கோவாக்ஸின் தயாரித்த உள்நாட்டு சாதனை நிறுவனம்! - பாரத் பயோடெக்கின் கதை
கிருஷ்ணா எல்லா |
உள்நாட்டில் தடுப்பூசியைத் தயாரித்த சாதனை நிறுவனம்!
தமிழ்நாட்டின் திருத்தணியில் பிறந்தவரான கிருஷ்ணா எல்லா, தனது பாரத்பயோடெக் நிறுவனம் மூலம் கோவிட்-19க்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளார்.
கோவிட் -19 நோய்த்தொற்றைத் தடுப்பதற்கான தடுப்பூசியை எட்டுமாத போராட்டங்களுக்குப் பிறகு ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் வெற்றிகரமாக தயாரித்துள்ளது. இந்நிறுவனத்தின் கோவாக்ஸின் என்ற தடுப்பூசி மருந்தை அவசரநிலை காரணமாக பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 1996இல் தொடங்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தில் தற்போது வரை 1,500 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 140 மருந்துகளின் காப்புரிமைகளை வைத்துள்ள கிருஷ்ணா எல்லா, 120 நாடுகளுக்கு நூறு கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் தடுப்பூசி மருந்துகளை ஏற்றுமதி செய்துவருகிறார்.
விவசாய அறிவியலில் பட்டம் பெற்ற கிருஷ்ணா, விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். சில ஆண்டுகள், சவுத் கரோலினா மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றியுள்ளார். பாரத் பயோடெக்கின் ரோட்டாவைரஸ் தடுப்பு மருந்தை, உலக நாடுகள் பலவும் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றன. 2019ஆம் ஆண்டு இந்தியாவின் தேசிய தடுப்பூசி திட்டத்தில் ரோட்டாவைரஸ் தடுப்பூசி இடம்பெறுவதற்கு பாரத் பயோடெக்கும், சீரம் இன்ஸ்டிடியூட்டும் முக்கியமான காரணமாகும்.
90 ஆயிரம் முதல் 1,53,000 குழந்தைகள் ரோட்டா வைரஸ் தொற்றால் பலியாகி வந்தனர். இவர்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி மருந்தால் இறப்பு எண்ணிக்கை பெருமளவு கட்டுக்குள் வந்தது என்று உலக சுகாதார நிறுவனம் அறிக்கையில் கூறியுள்ளது. பாரத் பயோடெக்கின் ரோட்டோவேக் மருந்திற்கு பிறகுதான் சீரம் இன்ஸ்டிடியூட்டில் ரோட்டோசில் என்ற தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
1998ஆம் ஆண்டு இந்நிறுவனம் சீசியம் குளோரைடு இல்லாத ஹெபடைடிஸ் பி நோய்க்கான மருந்தைக் கண்டுபிடித்து சந்தைப்படுத்தியது. டைபாய்ட், மூளைக்காய்ச்சல், இளம்பிள்ளைவாதம், வெறிநாய்க்கடி என பல்வேறு நோய்களுக்கான தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்துள்ளது. மலேரியா, சிக்கன்குனியா, ஜிகா ஆகிய நோய்களுக்கான தடுப்பூசி ஆராய்ச்சிகளையும் செய்து வருகிறது. 2019இல் மொத்த வருமானமாக 763 கோடி ரூபாயை பெற்றுள்ள பாரத் பயோடெக் நிறுவனம், லாபமாக 113 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது.
இளம்பிள்ளைவாதம், வெறிநாய்க்கடி, டிசிவி ஆகிய தடுப்பூசிகள் மூலம் நிறுவனத்தின் 90 சதவீத வருமானம் கிடைக்கிறது. அரசுக்கு வழங்கும் போலியோ மருந்தை விலை குறைத்து கொடுக்கும் கிருஷ்ணா, பிற தடுப்பூசிகளை வணிகரீதியில் விற்கிறார். நிறுவனத்தின் 75 சதவீத பங்குகளை கிருஷ்ணாவின் குடு்ம்பத்தினர் வைத்துள்ளனர்.
மசாலா பொருட்கள் விற்பனை, பயோவேட் என்ற பெயரில் கால்நடைகளுக்கான மருந்துகள் என கிருஷ்ணா வேறு வணிகங்களிலும் காலூன்றி வருகிறார். ரோட்டோவைரஸ் குழந்தைகளின் மீது பத்தாண்டுகள் செலுத்தி சோதித்துப் பார்த்து அங்கீகாரத்தைப்பெற்றுள்ளது. கோவேக்ஸின் மருந்தை போட்டி நிறுவனங்கள் வெறும் நீர் என்று அவதூறு கூறினாலும் கிருஷ்ணா சிறப்பான தடுப்பூசியை உருவாக்குவார் என மருத்துவத்துறை நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
தகவல்
ET Magazine
Bharatheeya story – shallesh menon, econommic times et magazine
கருத்துகள்
கருத்துரையிடுக