது வாழ்க்கையின் அழுத்தங்களை குறைக்க உதவுகிறது. ஆனால் அதுவே ஓவர் டோஸாக போனால் என்னாகும் என்பதற்கு கீழேயுள்ள மனிதர்கள்தான் எடுத்துக்காட்டு.
சண்டையும் காமெடிதான்!
1975 ஆம் ஆண்டு அலெக்ஸ் மிட்செல், பிரிட்டிஷ் காமெடி நிகழ்ச்சியான தி குடிஸ்(The goodies) பார்த்துக் கொண்டிருந்தார். ஸ்நாக்ஸை பரவசமாக தின்றுகொண்டே பார்த்தவருக்கு, அதில் வரும் சண்டைப் பயிற்சிக் காட்சிகளைப் பார்த்ததும் கொல்லென்று சிரிப்பு வந்தது.
வாயைப் பொத்தி, உதடுகளை மூடி ... ம்ஹூம் நான்ஸ்டாப் சிரிப்பில் காப்பாத்துங்க என்றுகூட சொல்லமுடியால் மாரடைப்பில் இறந்துபோனார். மரபுவழியாக க்யூடி(Qt Syndrome) பாதிப்பு கொண்டவருக்கு சிரிப்பு அட்ரினல் சுரப்பைத் தூண்டி இறப்பை ஏற்படுத்தியுள்ளது பின்னர் தெரிய வந்தது. அவரது மனைவி, என் கணவர் இறக்கும்போது மகிழ்ச்சியாக இருந்தார். அதுவே எனக்கு போதும் என்று பேட்டி தட்டினார்.
நிற்காத சிரிப்பு
1792 ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த திருமதி ஃபிட்ஸெர்பெர்ட், ட்ரூரி லேன் எனுமிடத்திற்குச் சென்றார். அங்கு நடைபெற்ற இசைநாடகத்தை ஆசையாகப் பார்த்தார். நாடகத்தின் ஒரு காட்சியில் லயித்தவர் சிரித்தார். மீண்டும், மீண்டும் சிரித்தார்.. ஆனால் அவரது சிரிப்பு நீள, நாடகக்குழு நம்மை கிண்டல் செய்து சிரிக்கிறாரோ என நினைத்து அவரை வெளியே தள்ளி நாடகத்தைத் தொடர்ந்தனர். நரம்புதளர்ச்சி காரணமாக இப்படி ஏற்பட்டது என தகவல் சொல்லுகிறது ஆங்கில இதழ் ஒன்று. இறுதியில் சிரித்தே உயிரிழந்தவரை காப்பாற்ற முடியவில்லை.
கலகல ன்னு சிரிப்பு!
1893 ஆம் ஆண்டு, வெஸ்லி பார்சன் தன் நண்பர்களோடு ஜாலி பார்ட்டிக்குச் சென்றார். இந்தியானா பகுதியைச் சேர்ந்த விவசாயி இவர். தன்னை முதியவர் என்று கூறி அறிமுகப்படுத்திக்கொண்ட வெஸ்லி, தன் நண்பர்களோடு ஜோக் ஒன்றை பகிர்ந்தார். அதற்கு சிரித்தவர் நிறுத்தவேயில்லை. இறுதியில் இருமி கீழே விழுந்து பரலோகம் போய் சேர்ந்தார். ஆனால் இறப்பை பதிவு செய்தவர்கள், அப்படி என்ன ஜோக் அது என்று கூறவில்லை.
செரிக்கமுடியாத சிரிப்பு!
ஸ்பெயின் மன்னர் மார்ட்டின் ஆஃப் அரகோன், அப்போதுதான் வாத்து ஒன்றை முழுதாக தின்று ஏப்பம் விட்டார். மெல்ல படுக்கைக்கு நடந்து வந்தவர், வயிறு கனமாயிருப்பதை உணர்ந்தார். அப்போது அவரது அரசு உளவாளி, திராட்சைத் தோட்டத்தில் மான் ஒன்று மரக்கிளைகளில் சிக்கிக் கொண்ட செய்தியைச் சொன்னார். அதில் என்ன வினோதத்தைக் கண்டாரோ. அரசர் மானை நினைத்து வயிற்றுப் பொருமலை மீறி சிரித்து..சிரித்து இறுதியில் தரையில் விழுந்து இறந்தே போய்விட்டார்.
-ச.அன்பரசு
கருத்துகள்
கருத்துரையிடுக