நேர்காணல்:"யானைகள் பயிர்களை அழிப்பது இயல்பானதுதான்"
முத்தாரம் நேர்காணல்
"யானைகள் பயிர்களை அழிப்பது இயல்பானதுதான்"ராமன் சுகுமார், சூழலியலாளர்.
தமிழில்:ச.அன்பரசு
ஆசிய
யானைகளைப் பற்றிய ஆராய்ச்சி செய்த பேராசிரியர் ராமன் சுகுமாரின் ஆய்வுக்கட்டுரை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நூலாக(1989)
வெளியாகி உள்ளது. சிகாகோ உயிரியல் சங்கத்தின் பரிசு பெற்றுள்ள ராமன் சுகுமார்,
மனிதர்களுக்கும் யானைகளுக்கிடையேயான முரண்பாடுகளை பற்றி கட்டுரைகளும், நான்கு நூல்களையும் எழுதியுள்ளார். இந்திய அறிவியல் கழகத்தில் எட்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
யானைகள் பாதுகாப்பில் உங்களுக்கு எப்போது ஆர்வம் ஏற்பட்டது?
நான்
சிறுவயதில் சென்னை மற்றும் மும்பை நகரங்களில் வளர்ந்தேன்.
முதலில் ஆர்வம் ஏற்பட்டது,
விண்வெளி மற்றும் டெக்னாலஜி தொடர்பாகத்தான். விமானி அல்லது ஆராய்ச்சியாளர் என்பதுதான் என் பால்ய லட்சியம்.
பதினாறு வயதில் அடையாறில் வசித்தபோது,
ரேச்சல் கார்சனின் Silent
spring, ஜேன்
குட்ஆலின் In the Shadow of Man, ஜார்ஜ் ஹாலரின் the deer and tiger ஆகிய நூல்களை வாசித்திருந்தேன். லயோலா, விவேகானந்தா கல்லூரியில் தாவரவியல் முதுகலை பெற்றபின்,
பிஹெச்டி செய்வதற்கான ஆய்வுதான் யானை- மனிதர்களுக்கிடையேயான தொடர்பு.
ஆராய்ச்சியை பற்றி சுருக்கமாக கூறுங்கள்.
யானைகள்
மனிதர்கள் விளைவிக்கும் பயிர்களை தேடி வரக்காரணம்,
காட்டில் உணவில்லை என்பதோடு, நெல்,ராகி போன்றவை ஊட்டச்சத்தான உணவுகள்(புரதம்,உப்பு) என்பதாலும்தான். யானைகள்-மனிதர்கள் இருவருக்குமிடையேயான தொடர்பு பற்றிய ஆய்வில் யானைகள் வேட்டைக்காரர்களால் வேட்டையாடப்படுவது, ஆண்,பெண் யானை விகிதம்,
அதன் வாழிடம், ஊட்டச்சத்து, சூழலியல் மாற்றம் ஆகிய தரவுகளும் உண்டு. ஆண் யானை பல
பெண் யானைகளுடன் உறவுகொள்ளும் வழக்கம் கொண்டது.
மதநீர் சுரப்பது இணைசேரும் பருவகாலத்தில்தான்.
வெப்பமயமாதல் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகளை செய்துள்ளீர்கள். அது பற்றிய தகவல்களை கூறுங்களேன்.
1982 ஆம் ஆண்டு நீலகிரி மலையில் யானை ஒன்று இறந்துபோனதை கண்டுபிடித்தத்திலிருந்து தொடங்கியது. அங்குள்ள தாவர இனங்களை ஆராயத்தொடங்கினேன். ஏறத்தாழ பதினெட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகம் இன்றிருப்பதைவிட குளிர்ந்த நிலையில் இருந்திருக்கக்கூடும். இன்று இங்குள்ள தாவரங்கள் அப்போது இன்னும பேரளவில் இருந்திருக்கும். எண்பதுகளின் பிற்பகுதியில் அங்கேயே தங்கி ஆராய்ச்சி செய்வதற்கான குடில்களை அமைத்தேன்.
அடுத்த ஆண்டு ஜப்பான் செல்லவிருக்கிறீர்கள். அங்கு உங்கள் பணி என்ன?
காட்டுயிர் பாதுகாப்பில் சூழலியல் மற்றும் சமூகம் சார்ந்த செயல்பாடு குறித்த புத்தகத்தை தற்போது எழுதிவருகிறேன். ஜப்பானின் கியோடோ பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராக பணிபுரிந்து வருகிறேன்.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்தியாவுக்கு வருவது வழக்கமாக உள்ளது.
இயற்கை கண்காணிப்பகம் எத்தனை இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது?
2009 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷிடம் முதுமலை குறித்த பிரசன்டேஷனை காட்டினேன்.
இது தொண்ணூறுகளில் நானும் எனது ஆராய்ச்சி மாணவரும் இரண்டு ஆண்டுகளாக சேர்ந்து செய்த ஆராய்ச்சி.
காஷ்மீரின் தால் ஏரி, உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலின் மேற்கு மலைத்தொடர்கள், அருணாசல பிரதேசத்தின் வடகிழக்கு பகுதி, அந்தமான் நிகோபார் தீவுகள், குஜராத், ராஜஸ்தான், மாங்குரோவ் மற்றும் சுந்தரவனக்காடுகள் ஆகியவற்றில் அரசு கண்காணிப்பகங்கள் அமைக்கப்படவிருக்கின்றன.
தொகுப்பு: பெத்தீதா, கார்லோஸ் தியோதோச்சி
நன்றி: முத்தாரம்