சதுப்புநிலங்களை மீட்பது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட!

 




Image result for பள்ளிக்கரணை



குப்பைகளால் அழியும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம்!

செய்தி: தமிழகத்திலுள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் 8.4 ஜிகா டன்கள் மீத்தேன் வாயு உருவாகி சூழலை மாசுபடுத்துவதாக ஆய்வுத் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சனிக்கிழமை உலக சதுப்புநில நாள் அரசு வனத்துறையால் அனுசரிக்கப்பட்டது. இதுதொடர்பான சந்திப்பில் இயற்கை ஆர்வலர்கள், சூழல் செயல்பாட்டாளர்கள் பங்குபெற்று, பள்ளிக்கரணையில் குப்பை கொட்டும் இடமாக மாறிய சதுப்புநிலங்களை மீட்பது குறித்து ஆலோசித்துள்ளனர். பள்ளிக்கரணையில் பல்வேறு இடங்களில் கருவிகளைப் பொருத்தி கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன் ஆகிய வாயுக்களின் அளவை அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். 

மீத்தேன் அதிகரிப்பு

நன்னீர் சதுப்பு நிலப்பகுதியான பள்ளிக்கரணையில்  கொட்டப்படும் நகரின் ஒட்டுமொத்தக் கழிவுகளால்  8.4  ஜிகா டன்கள் மீத்தேன் உருவாகி உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சிக்குழு தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் சூழல் ஆராய்ச்சிக் கழக இயக்குநரான ஏ.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ளார். 

கடந்த 50 ஆண்டுகளாக பள்ளிக்கரணையிலுள்ள சதுப்புநிலத்தில் கொட்டப்படும் குப்பைகள் எரியூட்டப்படுவதால் ஏற்படும் அபாய விளைவு இது. உலகம் முழுக்க பசுமை இல்ல வாயுக்களைக் கட்டுப்படுத்த இயற்கையியல் ஆராய்ச்சியாளர்கள், தன்னார்வலர்கள் முயற்சித்து வருகின்றனர். உலக நாடுகள் தாம் உருவாக்கிய சூழல் ஒப்பந்தப்படி, கரிம எரிபொருட்களைக் கட்டுப்படுத்த கார்பன் வரி, மாசுபாட்டைக் குறைத்தல் என செயல்பாடுகளை முடுக்கி  வருகின்றனர். ஆனால் இதற்கு முக்கியத் தடையாக இருப்பது, தேங்கும் குப்பைகளை எப்படி மறுசுழற்சி செய்வது என்பதே. 

சதுப்புநிலத்திற்கு ஆபத்து

ஆறு அல்லது ஏரியின் உபரிநீர் தேங்கும் நிலப்பகுதிக்கு சதுப்புநிலம் என்று பெயர். இந்நிலப்பகுதி, நீரை உறிஞ்சி வைத்துக் கொண்டு பருவச்சூழல் மாறுபாடுகளை எளிதாக சமாளிக்க கூடியது. சதுப்பு நிலப்பகுதியான பள்ளிக்கரணையில் கூழைக்கடா, கரிச்சான், நாரை, கொக்கு, முக்குளிப்பான்கள் என 50 க்கும் மேற்பட்ட பறவைகள் பருவங்களுக்கு ஏற்ப வந்து செல்கின்றன.

 பதினொன்றில் ஒன்று!

தமிழகம் முழுக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பதினொரு சதுப்புநிலங்களில் பள்ளிக்கரணையும் ஒன்று. தேசிய சூழல்நிதிக்கு தேர்வான இந்த சதுப்பு நிலப்பகுதியை மேம்படுத்த மாநில அரசு 25 கோடி ரூபாயை வழங்குகிறது.

 1900 இல் ஆங்கிலேயர்கள் வணிக மதிப்பில்லாத வீண் நிலங்கள் என சதுப்புநிலங்களை கூறியபோது தமிழகத்தில் 6 ஆயிரம் ஹெக்டேர்கள் அளவில் இருந்தன. பின்னர் காலப்போக்கில் இதன் அளவு சுருங்கத் தொடங்கியது. சென்னையில் மத்திய கைலாசத்திலிருந்து மேடவாக்கம் வரை பரந்து விரிந்து தோராயமாக 5 ஆயிரம் ஹெக்டேர்களாக சதுப்புநிலங்கள் இருந்தன. தற்போது ஆக்கிரமிப்புகளால் சுருங்கி 500 ஹெக்டேர்களாக வந்து நிற்கிறது பள்ளிக்கரணை சதுப்புநிலம்.  35 ஆண்டுகளில் இந்த அவல நிலை உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

பல்லுயிர்களுக்கான இடம்

1985-86 ஆம் ஆண்டு இந்திய அரசால் தேசிய சதுப்புநில பாதுகாப்பு திட்டம்(NWCMP) உருவாக்கப்பட்டது. இத்திட்டத்திற்கான பட்டியலில் 94 சதுப்புநிலங்கள் இடம்பெற்றன. கடந்த 2007 ஆம் ஆண்டு தமிழக அரசு மாநிலங்களிலுள்ள சதுப்புநிலப்பகுதியை பாதுகாப்பட்ட பகுதிகள் என அறிவித்தது. ஆனாலும் சதுப்புநிலங்கள் மீதான ஆக்கிரமிப்புகள் குறையவில்லை. 

பள்ளிக்கரணை சதுப்புநிலம் உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகளுக்கான உணவளித்து உதவும் இடம். இதிலுள்ள சிறு மணல்குன்றுகள், ஆழமற்ற சிறு குட்டைகள், சேற்றுமடிப்புகள் என பறவைகளுக்கான விஷேச அமைப்பு கொண்டவை. பத்து வகை பாலூட்டிகள், 133 பறவைகள், 50 வகை மீன்கள், 21, வகை ஊர்வன, 10 வகை இருவாழ்விகள், 7 வகை பட்டாம்பூச்சிகள், 29 புல் வகைகள், 114 வகை தாவரங்கள் ஆகியவற்றுக்கான இடமளித்து உதவுகிறது பள்ளிக்கரணை சதுப்புநிலம். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை விட அதிக பறவைகள் வந்து இளைப்பாறிச் செல்லும் இடமாக பள்ளிக்கரணை சதுப்புநிலம் உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி சதுப்புநிலங்களை மீட்பது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட. 

தகவல்: The new indian express





  


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்