வங்கி மோசடிகளின் பின்னணி என்ன?
கார்டூன்: மஞ்சுள் |
வங்கி மோசடிகளின் பின்னணி என்ன? -ச.அன்பரசு
பிரபல
பொதுத்துறை வங்கி வைர வியாபாரிக்கு கொடுத்த வாராக்கடன் விவகாரம் அண்மையில் எரிமலையாக வெடித்துள்ளது. இந்த வங்கி மோசடி, வங்கிகளைக் கண்காணிக்கும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா மற்றும் நிதி அமைச்சகத்துக்குமான உறவில் மறைமுக மோதலை ஏற்படுத்தியுள்ளது. நீரவ் மோடி விவகாரம் லீக்கான உடனே பேனா நிறுவனரான விக்ரம் கோத்தாரி ஏழு வங்கிகளில் பெற்றுள்ள
3 ஆயிரத்து 695 கோடி ரூபாய் வாராக்கடனும் மீடியாக்களின் லைம்லைட்டிற்கு வந்துள்ளது.
கடந்த
சில ஆண்டுகளாக தொழிலதிபர்களுக்கு கடன் கொடுத்த வங்கிகள்,
வட்டியைக்கூட வசூலிக்க முடியாமல் வாராக்கடன் என எழுதிவிடுவது வழக்கம்.
இழப்பீட்டை மெல்ல மக்களின் தலையில் கட்டுவது வங்கிகளின் ஓனரான இந்திய அரசின் ஜென்டில்மேன் பணி. வைர வியாபாரி நீரவ் மோடி கடனாக பெற்ற 11 ஆயிரத்து 300 கோடி ரூபாயையும் திடீரென ஏதோ காக்கை வடையைப் போல தூக்கிக்கொண்டு போகவில்லை.
சிறுகச்சிறுக ஏழு ஆண்டுகளாக ஆர்பிஐயின் விதிகளை காலில் மிதித்து வங்கி அதிகாரிகள் மூலம் நீரவ் மோடிக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.
வங்கி
விவகாரம் லீக்கானதிலிருந்து கள்ள மௌனம் சாதித்து வந்த ஆர்பிஐ,
அண்மையில் தனது இணையதளத்தில் ஆகஸ்ட்
2016 அன்றிலிருந்து கடன் முறைகேடு குறித்து மூன்று முறைக்கு மேலாக வங்கிகளை எச்சரித்துள்ளதாக கூறியுள்ளது. வாராக்கடன் விவகாரம் பூதாகரமாக கிளம்பும் ஒவ்வொருமுறையும் ஆட்சியிலுள்ள அரசு ஆர்பிஐ மீது பழியைத் தூக்கிப் போடுவதும்,
ஆர்பிஐ நிதி அமைச்சகத்தை கைகாட்டுவதும் வழக்கமாகிவிட்ட நிலையில் வங்கியில் பாதுகாப்பாக இருக்கும் என
தன் வாழ்நாள் சேமித்து வைத்துள்ள மக்களின் கதி என்ன?
1969 ஆம் ஆண்டு ஜூலை
19 அன்று முதன்முதலில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, வங்கி சட்டத்தை திருத்தி பதினான்கு வங்கிகளை தேசியமயமாக்கி வங்கி முதலீடுகளை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். என்ன காரணம்?
1947-1955 ஆம்
ஆண்டு வரை இயங்கிய 361 வங்கிகள் ஆண்டுக்கு நாற்பது வங்கிகள் என
திவாலாகி மக்களின் சேமிப்பை ஏப்பம் விட்டு மஞ்சள் நோட்டீஸைக் கொடுத்து தலைமறைவாயின. அதோடு வணிகரீதியிலான தொழில்களுக்கு கடன் கொடுத்த வங்கிகள் விவசாயத்துக்கு சல்லிப்பைசாவைக் கூட தர
மறுத்தன. 1950-67 வரை வங்கிகள் கொடுத்த விவசாய கடன் அளவு
2.3%- 2.2%. தேர்தல்
வெற்றிக்கு இத்திட்டம் இந்திராகாந்திக்கு உதவியது போல மக்களுக்கு எதார்த்தத்தில் உதவவில்லை என்பதே நிஜம்.
2016 ஆம் ஆண்டு வங்கதேசத்தின் மத்திய வங்கியில்
525 கோடி இணைய பரிமாற்றமுறையில் நுட்பமாக கொள்ளையடிக்கப்பட்டது. அப்போதே, இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளின் கம்ப்யூட்டர் நெட்வொர்க்குகளை சரியான முறையில் ஸ்விப்ட்(Swift)
முறையில் இணைக்க அட்வைஸ் செய்தது.
உலகெங்கும் இணைய கொள்ளையர்களின் திருட்டைக் கண்டறிய உதவுவது இம்முறைதான். "பேங்கிலுள்ள மென்பொருளையும் ஸ்விஃப்ட்டையும் இணைக்காதபோது நடந்த முறைகேட்டை கண்டுபிடிப்பதே மிக சிரமம்."
என தகவல் சொல்லுகிறார் EY நிதிச்சேவை அமைப்பைச்சேர்ந்த அபிஷர் திவான்ஜி.
தற்போதைய பிரச்னையில் வங்கியின் முன்னாள் ஊழியரான கோகுல்நாத் ஷெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். 2011-17 காலகட்டத்தில் முதல் தவணையாக
4 ஆயிரத்து 230 கோடி ரூபாயையும் பின்னர் கடந்தாண்டு மார்ச்
-மே மாதம் வரையில் 3 ஆயிரத்து 188 கோடி ரூபாய்களையும் முறையான ஆவணங்களின்றி வெளிநாட்டிலுள்ள மோடியின் நிறுவனத்திற்கு கடனாக கொடுத்துள்ளார் கோகுல். "பொதுத்துறை வங்கிகள் ஸ்விஃப்ட் சிஸ்டத்தோடு தம்மை இணைத்துக்கொண்டிருந்தால் பணம் ட்ரான்ஸ்பராகும் தகவல் எளிதில் கிடைத்திருக்கும்" என்பது ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான காந்தியின் கருத்து.
வங்கிகள் ஏன் தம் கம்ப்யூட்டர்களை, பாதுகாப்பு மென்பொருட்களை அப்டேட் செய்வதில்லை? காரணம், முதுகை அழுத்தும் நிதிச்சுமைதான். பொதுத்துறை வங்கிகள் பல்லாண்டுகளாக எக்கச்சக்க வாராக்கடன்களோடும் மினிமம் முதலீடுகளோடும் அரசின் முறையற்ற நிதிக்கொள்கைகளோடு போராடி வீழ்ந்து வருகின்றன என்பதே உண்மை. அரசும், ஆர்பிஐயும் கரம்கோர்த்து கடன்விதிகளை கறாராக உருவாக்கினால் மட்டுமே பொதுத்துறை வங்கிகள்
மக்களின் நம்பிக்கையை இழக்காமல் பிழைக்கும்.
பணத்திற்கு பாதுகாப்பு!
1973 ஆம் ஆண்டு 15 நாடுகளிலுள்ள 239 வங்கிகள் நாடுகளைத் தாண்டிய பணப்பரிமாற்றத்திற்கு தீர்வு காண பெல்ஜியத்தை குவார்டர்ஸாக கொண்டு the
Society for Worldwide Interbank Financial Telecommunication (Swift) என்ற நிறுவனத்தைத் தொடங்கினர். டெலக்ஸ் தொழில்நுட்பத்திற்கு மாற்றாக ஸ்விஃப்ட்,
நாடுகளிடையே பணப்பரிமாற்றத்தை சேஃப்டியாகவும், வேகமாகவும் வங்கிகளுக்கு அனுப்புகிறது. இன்று 200க்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள 11 ஆயிரம் நிதி நிறுவனங்களின் சேவைகளை குறைந்த செலவில் ஒருங்கிணைக்கிறது ஸ்விஃப்ட் நிறுவனம்.
வாராக்கடன் வளர்ச்சி!(கோடிகளில்)
பஞ்சாப்
நேஷனல் வங்கி - 843(2013), 12,232(2017)- 95.13%
பாரத
ஸ்டேட் வங்கி - 11,328(2013), 27,716(2017) -25.07%
பொதுத்துறை வங்கிகள்-
9,138(2013), 65,641(2017) -62.92%
தனியார்
வங்கிகள் - 5,817(2013), 14,508(2017)-25.67%
மொத்த
வங்கிகளின் கடன் - 28,416(2013), 1,11,738(2017)-45.82%
(செப்.30,2013- செப்.30,2017 வரை)
(TransUnion CIBIL 2017 data)
தொகுப்பு: வில்லியம்சன், கீனு ரேஜ்
நன்றி: குங்குமம்