மக்களுக்காக போராடி அன்பை வென்ற மேற்குவங்க பெண்மணி! - மம்தா பானர்ஜி
தீதி
மம்தா பானர்ஜி
சுடாபா பால்
பெங்குவின் வெளியீடு
மேற்கு வங்காளத்தில் 34 ஆண்டுகளாக கோலோச்சிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி முதல்வரான முதல் பெண் முதல்வர் மம்தா பானர்ஜி. இவரது வாழ்க்கை சிறுவயதில் எப்படி இருந்தது என்பதை எளிமையான முறையில் எழுதியுள்ளார் ஆசிரியர். இந்த நூல் மம்தாவின் புகழ்பாடும் வகையைப் பின்பற்றவில்லை. மம்தா எழுதிய நூல், வேறு நூல்கள் பல்வேறு நூல்களைப் படித்து பல்வேறு தகவல்களை கோர்வையாக கொடுத்துள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் எப்படி அதிலிருந்து வெளியேறி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை தொடங்கி காங்கிரஸ், இடதுசாரி கட்சியை எதிர்க்கட்சி இருக்கைக்கு தள்ளினார் என்பதோடு, மம்தா முதல்வர் இருக்கையில் இருந்தபோது செய்த தவறுகளையும் கூறியுள்ளார்.
மம்தா பானர்ஜியை மக்களுக்கான தலைவர் என எளிதாக கூறலாம். அனைத்து போராட்டங்களிலும் மக்களின் மீது காவலர்களின் தடி படும் முன்னர் இவரது உடலில் பட்டுவிடும். அந்தளவு மக்களுக்காக ஏராளமான போராட்டங்களை செய்துள்ளார். இதன் காரணமாக தலையில் அடிபட்டு அதன் விளைவாக மம்தாவின் குணநலன்களே மாறிவிட்டன என்றும் கூறப்படுகிறது.
மம்தா பானர்ஜி |
விமர்சனங்களைப் பிடிக்காதவர், தனக்கு எதிராக விரல் தூக்கியவர்களை எல்லாம் சிறையில் அடைத்தவர், வன்முறை சம்பவங்கள் பெருக காரணமாக இருந்தவர், தொழில்வளர்ச்சி குறைவுக்கு காரணம் என பல்வேறு குற்றச்சாட்டுகளை நூலின் பின்பகுதியில் படிக்க முடிகிறது.
ஆனால் இதையெல்லாம் மீறிய வசீகரம் அவருக்கு உண்டு. அதுதான் அவர் கிராமப்புற மக்களின் பக்கம் நின்றது. இதனால்தான் தொழில்வளர்ச்சி என்பதை விட விவசாய நிலங்களை வலுக்கட்டாயமாக விவசாயிகளிடமிருந்து பிடுங்கவில்லை. இதனால் பெங்கால் மீன்ஸ் பிஸினஸ் என்ற சுலோகன் பெரியளவு பயன்படாமல் போய்விட்டது.
படிப்பில் சிறந்த மாணவியாக இல்லாவிட்டாலும் பண்பில் பலபடி முன்னே நின்றிருக்கிறார் மம்தா. அதனால்தான் அரசியல் பேரணியாக இருந்தாலும் தனக்கு பாடம் கற்பித்த ஆசிரியரைக் கண்டால் உடனே காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொள்ள முடிகிறது. கட்சியினரைக் கட்டுப்பாட்டில் வைக்கமுடியவில்லை என்பது உண்மை. தன்னளவில் நேர்மையாக இருந்தாலும் நாரதா ஸ்டிங் ஆபரேஷன், சாரதா ஊழல் என கட்சியின் பெயரில் கறைபடிந்துவிட்டது.
விவசாயம் மட்டுமே முக்கியம் என்று நினைத்தது வாக்குகளைப் பெற்றுக்கொடுத்தாலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. இதன் காரணமாக, இளைஞர்கள் பல்வேறு குற்றச்சம்பவங்களிலும் தண்டா வசூலிப்பதிலும் இறங்கியுள்ளதை நூல் பதிவு செய்துள்ளது. இது தவிர பூஜைக்காக பிறரிடம் நன்கொடையை வசூலிக்கும் செயலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, மம்தா பானர்ஜி வெளியிடும் வளர்ச்சி அறிக்கைகளை விட உண்மை வேறாக இருக்கிறது.
இதெல்லாம் தாண்டி மம்தாவுக்கு மேற்கு வங்க மக்கள் வாக்களித்தது, இடதுசாரி ஆட்சியின் கொடுமைகளை தாங்கமுடியாமல்தான். அதற்குப் பிறகு அங்கு இடதுசாரிகள் தலையெடுக்கவே முடியவில்லை. புத்ததேவ் பட்டாச்சாரியா செய்த தொழில்முன்னேற்ற நடவடிக்கைகளை தவறு என்று யாரும் கூறமுடியாது. ஆனால் அது பற்றிய விழிப்புணர்வை சரியாக ஏற்படுத்தவில்லை. இதன் காரணமாக ஏற்பட்ட கலவரம் மம்தாவுக்கு உதவியது. இடதுசாரிகள் எதிர்க்கட்சி வரிசைக்கு செல்லும்படி ஆகிவிட்டது. இன்று பாஜகவை எதிர்க்கும் திறனுள்ள பிற கட்சி முதல்வர்களில் மம்தா பானர்ஜிக்கு முக்கிய இடமுண்டு. ஏனெனில் அவர் மக்களிடமிருந்து உருவாகி வந்தவர். மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். சிங்கூர் போராட்டத்திற்காக அவர் நடத்திய உண்ணாநோன்பு போராட்டம் நெகிழ்ச்சியானது.
நூல்களை தவிர வேறு எதையும் பரிசுகளாக ஏற்காத குணம் முக்கியமானது. அதனை எழுத்தாளர் நூலின் தொடக்கத்திலேயே சொல்லிவிட்டார். இதில் அவர் நல்லவரா கெட்டவரா என்று ஆராயவில்லை. குறிப்பிட்ட சூழலில் உள்ளவர், தனது வாழ்க்கை மாறிய நிலையில் எப்படி இருக்கிறார் என்பதை நூல் கூறுவதாக புரிந்துகொள்ளலாம்.
காங்கிரஸ் கட்சிக்கான உழைப்பு, அங்கு அவருக்கு நேரும் பாகுபாடு, அவமானங்கள் கொண்ட பகுதிகள் உணர்ச்சிமயமானவை. அவற்றை நேராக எதிர்கொண்டு புதிய கட்சியைத் தொடங்கி வெல்வது, இடதுசாரியை வீழ்த்துவதற்காக செய்யும் முயற்சிகள் எல்லாம் தீதியை தந்திர விற்பன்னராகவே மாற்றி விடுகிறது. அதற்குப் பிறகு மம்தா, வெற்றிக்காக உழைக்கவும், அதனை தக்கவைக்கவுமே மெனக்கெடுகிறார்.
நூலை இருநூறு பக்கங்களைக் கொண்டது. வேகமாக ஆங்கிலம் வாசிப்பவர்கள் மூன்று நாட்களிலேயே படித்து விடலாம். மம்தா பற்றிய முக்கியமான நூல் இது.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக