மாடுகளை வதைக்கின்றனவா பால் பண்ணைகள்? - வலுப்படும் எதிர்ப்புகள்

 






உலகம் முழுவதும் உள்ள பால் பண்ணைகளுக்கு எதிராக பல்வேறு விலங்கு நல அமைப்புகள் போராடி வருகின்றன. 


உலகநாடுகளில் இயங்கி வரும் பால் பண்ணைகள் மூலம்தான் பதப்படுத்தப்பட்ட பால், ஐஸ்க்ரீம், யோகர்ட், வெண்ணெய், நெய், சீஸ், பனீர் ஆகிய பால் பொருட்கள் கிடைக்கின்றன. மிதமிஞ்சிய பாலை பால் பௌடராக மாற்றி உலகச்சந்தையில் பல்வேறு நாடுகளும் விற்பனை செய்து வருகின்றன. 


பால் பண்ணைகளில் உற்பத்தி குறையாமலிருக்க பசுக்கள் செயற்கை முறையில் சினையூட்டம் பெற்று கன்றுகளை ஈனுகின்றன. பசுக்களின் பராமரிப்பு, இயற்கையான முறை அல்லாமல் செயற்கையான சினையூட்டப்படுவது, கிடாரிக்கன்றுகளை வைத்துக்கொண்டு கிடாய்களை இறைச்சிக்கு விற்றுவிடுவது ஆகியவற்றுக்கு எதிராக விலங்குநல ஆர்வலர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். 


அமெரிக்காவில் பால்துறை சந்தை தோராயமாக 60 ஆயிரம் கோடிக்கும் அதிகம். அங்கு  மாட்டிறைச்சி உணவுகளுக்கான சந்தையும் பெரியது. இருபது ஆண்டுகாலம் வாழும் பசு, ஐந்து ஆண்டுகளிலேயே பால் வளத்தை இழந்து, இறைச்சிக்காக விற்கப்பட்டுவிடுகின்றன. பால் வளமின்றி வளர்ப்பது விவசாயிகளுக்கு சுமை என்று கூறப்படுகிறது. ’’இங்கு பெறப்படும் பால் என்பது வன்முறையின்றி பெறப்படுவது இல்லை. சில பண்ணைகளில் வன்முறை குறைவாக இருக்கலாம்’’ என்றார் அனிமல் அவுட்லுக் இயக்கத்தைச் சேர்ந்த எரிகா மெயர். இதுதொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் காரணமாக 1975ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை 40 சதவீத பால் நுகர்வு குறைந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் 20 ஆயிரம் பால்பண்ணைகள் மூடப்பட்டுள்ளன என்று புள்ளிவிவரங்களைக் கூறுகிறது விவசாயத்துறை அமைச்சகம். 


இந்தியாவில் மாடுகளை வளர்ப்பது என்பது பாலுக்கு மட்டுமே என்பது மாறி இயற்கை விவசாயத்திற்காகவும், சாணம், கோமியம் ஆகியவற்றிலிருந்து பல்வேறு பொருட்களைத் தயாரிப்பது எனவும் மாறியுள்ளது. இதன்மூலம் மாடுகளின் பால்வளம் இல்லாதபோதும் அவற்றை விற்றுவிடும் தேவை இல்லை. குழந்தைகளுக்கு முக்கியமான உணவுப்பொருளாக மாறிய பாலின் தேவை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அரசு சரியான விதிகளை உருவாக்கி நடைமுறைப்படுத்தினால் இந்தியாவில் பசுக்கள் பாதுகாக்கப்படுவதோடு பாலின் வளமும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். 


தகவல்

FE


Is dairy farming cruel to cows

Andrew jacobs

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்