அஸ்கா அழகி!






Image result for beauty



நெருப்பு அழகி!

சீரியஸாக நடைபெறும் ஜாலி என்டர்டெயின்மென்ட் என்றாலும் அதிரிபுதிரி காமெடிகள் நடக்க கூடாதா என்ன? அப்படித்தான் எல் சால்வடோர் நாட்டிலும் அழகிப்போட்டி நடந்தது.

பீச்களுக்கு புகழ்பெற்ற மத்திய அமெரிக்காவிலுள்ள எல்சால்வடோர் நாட்டில் பூனைநடை அழகிகள் கெத்தாக பங்கேற்ற அழகிப்போட்டி நடைபெற்றது. ஓய்யார அழகியின் அருகே ஒலிம்பிக் தீபம் ஏந்தியவரின் கையிலிருந்த நெருப்பு, சிறிது காற்றுக்கு அசைந்து அழகியின் கிரீடத்தின் மீது லைட்டாக பட்டுவிட்டது.


கிரீடத்தில் குபுகுபுவென பற்றிய தீயை போட்டோகிராபர் கண்டு பீதியாகி அலறினார். தீப்பற்றியது தெரியாமல் புன்னகைத்தபடி அன்னநடை போட்டு வந்த அழகிக்கு விஷயத்தை நிகழ்ச்சி அமைப்பாளர் சொல்லி தலைகீரிடத்தை தட்டிவிட, ஸ்டேஜ் ரணகளமானது. பின் தீயை அணைத்து மீண்டும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அழகிக்கே ஆபத்து! 

2
போலியோ ஹீரோ!-ரோனி

டெல்லியின் செயின்ட் ஸ்டீபன் மருத்துவமனையில் போலியோ வார்ட்டில் சிறிய சுத்தியலும், டேப் மீட்டருமாக சுற்றும் வர்கீஸ் மேத்யூவை பார்த்தால் டாக்டர் என்றே யாருக்கும் நம்பத்தோன்றாது. போலியோவை ஒழிக்கும் சூப்பர் ஹீரோ என பில்கேட்ஸ் அண்மையில் தனது வலைப்பதிவில் வர்க்கீஸ் மேத்யூவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

"பில்கேட்ஸின் இந்த அங்கீகாரம் பல மருத்துவர்களை போலியோ நோயாளிகளுக்கான சிகிச்சைக்கு அழைத்து வரும் என நம்புகிறேன்" என புன்னகையோடு பேசும் வர்க்கீஸ், இந்தியாவின் ஒரே போலியோ வார்ட்டை ஸ்டீபன் மருத்துவமனையில் பராமரித்து வருகிறார். 1987 ஆம் ஆண்டு எட்டு படுக்கைகளோடு உருவான இந்த போலியோ வார்ட்டில் ஆண்டுக்கு 4 லட்சம் பேர்களுக்கு சிகிச்சையும், 600 நோயாளிகளுக்கு போலியோ பாதிப்பு ஆபரேஷன்களும் இங்கு செய்யப்படுகின்றன. "விழிப்புணர்வு காரணமாக தற்போது போலியோ சீரமைப்பு நோயாளிகளின் எண்ணிக்கை 200 ஆக குறைந்துள்ளது" என மகிழ்கிறார் டாக்டர் வர்க்கீஸ் மேத்யூ.


 3
கறை பறித்த உயிர்!-ரோனி

போலீஸ் உங்கள் நண்பர்கள் என காவல்துறை நாடெங்கும் ஸ்டிக்கர் ஓட்டி ரோந்து வந்தாலும் உத்தரப்பிரதேச சம்பவம் அதில் களங்கம் சேர்த்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் சகாரன்பூர் அருகே சாலைவிபத்து பற்றி 100 க்கு போன் வந்தது. ஆனால் அங்குவந்த போலீஸ்காரர்கள், தங்கள் ரோந்து காரில் விபத்துக்குள்ளான இரண்டு இளைஞர்களை ஏற்றி, மருத்துவமனையில் சேர்க்க மறுத்துவிட்டார்கள்."நாள் முழுக்க ரத்தகறை படிந்த சீட்டில் எப்படி உட்கார்ந்திருப்பது. டெம்போ பிடித்து போங்களேன்" என பங்கஜ்,மனோஜ், இந்தர்பால் சிங் ஆகியோர் ஸ்பாட்டில் பேசும் வீடியோ, வெளியானதிலிருந்து நாடெங்கும் போலீஸார் மீது விமர்சனங்கள் அம்பாய் பாய்ந்து வருகின்றன. போலீசார் காப்பாற்றாததால் விபத்துக்குள்ளான இளைஞர்கள் அர்பித் மற்றும் சன்னி குப்தா ஆகியோர் அங்கேயே  இறந்துவிட்டனர். போலீசார் மூவரின் மீது டிஜஜி சுனில் இமானுவேல் என்கொயரிக்கு பரிந்துரைத்துள்ளார்.

4
புலிக்கு மரியாதை!-ரோனி

உத்தரப்பிரதேசத்தின் காவல்துறையைச் சேர்ந்த டைகர் என்ற லாப்ரடார் இனநாய், அண்மையில் காலமானது. அதற்கு தேசியக்கொடி போர்த்தி அரசு கௌரவத்துடன் அடக்கம் செய்தது பலருக்கும் நெகிழ்ச்சி தந்த நிகழ்வு.

டைகர் தனது பதினான்கு ஆண்டு ஆயுளில், 150 கேஸ்களை சிங்கிளாக தீர்த்து வைத்த சாதனை ரெக்கார்டுகளை கொண்டது. மேலும் இச்சாதனைகளால் சூப்பிரிடெண்ட் ஆஃப் போலீஸ் என்ற மரியாதை பெற்ற முதல் போலீஸ் நாய் டைகர் மட்டுமே. "2003 ஆம் ஆண்டு ஹைதராபாத்திலிருந்து உ.பிக்கு கொண்டு வரப்பட்டு பயிற்சியளிக்கப்பட்ட டைகர், பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியது. அதன் காவல்துறையில் அதன் பங்களிப்பிற்காக அதன் இறுதிச்சடங்கை குறையின்றி நடத்தி அஞ்சலி செலுத்தினோம்" என்கிறார் டிஜ்ஜி அலுவலகத்தைச் சேர்ந்த ராகுல் வஸ்தவா.

5
முதல் ரயில்வே கூலி பெண்!-ரோனி

பெண்கள் பல்வேறு துறைகளிலும் ஆட்சி செய்ய தொடங்கினாலும் சுமை தூக்குதல் போன்ற வேலைகளை நகரங்களில் துணிச்சலாக ஏற்று ஆண்களுடன் மல்லுக்கட்டிச் செய்யும் பெண்கள் குறைவு. தற்போது அந்த எண்ணத்தை உடைத்து எறிந்திருக்கிறார் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்தியா மராவி.

மத்தியப்பிரதேசத்தின் ஜபல்பூரிலுள்ள கட்னி ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றால், சந்தியா வியர்வை சிந்த லக்கேஜ்களை சுமந்து செல்லும் காட்சியை நீங்கள் பார்க்க முடியும். கணவர் இறக்கும்வரை வீட்டுவேலை மட்டுமே பார்த்துவந்த சந்தியா, அதற்கு பிறகு தனது மூன்று குழந்தைகளை வளர்க்க எடுத்த அவதாரம்தான் கூலி பெண். காலையில் விவசாய வேலைகளை செய்பவர், மாலையில் 45 கி.மீ பயணித்து ஜபல்பூர் சென்று அங்கிருந்து கட்னி ஸ்டேஷன் சென்று கூலியாக உழைத்துவருகிறார்.

தொகுப்பு: ரோனி ப்ரௌன்
நன்றி: குங்குமம்





Image result for austin powers