முதல் ஆப்பிரிக்க அமெரிக்க நடிகர் ஸ்டீபன்!
மகாநடிகன் ஸ்டீபன்!
சிட்னி பாய்ட்டர், டென்ஷில்
வாஷிங்டன் ஆகிய ஆப்பிரிக்க அமெரிக்க நடிகர்களுக்கு முன்பே மக்களிடம் தன் நடிப்புக்கு
லட்சோபலட்சம் லைக்ஸ் வாங்கியவர் லிங்கன் பெரி(1902-1985). ப்ளோரிடாவின்
கீவெஸ்ட் பகுதியில் பிறந்த முதல் ஆப்பிரிக்க அமெரிக்க நடிகர் லிங்கன் பெரி.
திரைப்படங்களுக்காக தனது பெயரை ஸ்டீபன் ஃபெட்சிட் என மாற்றிய இவர் கறுப்பின
மில்லியனரும்கூட.
பால்யத்திலிருந்தே
தந்தையிடமிருந்து கற்ற பாட்டும் நடனமும் அவரை டென்ட் ஷோக்களில் கதாநாயகனாக்கியது. 1920 ஆம்
ஆண்டில் ஃபாக்ஸ் ஸ்டூடியோஸின் நிகழ்ச்சிக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் வந்தார் ஸ்டீபன்.
ஸ்க்ரீன் டெஸ்டில் பாஸாக, நடிப்பு வேட்டை ஆரம்பம். ஃபாக்ஸ் ஸ்டூடியோவின் அக்ரிமெண்ட்டோடு நாற்பது படங்களுக்கு மேல் நடித்தார்.
“The Laziest Man In The World” என்ற படத்தின் கேரக்டர் இவரை செலிபிரிட்டியாக்கியது.
பணம் குவிய காஸ்ட்லி கெடிலாக் கார்(பிங்க் நிறம்) வாங்கி அதில் தன் பெயரை நியான் விளக்குகளில் ஒளிரவிட்டார். வீட்டில் பதினாறு வேலைக்காரர்களையும் வைத்திருந்தார் என கிசுகிசு எழுதினார்கள்.
1930 க்குப் பிறகு கறுப்பர்-வெள்ளையர் பிரச்னை
வெடிக்க, கறுப்பர்களை சோம்பேறியாக, வேலையற்றவராக
சித்தரிக்கிறார் ஸ்டீபன் என விமர்சனங்கள் கிளம்பியது. "சார்லி சாப்ளின் வேலையற்றவராக
நடித்தார் என்பதற்காக வெள்ளையர்கள் அப்படி இருக்கிறார்கள் என்று அர்த்தமல்ல.
என் கேரக்டர் என்னவோ அதனை நான் செய்தேன்" என 1968 ஆம் ஆண்டு பேட்டி கொடுத்தார் ஸ்டீபன்.
தன் சினிமா அனுபவங்களை சிகாகோ டிஃபெண்டர் என்ற தினசரியிலும் தொடராக எழுதினார்.
தொகுப்பு: வில் கெய்ன், நாதர்ஸ்டீன்
நன்றி: முத்தாரம்