தூக்கம் வரலியா?





Couple, Lying, Bed, Sleeping, Honeymoon, Rest



தூக்கம் வரலியா?


இன்று ஜென் இசட் இளைஞர்கள் பலரும் இரவு இரண்டு மணிக்குப் பிறகுதான் தூங்கச் செல்கிறார்கள். படிப்பு, படம் பார்ப்பது, சமூக வலைத்தளங்களை பார்வையிடுவது என கணினி, ஸ்மார்ட்போன் ஆகிய சாதனங்கள் அவர்களின் நேரத்தை ஆக்கிரமித்துக் கொள்வதுதான் இதற்குக் காரணம்.  தூக்கம் பற்றிய கவலை இளமையில் தோன்றாவிட்டாலும் முப்பது வயதுக்குப் பிறகு அது நோயாக அறியப்படலாம். இப்போது இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் வரவுக்குப் பிறகு இன்சோம்னியா, டிலேய்டு ஸ்லீப்பிங் டிஸ்ஆர்டர் போன்ற பல்வேறு தூக்க குறைபாடுகள் தொடர்பான வார்த்தைகள் புழக்கத்திற்கு வந்துவிட்டன. 


தூக்கம் என்றால் படுத்து தூங்குவது என பலரும் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இதில் இருவகை உண்டு. ஆர்இஎம் (REM), நான் - ஆர்இஎம் (Non-REM) என இருவகையாக இதனைப் பிரிக்கலாம். ஆர்இஎம் எனும் தொடக்கநிலை தூக்கம், பகலில் நடக்கும் சம்பவங்களின் பின்னணியில் நடைபெறுகிறது. இதில்தான் உங்களது கருத்து எண்ணமாக, செயலாக உருவாக்கம் பெறுவது நடைபெறுகிறது.  நான் -ஆர்இஎம் எனும் தூக்கம் (ஆழ்நிலைத் தூக்கம்) மெதுவாகவே வருகிறது. இந்நிலையில் அதிக கனவுகள் வருவதில்லை.  இம்முறையில்தான் உடல் நல்ல ஓய்வைப் பெற்று அடுத்த நாளுக்கான புத்துணர்ச்சியைப் பெறுகிறது. இந்த தூக்கத்தில் உடலின் தசைகள் நெகிழ்வாகிறது. இதயத்துடிப்பு மெதுவாகிறது.  


தொடக்கநிலை  தூக்கத்தில் நீங்கள் விழித்து இருக்கும்போது உடலின் இயக்கங்கள் எப்படி இருக்குமோ அப்படியே இருக்கும். கண்களின் துடிப்பு, இதயத்துடிப்பு அதிகமாக இருக்கும். ஏறத்தாழ இந்த வகை தூக்கத்தில் கனவுகளின் வகைப்படி உடலின் இயக்கம் மாறும். இதனால் ஆபத்து ஏற்படும் வாய்ப்பு இருப்பதால்  தற்காலிகமாக உடலின் உறுப்புகள் செயலற்றதாக இருக்கும். இதனால் கனவின் தீவிரத்தில் உங்கள் உடல் செயல்படாமல் தடுக்கப்படுகிறது. 

இருவகையும் அவசியம்!


நாம் இங்கு இருவகை தூக்கத்தை குறிப்பிடும்போது, அவற்றின் பயன் அடிப்படையில் ஒன்றை உயர்த்திக் கூறியிருக்கலாம். உடலைப் பொறுத்தவரையில் அந்த பாகுபாடு கிடையாது. இரவில் நாம் தூங்கும் தூக்கத்தை 90 நிமிடங்களாக சுழற்சி முறையில்  ஆராய்ச்சியாளர்கள் கணக்கிடுகிறார்கள். 


இதில் ஆழமான தூக்கம் (Non-REM) இரவு நெடுநேரம் கழித்தே வருகிறது.  கற்பனை கனவுகளைக் கொண்ட தொடக்க நிலையும் இதில் அடக்கம். 20ஆம்  நூற்றாண்டு தொடக்கத்தில், ஆழ்நிலை தூக்கத்திலும் கனவுகள் வருகின்றன என்பதைக் கண்டறிந்தனர். தொடக்கநிலை தூக்கத்தில்  கற்பனை அதிகவும், தர்க்கம் குறைவாகவும் கனவுகள் ஏற்படும். ஆழ்நிலை தூக்கத்தில் உங்கள் எண்ணங்களுக்கு மிக நெருங்கிய வகையில் கனவுகள் உருவாகின்றன. ஆனால் இவற்றில் கற்பனை குறைவாக இருக்கும். ஆனால் இவை இரண்டும் ஒருவரின் தூக்க நிலையில் மாறி மாறி ஏற்படுகின்றன. அப்படி ஏற்படுவது இயல்பானது. இதில் மாறுதல் ஏற்படும்போது, சம்பவங்களை நினைவுகூர்வதில் தடுமாற்றம் நேரிடுகிறது.


மனநலத்தை மேம்படுத்தும் தூக்கம்


மோட்டார் பாகங்களின் தேய்மானத்தை குறைக்கும் ஆயில் போலவே தூக்கம் நமக்கு உதவுகிறது. மோசமான எண்ணங்களுடன், வருத்தங்களுடன் படுக்கைக்கு சென்றாலும் கூட அடுத்தநாள் நம்பிக்கையுடன் புத்துணர்ச்சியுடன் எழ, தொடக்கநிலை தூக்கம் உதவுகிறது. இதில் வரும் கனவுகள் நம் உடலின், மனதின் உணர்ச்சிகர எண்ணங்களை ஒழுங்குபடுத்துகிறது. ஆனால் இந்த தூக்கம் வருவதற்கும் உடல் ஒத்துழைக்கவேண்டும். அதாவது, உங்கள் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்க வேண்டும். 


எட்டு மணிநேர தூக்கம் என்பது ஆரோக்கிய மனிதருக்கு அவசியம். ஆனால் இதில் சிலர் விதிவிலக்காக ஐந்து மணிநேரங்கள் மட்டுமே தூங்கி எழுந்து சுறுசுறுப்பாக இருப்பார்கள். இந்தியாவின் நவீன சிற்பிகளின் ஒருவரான நேரு இதற்கு உதாரணம். இதனை அனைவருக்கும் பொருத்திப் பார்க்க முடியாது.  அன்றிருந்த சூழலை விட இன்று ஒளி, ஒலி மாசு அதிகம். எனவே தூக்கநேரம் குறைந்தால் மனச்சோர்வு, பதற்றம், இதயநோய்கள் ஏற்படுவது நிச்சயம் என்கிறார்கள் உளவியல் வல்லுநர்கள். உடலுக்கு சரியானபடி ஓய்வை நீங்கள் அளித்தால் வார விடுமுறையில் கூடுதலாக தூங்க வேண்டியிருக்காது. வாக்கிங் செல்லலாம் என்று நினைத்து அலாரம் வைத்திருப்பீர்கள். அதையும் மிஞ்சி ஞாயிறன்று கூடுதலாகத்  தூங்கினால் சரியானபடி நீங்கள் தூங்கவில்லை என்று அர்த்தமாகிறது. 


இதற்காக நீங்கள் செய்யவேண்டியது, உங்கள் வேலைகளை திட்டமிட்டு தூக்கநேரத்தை ஒழுங்கு செய்வதாகும். 


தூக்கமின்மையை சரிசெய்ய தூக்க மாத்திரைகளைப் பயன்படுத்துவது ஆரோக்கியமானதல்ல. இதற்கு பதிலாக தூக்கம் வரவைக்க உதவும் உணவுப்பொருட்களான பால், முட்டை, கீரை ஆகிய பொருட்களை உண்பது அவசியம். 


படுக்கை அறையில் டிஜிட்டல் சாதனங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்வது அவசியம்.  


பொதுவாக நாம் தொடக்கநிலை, ஆழ்நிலை தூக்கத்தில் காணும் கனவுகளில் 90 சதவீதம் நாம் காலையில் எழும்போது நினைவிருக்காது. அதற்காக நாம் கவலைப்படவேண்டியதில்லை. 


-அரசு கார்த்திக்

 



 





கருத்துகள்