நூல் விமர்சனம்: காந்தியார் சாந்தியடைய



Image result for gandhi illustration




காந்தியார் சாந்தியடைய
ப.திருமாவேலன்
மாற்று வெளியீட்டகம்
ரூ. 160



1900 ஆம் ஆண்டிலிருந்து சுதந்திரம் வரையில் நாட்டில் என்ன நடந்தது என்பதை காந்தி, நேரு, படேல் ஆகியோரின் எழுத்துக்கள் உரை வழியாக இந்நூல் பதிவு செய்துள்ளது. இது இன்றைக்கு எந்தளவு பிரயோஜனம் உண்டு என்றால், ராம ராஜ்யம் என ரதம் இழுத்து பிரிவினையை தூண்டும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட பிரிவினை கட்சிகளின் நோக்கம் என்ன என்பதை துல்லிய துலக்கமாக அறிய ப.திருமாவேலனின் இத்தகைய வரலாற்று நூல்கள் அவசியம். 

ராமராஜ்யம் எனும் பகுதியில்  சுதந்திரப்போராட்டத்தை பின்னுக்கிழுக்கும்படி முஸ்லீம்களும், இந்துக்களும் முட்டி மோதிக்கொண்டனர். இதனை காந்தி எப்படி பார்த்தார், என்ன எழுதினார் பேசினார் என்பதையும் இ்ந்நூல் பேசுகிறது. இந்துஸ்தான் பகுதியில் முஸ்லீம்களை முடிந்தளவு ஓரே நாட்டுக்குள் இணக்கமாக வைத்திருக்க காந்தி செய்த முயற்சிகளையும் அதனை உடைத்த காங்கிரஸ் கட்சியின் செயல்பாடும், அதனை விரைவுபடுத்தியா ஸ்வயம் சேவக் சாவர்க்கரின் பணியையும், பிரிவினை சக்திகளை மனதளவில் ஆதரித்த படேலின் செயல்பாடுகளையும் படிக்கலாம். கடைசிபகுதி காந்திஸ்தானில் காந்தி தான் செய்த அரசியலில் கலந்த ஆன்மிக தன்மையால் எப்படி உயிரிழக்கிறார் என்பதை பெரியாரியின் இரங்கல் உரையோடு முடிக்கிறார் ப. திருமாவேலன். 

பொதுவாக பாகிஸ்தானை தனி நாடாக்க கோரிய ஜின்னாவை அனைவரும் எதிரியாக சித்தரித்து எழுதும் நிலையில் ஜின்னாவின் உரைகள், பேச்சுகளை இந்நூல் நேர்மறையாகவே அணுகுகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியை எங்கும் விட்டுக்கொடுக்காமல் அதிலுள்ள  தலைவர்களுக்கு பாதிப்பு நேரும்போதெல்லாம் தட்டிக்கேட்கும் நெஞ்சுரம் உள்ள ஜின்னாவின் பாத்திரம் படிக்க புதுமையாக உள்ளது. 

காந்தியை இன்றையநோக்கில் பார்த்து விமர்சிப்பவர்கள் அன்றைய காலகட்டத்தில் அவர் யோசித்த செய்த விஷயங்களை ஆழமாக கவனித்தால் ஆச்சரியமே ஏற்படும்.  தான் நம்பிய விஷயங்கள், மனிதர்கள் கைவிடும்போது வெளிப்படையாக அதனை கடிதங்களில் எழுதிய துணிச்சல் காந்திக்கு மட்டுமே உண்டு. நேரு, காந்தியை புறக்கணித்து படேலை மட்டும் ஏன் ஸ்வயம் சேவக் சங்கங்கள் சிலாகிக்கின்றன என்பதற்கு இந்நூலிலேயே ஆசிரியர் திருமாவேலன் ஆதாரம் தருகிறார். 

கருத்தியலை கருத்தியலால் எதிர்க்கவேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக கூறுகிற நூல் இது. காந்தி தென்னாப்பிரிக்காவில் முன்பற்கள் உடைபட தாக்கப்பட்டபோதும் வன்முறைக்கு இறங்காமல் காரியத்தை ஜெயித்ததற்கு காரணமான பொறுமையும் விவேகமும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மறந்துவிடக்கூடியதல்ல. போலிகள் நிறைந்துவிட்ட உலகில் அகிம்சை என்பதும் போராட்டம் என்பதும் கறைபடிந்து ஏளனத்திற்கானதாக மாற்றப்பட்டிருக்கலாம். ஆனால் மும்பையில் விவசாயிகள் தைரியமாக திரண்டு பேரணியாக வந்தது போல மக்கள் ஒன்றுதிரளும்போது கைக்கூலி ஊடகங்களின் மாயக்கனவுகள் காணாமல் போகும். காந்தியார் சாந்தியடைய நாம் செய்யவேண்டியது அதுவேதான். 

-கோமாளிமேடை டீம்