பைடு சீனாவில் வென்றது இப்படித்தான்!
இன்டர்நெட் காட்ஃபாதர் ராபின்லீ!
- ச.அன்பரசு
1992 ஆம் ஆண்டு. அமெரிக்காவில்
கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் படிக்க இன்டர்வியூவில் பதட்டமாக உட்கார்ந்திருந்தார் அந்த
இளைஞர். பேராசிரியர் ஒரே ஒரு கேள்விதான் கேட்டார்.
"சீனாவில் கம்ப்யூட்டர்கள் உள்ளதா?" பதில் பேச முடியாமல் திகைத்துப்போன அந்த இளைஞர் தன் பெயரை சீனாவின் மூலை முடுக்கெங்கும்
பேச வைத்துவிட்டார். பைடு சர்ச் எஞ்சின் நிறுவனர் ராபின் லீதான்
அந்த இளைஞர். "கம்ப்யூட்டர் துறையில் சீனா வலிமையான நாடு
என்பதை உலகிற்கு உணர்த்தவேண்டும் என நினைத்தேன்" என எளிமையாக
புன்னகைப்பவருக்கு வயது 49.
எட்டு ஆண்டுகளுக்கு பிறகு பைடு சர்ச் எஞ்சினைத்
தொடங்கி சீனாவில் 80% பங்குகளோடு உலகில் மிகபிரபலமான
நான்காவது வெப்சைட்டாக உயர்த்தியுள்ளார் ராபின் லீ. சர்ச் எஞ்சினின் பெயர்,
13 ஆம் நூற்றாண்டு கவிதையிலிருந்து பெறப்பட்டது. சீனாவில் இன்று 262 டெக் நிறுவனங்கள் (அ) ஒரு பில்லியன் மதிப்புள்ள ஸ்டார்ட் அப்கள் உள்ளன என்கிறது
மெக்கின்சி நிறுவன அறிக்கை. பீகிங் பல்கலையில் தகவல் மேலாண்மை
படித்தவர், அமெரிக்காவின் நியூயார்க்கில் கம்ப்யூட்டர் சயின்ஸ்
கற்றார். பின் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையில் மென்பொருள்
பொறியியலாளராக வேலைபார்த்துவிட்டு இன்ஃபோசீக் நிறுவனத்தில் சேர்ந்தார். பின் சீனா திரும்பியவர் பைடு கம்பெனியை தான் கற்ற பல்கலைக்கு எதிரிலுள்ள ஹோட்டல்
அறையிலேயே தொடங்கினார்.
"ஒரு பேராசிரியர், ஐந்து மாணவர்கள் என டீம் அமைத்து தொடங்கியதுதான் பைடு சர்ச் எஞ்சின்"
என புன்னகைக்கிறார் ராபின் லீ. 2005 இல்
40% மார்க்கெட் பிடித்தவருக்கு கூகுள் போட்டியாக வந்தது. ஆனால் சீன அரசின் கெடுபிடியால் பொட்டியைக் கட்டிய கூகுள் வெளியேறிய
2010 ஆம் ஆண்டு பைடு 75% இணைய போக்குவரத்தை ஆளுமை
செய்துகொண்டிருந்தது. ஸ்கைப், நியூயார்க்
டைம்ஸ், டைம் உள்ளிட்ட இணையதளங்கள் சீனாவில் பார்க்க தடையுள்ளது.
"சில விஷயங்களை அரசு சட்டவிரோதம் என்றால் நாங்கள் அதற்கு உட்பட்டுத்தான்
ஆகவேண்டும். இல்லையென்றால் பிசினஸ் நடக்காது" என்ற ராபின் லீயிடம் தியான்மென் போராட்டத்தை பைடுவில் மறைப்பதை கேட்டதும்,
" இணைய நிறுவனமாக நாங்கள் சுதந்திரத்தை விரும்பலாம். ஆனால் அது நடைமுறைக்கு ஒத்துவராது என்பதோடு நாட்டின் நலனுக்கும் ஏற்றதல்ல"
என சீன அரசுக்கு அபாரமாக உடுக்கை அடிக்கிறார். தானியங்கி கார் உள்ளிட்ட முயற்சிகளிலும் ராபின் லீ இறங்கியுள்ளார்.
தொகுப்பு: விக்டர் காமெஸி, பானுமதி கம்முலா
நன்றி: முத்தாரம்