ஜாலி திருவிழாக்கள்! - கால்களால் போட்டியாளரின் காலைத் தோற்கடித்தால் வின்னர்!

 Crowd, Dance, Party, People, People Dancing, Disco




வீடு, ஆபீஸ் என உழைத்தாலும் கிடைக்கும் நேரத்தில் வாழ்க்கையை அனுபவிக்க கற்றுத்தருபவை திருவிழாக்கள்தான். உறவுகள்,நட்புகள் ஒன்றுசேர்வதோடு, ஆடியும் பாடியும் மகிழ்ந்து விடுமுறையைக் கொண்டாடுவது உடலுக்கும் மனதையும் உற்சாக டானிக்.  அப்படிப்பட்ட சில வினோத விழாக்களில் சில.  

லா டொமாட்டினோ (ஸ்பெயின்)

ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் தக்காளித் திருவிழாவை உலகமே இன்று கவனிக்கத் தொடங்கிவிட்டது. வாலென்சியா அருகிலுள்ள புனோல் கிராமத்தில் தக்காளி கொண்டு வந்து குவிக்கப்படுகிறது. உடனே பாய்ந்து தக்காளியைக் கையில் எடுக்கும் மக்கள், ஒருவருக்கொருவர் வீசி எறிந்து விளையாடுவார்கள். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இதற்காகவே ஸ்பெயினில் குவிகிறார்கள். ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் கடைசி புதன் கிழமை தொடங்கும் இவ்விழா பெரும் புகழ்பெற்றது. 

பர்னிங் மேன் (அமெரிக்கா)

அமெரிக்காவின் ரெனோ நகருக்கு அருகிலுள்ள பாலைவனத்தில் பர்னிங் மேன் திருவிழா நடைபெறுகிறது. இருவாரங்கள் நடைபெறும் திருவிழாவுக்கு உலக நாடுகளிலிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள்  குவிகின்றனர்.  இதில் பல்வேறு கலைஞர்கள், புதுமையான கலைப் படைப்புகளை உருவாக்கி காட்சிக்கு வைக்கின்றனர். இறுதியில் அனைத்தும் நெருப்பிட்டு எரிக்கப்படுகிறது. இதில் முக்கியமானது, மனித உருவிலான உருவம் தீயிட்டு எரிக்கப்படுவதே. 

செங் சாவ் (Cheung Chau) பன் திருவிழா (ஹாங்காங்)

ஹாங்காங்கின் செங் சாவ் தீவில் நடைபெறும் தாவோயிச புனித பண்டிகை. 18 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள மூங்கில் கோபுரத்தில் ஏறுவதுதான் போட்டி. கம்பம் முழுவதும் பன்களால் நிறைக்கப்பட்டிருக்கும். மேலே ஏறி உச்சியைத் தொடுவதோடு அதிகளவு பன் பாக்கெட்டுகளை கைப்பற்றினால் அவரே சாம்பியன். சீன காலண்டரின்படி, நான்காவது மாதம் (ஏப்ரல்-மே) இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. தோராயமாக 60 ஆயிரம் பன்கள் தயாரிக்கப்பட்டு கம்பத்தில் பொருத்தப்படுகின்றன. 

ஏர் கிடார் சாம்பியன்ஷிப் (பின்லாந்து)

கையில் கிடார் இருப்பதாக கற்பனை செய்துகொண்டு இசை வாசிக்க வேண்டும். ராகிங் போல இருந்தாலும், இந்த நிகழ்ச்சி உலக அமைதி, வெப்பமயமாதல் ஆகியவற்றை வலியுறுத்தி ஆண்டுதோறும் ஆகஸ்டில் நடைபெற்று வருகிறது.

கால்விரலில் போர் (World Toe wrestling Championship இங்கிலாந்து)

கைகளை மடக்கி புஜவலிமையைக் காட்டி போட்டியிடுகிறோம் அல்லவா? அதேபோல்தான். கால்களால் சண்டையிட்டு அடுத்தவரின் காலை , அங்கு வைத்துள்ள கல்லின் மீது தள்ளினால், நீங்கள்தான் சாம்பியன். ஆகஸ்ட் மாதம் தில்லாக பலரும் கலந்துகொண்டு தங்கள் கால் வலிமையை நிரூபித்து வருகின்றனர். 

ஜில்ராய் கார்லிக் திருவிழா (Gilroy garlic Festival,அமெரிக்கா)

அமெரிக்காவில்  1979 ஆம் ஆண்டு முதலாக நடந்துவரும் பூண்டுத் திருவிழா. பூண்டு சிப்ஸ், பூண்டு ஐஸ்க்ரீம் என அனைத்திலும் பூண்டின் தாக்கம் அதிகம். ஆண்டுதோறும் ஜூலை மாதம் நடைபெறும் இத்திருவிழாவில் கிடைக்கும் தொகை, பல்வேறு தன்னார்வ நிறுவனங்களின் திட்டங்களுக்காகப் பயன்படுகிறது. 

நீருக்கடியில் இசை (Underwater music Festival, அமெரிக்கா )

இசைக்கலைஞர்கள், நீச்சல் வித்தகர்கள் என அனைவரும் ஒன்றாக இணைந்து இசைக்கருவிகளை நீருக்கடியில் இசைப்பார்கள். இதற்கான தனித்துவமான இசைக்கருவிகளை கலைஞர்கள் பயன்படுத்துகின்றனர். 

-ச.அன்பரசு


 


 




கருத்துகள்