அணுஆயுதப்போர் 3.0!-
அணுஆயுதப்போர்
3.0!- ச.அன்பரசு
போர் வரட்டும் என ரஜினி எந்த நேரத்தில் சொன்னாரோ
தெரியாது.
உண்மையிலே மூன்றாம் உலகப்போர் ஏற்படப்போவதற்கான அறிகுறிகள் தொடங்கியுள்ளன.
1992 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபரான ஜார்ஜ் புஷ், நெவடாவில் பனிப்போர்காலத்தில் ஆயிரக்கணக்கில் நடைபெற்று வந்த அணு ஆயுத சோதனைகளுக்கு
தற்காலிக தடைவிதித்தார். அங்கு பணியாற்றிய ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளும்
அங்கிருந்து வெளியேறினார்கள். நிலவின் குழிகளாக நிறைந்து பாலைவனமாக
நீளும் தெற்கு நெவடா, இனியும் ஆளரவமற்று கிடக்காது. காரணம், அதிபர் ட்ரம்பின் உத்தரவுகள்தான். கடந்தாண்டு ட்ரம்ப் அரசு, அணுவாற்றல் துறையை தயார்படுத்த
சிக்னல் தந்துவிட்டார். அரசியல் காரணங்கள் என்றாலும் ஆயுதங்களுக்கான பட்ஜெட் போர் பற்றிய பதட்டத்தை
அரசின் பல இடங்களிலும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவும்
அதிரடி எதிரிகளும்!
அமெரிக்கா ஏவுகணைகளை தயாரித்தால் அதன் பிறவி எதிரியான
ரஷ்யாவின் புதின், வடகொரியாவின் கிம் ஜாங் உன்,
இரானின் அயதுல்லா அலி கமினேனி ஆகியோர் தேமேயென்று வேடிக்கை பார்ப்பார்களா?
பனிப்போரின்போது, ரஷ்யாவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக்
கூறி அணுஆயுத ஒப்பந்தத்தை இடது கையால் ஓரம்தள்ளிய ட்ரம்ப் சிறியரக ஏவுகணைகள் தயாரிக்க
1.2 ட்ரில்லியன் டாலர்களை(2018) ஒதுக்கியுள்ளார்.
"நமது அணுவாயுதங்களை புதிதாக உருவாக்கி நவீனப்படுத்துவது அவசியம்.
எதிர்காலத்தில் ஏற்படும் மோசமான சூழல்களை சமாளிக்க இவ்வாயுதங்கள் உதவும்.
பின்னாளில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து அணு ஆயுதங்களை அழிக்கலாம்.
ஆனால் அந்நிலை இப்போதில்லை" என்று கடந்த ஜனவரி
30 ஆம் தேதி ட்ரம்ப் பேசினார். மேலும்
2010 ஆம் ஆண்டு ஒபாமா ஆட்சியில் ரஷ்யா -அமெரிக்காவிடையே
கையெழுத்தான அணு ஆயுதக்குறைப்பு ஒப்பந்தத்தையும் ராங் டீல் என்று சொல்லிய ட்ரம்ப்,
இப்பேச்சுவார்த்தையை நடத்திய அமெரிக்க மாகாண செயலாளர் ரெக்ஸ் டில்லர்சனையும்
தன் உரையில் வறுத்தெடுத்தார். "அணு ஆயுத தடுப்பு ஒப்பந்தம்
உலகளவில் முன்னணி நாடான அமெரிக்காவின் இடத்தை பறித்ததோடு ஆயுதங்களின் வளர்ச்சியில்
பின்னுக்கு தள்ளிவிட்டது.இனி அந்த ஐடியா அமுலில் இருக்காது"
என்கிறார் பாதுகாப்பு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆண்ட்ரூ வெபர்.
உடனே சுதாரித்த சீனா பாதுகாப்புத்துறை 'பகுத்தறிவற்ற முடிவு' என்றும் ரஷ்ய அதிபரான புதின்,
'பனிப்போர் ரூல்ஸை மீறியதோடு, ஐரோப்பாவின் பாதுகாப்புக்கும்
ஆபத்து' என கூக்குரலெழுப்பினார். சமாதானப்புறா
பறக்கும் சூழல் உலகநாடுகளிடையே நிலவவில்லை என்பதே நிஜம். "நாடுகளிடையே ஆயுதப்போட்டி முன்னரே தொடங்கிவிட்டது. ஆனால்
இப்போர் போர் உக்கிரமாக நடைபெறும்" என்கிறார் பாதுகாப்புத்துறை
செயலரான வில்லியம் பெரி.
ஆயுதங்கள் செய்வோம்!
பனிப்போர் ரூல்ஸ் காரணமாக அணு ஆயுதங்களை கைவிட்ட
அமெரிக்கா இவ்வாண்டிலிருந்து நவீன ஏவுகணைகளை அப்டேட்டாக தயாரிக்கும் பிளானில் உள்ளது. Nuclear Posture Review (NPR) எனும்
பாதுகாப்புத்துறை அறிக்கை தகவல் தெரிவிக்கிறது. இதில் கடலிலிருந்து
நகரங்களை தாக்கும், ராடாருக்கு தண்ணி காட்டும் ஏவுகணைகள் இரண்டின்
தயாரிப்பு பற்றி குறிப்பிட்டிருக்கிறது. கடந்தாண்டு நவ.
8 அன்று நேட்டோ அமைப்பைச் சேர்ந்த 29 நாடுகள் பங்கேற்ற
ரகசிய கூட்டத்தில் ஏவுகணை ஆராய்ச்சிக்கான அனுமதியை பாதுகாப்புத்துறைக்கு வழங்கினார்
அதிபர் ட்ரம்ப்.
ஆனால் அதேவேளையில் 1987 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ரொனால்ட் ரீகன் மற்றும் ரஷ்யாவின் மிகைல் கோர்ப்பசோவ்
செய்துகொண்ட அணு ஆயுதஒப்பந்தத்தை(INF) ரஷ்யா மீறிவிட்டது என்று
குற்றஞ்சாட்டிய பென்டகன், அதற்கு ஆதாரமாக மேற்கு ரஷ்யாவிலுள்ள
கபுஸ்தின் ராக்கெட் ஏவுதளத்தில் தயாரிக்கப்பட்ட SSC-8 ஏவுகணைகளை
உதாரணம் காட்டியது. மேற்சொன்ன அக்ரிமென்ட் கையெழுத்தான காலத்தில்
5,503 கி.மீ பாயும் 2,600 அணு ஆயுதங்களை அமெரிக்காவும், ரஷ்யாவும் வைத்திருந்தன.
இவை ஐரோப்பாவை பப்படமாக்க பத்துவரை விரல்விட்டு எண்ணினால் போதும்.
நியூ ஸ்டார்ட் ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளில் காலாவதியாக
இருப்பதால், ட்ரம்ப்பின் தலைமையில் அமெரிக்கா, அணு ஆயுதங்களை செறிவூட்டத்தொடங்குவது மிகவிரைவிலேயே நடக்கும். ஐஎன்எஃப் அக்ரிமென்ட்டை ரஷ்யா பின்பற்றாதபோது, அமெரிக்கா
எதிர்காலத்திலும் புதிய ஒப்பந்தத்தை ரஷ்யாவோடு செய்துகொள்ளாது."சர்வதேச ஒப்பந்தங்கள் மீறப்படுவது தீவிரமான ஆயுதப்போர் சிக்கலில் உலகை தள்ளிவிடும்"
என்கிறார்கள் அமெரிக்காவின் முன்னாள் செனட்டர்களாக சாம் நுன் மற்றும்
ரிச்சர்ட் லூகர்.
ரெடி டூ அட்டாக்!
ரஷ்யா RS-28 Sarmat எனும்
கண்டம் தாண்டும் ஏவுகணைகளை நிலம், நீர், ஆகாயம் ஆகிய வழிகளில் ஏவுவதற்கான டிரில்லை தொடங்கிவிட்டது. உலகில் 93 சதவிகித அணு ஆயுதங்களை ரஷ்யாவும் அமெரிக்காவும்
வைத்திருக்கின்றன. மீதியை ஒன்பது நாடுகள் வைத்திருக்கின்றன.
1986 ஆம் ஆண்டில் 70 ஆயிரத்து 300 ஆக இருந்த அணு ஆயுதங்கள் அதன் பின்னர் பல்வேறு அணு ஆயுத தடுப்பு ஒப்பந்தங்களால்
14 ஆயிரத்து 550 ஆக சுருங்கின என்கிறது அமெரிக்க
அறிவியலாளர்கள் சங்க(FAS) அறிக்கை. "இன்று அமெரிக்கா-ரஷ்யா நாடுகளைக் கடந்து பல்வேறு நாடுகளும்
நியூக்ளியர் ரேஸில் உள்ளன. விதிகளை முறைப்படுத்தாதபோது அதன் விளைவுகளை உலகமே சந்திக்கும்"
என்கிறார் அறிவியலாளர்கள் சங்கத்தைச்சேர்ந்த ஹன்ஸ் கிறிஸ்டென்சன்.
ட்ரம்ப் இரானை முறைத்தால் டெஹ்ரான் தனது நியூக்ளியர்
ஆராய்ச்சியில் முழு முனைப்பாக இறங்கும். இரானின் எதிரியான
சவுதி அரேபியா, தனது அணு ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு வழங்கினால்
அது இந்தியாவுக்கு பாதகம். இதோடு ஆசியாவின் மகுடமில்லாத ராஜாவான
சீனா, ஜின் கிளாஸ் என்ற அணுஆயுதக் கப்பலோடு ரெடி டூ அட்டாக் என
தயாராக நிற்கிறது. அமெரிக்காவுக்கு புதிய சவலாக உருவாகியுள்ள
வடகொரியா 23 ஏவுகணைகளை சோதித்துள்ளது. இதில்
பதினாறு டெஸ்ட்கள் ட்ரம்ப் அமெரிக்கா அதிபரானபின் நடைபெற்றவை.
வடகொரியாவின் வீராப்பு!
2006 ஆம் ஆண்டில் முதன்முதலாக அணுகுண்டு தயாரித்த
வடகொரியா கடந்தாண்டு நவ.28 ஆம் தேதி சோதித்த
Hwasong-15 ஏவுகணையின் தாக்குதல் தூரம் 13 ஆயிரம்
கி.மீ. அமெரிக்காவின் நியூயார்க்
(அ) வாஷிங்டனையோ கூட ஒரு பட்டனில் தாக்கமுடியும்
என்பது இதன் சக்தி. அமெரிக்கா மற்றும் ஆதரவு நாடுகள் எக்கச்சக்க
பொருளாதார தடைகளை விதித்தும் வடகொரியா பவரான ஏவுகணையை எப்படி உருவாக்குகிறது?
இரவுகளில் மின்சாரமில்லாமல் தடுமாறும் பல்வேறு அடிப்படை வசதிகளுக்கே
பிற நாடுகளை நம்பியுள்ள வடகொரியா மூன்றாம் உலகப்போருக்கான விஷ விதைகளை விதைத்துகொண்டே
செல்கிறது பலருக்கும் புதிர்தான். சிரியாவிற்கு தன் நியூக்ளியர்
அறிவை விற்க ரெடியாகிவிட்ட கிம்முக்கு ஃபுல் சப்போர்ட் தருவது ரஷ்யாதான். ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் என்கொயரிகளுக்கு முட்டுக்கட்டை
போட்டு, "வடகொரியா தன்னை எதிரி நாட்டிடமிருந்து பாதுகாக்க
ஆயுதங்களைத் தவிர்த்து வேறு வழியில்லை" என்று ரஷ்ய அதிபர்
புதின் பேசி வருகிறார். பியோங்யாங் ஏரியாவிலுள்ள அபரிமித யுரேனியம்
கூடவே ஆயுதங்களை அமைக்க பாகிஸ்தான் மற்றும் உக்ரைன் விஞ்ஞானிகளையும் வடகொரியா பயன்படுத்திக்கொள்கிறது.
தூண்டிவிடும் ரஷ்யா!
1990 களில் சோவியத் யூனியன் வீழ்ந்தபிறகு,
அங்கும் உக்ரைனிலும் வேலையிழந்த இருபதாயிரத்திற்கும் மேலான விஞ்ஞானிகளை
வடகொரியா அழைத்துக்கொண்டது. "சோவியத்தின் அணு ஆயுத ஞானம்
கொண்ட விஞ்ஞானிகளுக்கு எங்கும் மதிப்புண்டு. அவர்கள் தங்கள் அறிவுக்கான
நல்ல விலையை தேடியிருப்பார்கள்" என்கிறார் உக்ரைனுக்கான
முன்னாள் அமெரிக்க தூதரான கார்லோஸ் பாஸ்கல்.
வடகொரியாவின் புதிய ஏவுகணைகள் பற்றிய போட்டோக்கள், அதில் ரஷ்யாவின் 1960 கால RD-250 எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளதா ஆராய்ச்சியாளர்களுக்கு டவுட்டை ஏற்படுத்தியுள்ளன.
கிழக்கு உக்ரைனிலுள்ள யூமாஸ் என்ற இடத்தில் 200 ஏவுகணை எஞ்சின்கள் பாதுகாக்கப்படுகின்றன. பனிப்போருக்கு
பிறகு இங்கு ராக்கெட், ஏவுகணைகள் தயாரிக்கும் பணி நின்றுபோக,
பல ஆட்கள் வெளியேறிவிட்டனர். ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கு
உள்ள நெருங்கிய தொடர்பால், ஏவுகணை எஞ்சின்கள் வடகொரியாவுக்கு
கடத்தப்பட்டதா என்ற விசாரணையை அரசு தானே முடித்துக்கொண்டுவிட்டது.
அமெரிக்காவுடனான ரஷ்யாவின் ஒப்பந்தத்திற்கு பிறகு
யூமாஸ் ஃபேக்டரியில் ஆட்கள் குறையத்தொடங்கிவிட்டனர் "2014-17 வரையிலான காலகட்டத்திலும் எஞ்சினியர்கள், வெல்டர்கள்
என ஆயிரக்கணக்கிலான திறமையான ஆட்களை இழந்துவிட்டோம்" என்கிறார்
யூமாஸ் ஃபேக்டரி தயாரிப்பு நிர்வாகியான ஆலெக் லெபதேவ்.
வெறும்
கைகளால் ராக்கெட்டின் சைஸ் அளந்து செய்யப்படும் வறுமை நிலை. "வடகொரியா மட்டுமல்ல மேலும பல நாடுகளிலும் ராக்கெட் செய்வதற்காக நாங்கள் உதவிவருகிறோம்.
இது புதிதான ஒன்றல்ல. இப்பணியில் எக்கச்சக்கமான
பணம் கிடைக்கிறது" என்கிறார் தொழிலாளர்களின் தலைவரான யூரி
சிம்வோலோகோவ்.
சோவியத் யூனியன் கலைந்தபோதே இயற்பியல் விஞ்ஞானி
அனடோலி ரூப்ட்சோவ் என்பவரை வடகொரியா பெய்ஜிங் மாநாட்டிற்கு அழைத்து பின்னர் தன் நாட்டில் பணியமர்த்திக்
கொண்டது. 1992 ஆம் ஆண்டு அனடோலியின் பரிந்துரைப்படி பணியாற்றச்
சென்ற 60 விஞ்ஞானிகளை அமெரிக்காவின் நிர்பந்தத்தினால் ரஷ்யா மாஸ்கோ
ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தியது. தன் விஞ்ஞானிகளை வடகொரியாவுக்கு
பார்டர் திறந்து ரஷ்யா அனுப்பக்காரணம், அன்றிருந்த படுபாதாள பொருளாதார
நிலை. பதறிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் 1993
ஆம் ஆண்டு விஞ்ஞானிகளுக்கு மானிய உதவிகளை வழங்கியது என்றாலும் இத்தொகை
பெரியளவு பயனளிக்கவில்லை.
பாசத்தின் சீக்ரெட்!
யூரி இர்ஸ்னோவிச் கிம் என்ற பெயரில் வடகொரியா அதிபர்
பிறந்து வளர்ந்ததே ரஷ்யாவிலுள்ள யாட்ஸ்கோ எனும் கிராமத்தில்தான். கிம், புதினுடன் தன் நியூக்ளியர் கனவுகளை வெளிப்படையாக
பகிர்ந்துகொண்டார். ஐ.நா சபை வடகொரியாவை
தடைகளால் நெருக்கடி தரும்போது அதனை மறைமுகமாக ஆதரித்து காப்பாற்றுவது ரஷ்யா மட்டுமே.
2000 ஆண்டில் புதின் ரஷ்ய அதிபரானதிலிருந்து வடகொரியாவுடன் அதிக நெருக்கம்
காட்டிவருகிறார்.
கடந்த
அக்டோபரில் ரஷ்யா, வடகொரியாவுக்கு இன்டர்நெட் வசதியையும் அளித்து
சீனா சார்பை சாதுர்யமாக குறைத்துள்ளது. மேலும் வடகொரியா கப்பல்களுக்கான
எரிபொருளையும் ரஷ்யா வழங்கிவருகிறது. "வடகொரியாவை எதிரியின்
எதிரியாக மாற்றி அமெரிக்காவை அலைகழிக்கிறது ரஷ்யா" என்கிறார்
முன்னாள் ரஷ்ய தூதரான ஜார்ஜி குனாட்ஸ். வடகொரியா பிரச்னையின்போது
ரஷ்யா உக்ரைனை கைகாட்டுவது, உக்ரைன் ரஷ்யாவைப் பார்த்து கைகாட்டுவது
மாறாமல் நிகழும் நிகழ்ச்சி. யுத்தம் என்பது உறுதி, மீதியுள்ளது கூட்டணிகள் மட்டுமே.
போருக்கு ரெடியா?
அமெரிக்கா - 6,800 (நீர்மூழ்கி,விமானங்கள்,ஏவுகணைகள் உட்பட)
ரஷ்யா - 7,000
இங்கிலாந்து -215(D5 ஏவுகணைகள்,அணு நீர்மூழ்கிகள்)
பிரான்ஸ் - 300(M51 ஏவுகணைகள்)
இஸ்ரேல் -
80, பாகிஸ்தான்- 140, இந்தியா - 130, வடகொரியா - 15, சீனா - 270
தொகுப்பு: பியர்சன், விநோதா சாமிநாதன்
நன்றி: குங்குமம்
புகைப்படங்கள் உதவி: அசோசியேட் பிரஸ்
வடிவமைப்பு: வேதராஜன்,சிவகுமார்