நியூஜென் துறவிகள்- சமணத்தில் துறவு எப்படி சாத்தியமாகிறது?
புதிய தலைமுறை துறவிகள்!- ச.அன்பரசு
அண்மையில் மும்பையில் சமண மதத்தைச் சேர்ந்த பதினாறு
நபர்கள் புத்தம்புது துறவியாக தீக்ஷை பெற்றுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோரின் வயது முப்பதே முப்பதுதான். துறவியான அனைவருமே தொழிலில், கல்வியில், பணியில் அத்தனையிலும் டாப் பொசிஷனில் இருப்பவர்கள். ஏன்
தங்கள் பணியை, சொத்துக்களை விட்டு பிச்சைப்பாத்திரம் ஏந்த விரும்புகின்றனர்?
மும்பை புறநகரான போரிவலியில் அமைந்துள்ள சிம்பொலி
கிரிக்கெட் மைதானம். விஐபி வீட்டு கல்யாணம் போல சொகுசு
கார்களில் ஜிகுஜிகு சேலைகளில் முகம் மலர்ந்த சிரிப்புடன் பெண்கள் இறங்குகின்றனர்.
குளுமையான நிறங்களில் அமைக்கப்பட்டிருந்த சாமியானா பந்தலில் குழந்தைகள்
ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தனர். மெல்லியதாக இசை ஒலித்துக்கொண்டிருக்கும்
அந்த ஸ்பாட்டில்தான் பதினாறு துறவிகளின் வாழ்க்கை புத்தம் புதிதாக தொடங்கப்போகிறது.
ஆண்களும், பெண்களும் ஸ்ட்ரிக்ட்டாக
பிரிக்கப்பட்டு அமர்ந்திருந்த ஹாலில் பண்டிட் மகராஜின் தலைமையில் தீக்ஷை பூஜை அமளிதுமளியாக நடந்துகொண்டிருந்தது. கேமரா ட்ரோன்
ஒன்று நடக்கும் நிகழ்வுகளை இன்டர்வெல் இன்றி படம்பிடித்துக் கொண்டிருக்க, கூடியிருந்த பதினாறு பேரின் உறவினர்களிடம் எக்சைட்மெண்ட்டான ஆர்வம் மட்டுமே
முகத்தில் படிந்திருந்தது. ஒருமணிநேரம் நடக்கும் தீக்ஷைக்குப்
பிறகு, தலையை மழுங்கச்சிரைத்து குளிக்க அனுப்புவார்கள்.
அதன்பிறகு இத்துறவிகள் வாழ்நாள் முழுக்க நீரில் நனைத்த ஸ்பான்ச்சுகளால்
உடலை துடைத்துக்கொள்ள மட்டுமே முடியும். ஏன் பாஸ்? சமணர்களின் கடுமையான ரூல்ஸ் அப்படி.
துறவும் கடமையும்!
சமணத்தில் திகம்பரர், ஸ்வேதாம்பரர் என இரண்டு கேட்டகிரி உண்டு. திகம்பரர் பிரிவில்
நிர்வாண சாமியார்களும், ஸ்வேதாம்பரர் பிரிவில் வெள்ளுடை சாமியார்களும்
உண்டு. என்ன வேறுபாடு? பெண்கள் ஆண்களாக
பிறந்தால் மட்டுமே அவர்களுக்கு மோட்சம் என்பது திகம்பர மார்க்க கொள்கை. ஸ்வேதாம்பரர் மார்க்கம், பெண்களும் ஆண்களைப்போல லட்சியத்தில்
உறுதியாக இருந்தால் அவர்களுக்கும் மோட்சம் உண்டு என துறவி வாழ்க்கைக்கு வாய்ப்பளிக்கிறது.
அகிம்சை, உண்மை, திருடாமை,
பிரம்மச்சரியம், பற்றின்மை ஆகியவை இரு பிரிவுகளுக்குமான
பொது தத்துவம். சமணத்தில் துறவி என்றால் உடனே கட்டியதுணியோடு
உறவுகளை கைவிட்டு மரத்தடியில் அமர்ந்துவிடுவதில்லை. பலரும் குடும்பத்திற்கான
லௌகீக கடமைகளை செய்தபின்பே துறவு வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
சாத்விகளுக்கு கௌரவம்!
கணவரின் அனுமதி பெற்று கிரித்திகா தனது ட்வின்ஸ்
மகள்களோடு துறவி வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க இதிலுள்ள பெண்களுக்கான சுதந்திரம், மரியாதை முக்கிய காரணம். தீக் ஷை கொடுக்கப்பட்டவர்கள்
உறவினர்கள் சூழ்ந்திருக்கும் பாதையில் நடந்து வர, உறவுகள் பரவசத்துடன்
போட்டோ எடுத்து மகிழ்ச்சியுடன் கூச்சலிட மெல்லிய புன்முறுவலுடன் துறவிகள் தங்களுக்கான
பொருட்களை எடுத்துக்கொள்கின்றனர். ஒரு கிண்ணம், சிறிய வெள்ளைநிற துணி, நடக்க கோல் ஒன்று, உடலை சுத்தப்படுத்தும் டஸ்டர் இவையே ஆயுள் முழுக்க துறவிகள் பயன்படுத்தப்போகும்
பொருட்கள்.
"ஜெயின் சமூகத்தில் துறவியானவர்களில் பெர்க்கிலி,
ஆக்ஸ்ஃபோர்டு ஆகிய இடங்களில் படித்தவர்களும் உண்டு" என மிரட்டல் தகவல் சொல்லுகிறார் மும்பை பல்கலையைச் சேர்ந்த பிபின் ஜோஸி.
மோட்ச ரூல்ஸ் என்பதைத் தாண்டி பெண்களுக்கு ஸ்வேதாம்பரர்
பிரிவிலுள்ள சுதந்திரம் அதிகம். அதாவது, தொழில் போன்றவற்றில் அல்ல; துறவு வாழ்வை ஏற்பதில் மட்டுமே.
ஆண்டுதோறும் விரல் விட்டு எண்ணும்படி நடந்துவந்த ஜெயின் சமூகத்தினரின்
தீக்ஷை விழாக்களின் எண்ணிக்கை இன்று கூடியுள்ளது. அதிலும் ஆண்களுக்கு
இணையாக பனிரெண்டாயிரம் பெண்கள் சாத்விகளாக அதாவது துறவியாக மாறியுள்ளது நவீனகாலத்தில்
நிச்சயம் புதுமைதான்.
பெண்களுக்கு முன்னுரிமை!
"தற்போதுவரை பதினாறாயிரம் துறவிகள் தீக்ஷை பெற்றுள்ளனர். இதில் இரண்டு சதவிகிதத்தினருக்கும் குறைவானர்கள் பழைய வாழ்க்கைக்கு திரும்புகிறார்கள்.
ஒட்டுமொத்தமாகவும் துறவு வாழ்க்கையை ஏற்கும் பெண்களின் பங்கு அதிகம்"
என உறுதியாக பேசுகிறார் ஜோஷி. சரி, துறவு வாழ்க்கையை தேர்ந்தெடுத்து விட்டோம். திடீரென ஜூரம்,
டைபாய்டு என்றால் துறவிகளை யார் கவனிப்பது? அதற்கு
ஜீடோ(Jain International Trade Organization) எனும் தனி அமைப்பையே
நடத்தி வருகிறது ஜெயின் சமூகம். நோய்களின் தன்மைக்கேற்ப ஆயிரங்களிலிருந்து
கோடிகள் வரை செலவு செய்து துறவிகளுக்கு பயபக்தியுடன் மரியாதை செய்கிறது இவ்வமைப்பு.
"மாயா என பெண்களை குறிப்பிடுவது,
ஆண்களால் புனித பிம்பமாக பெண்களை மாற்றும் பிராமணியம் போலல்லாது ஜெயின்
சமூகம் பெண்களை தனித்துவமாக அணுகுகிறது" என்கிறார் பெண்
துறவிகளைப் பற்றி பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்தவரும், Escaping the world:
Women Renouncers என்ற நூலினை எழுதியவருமான மனிஷா சேதி. பெண்களின் துறவுபருவத்திற்கு கோமல் என்று பெயர். பிற
மதங்களைப் போலில்லாமல் ஜெயின் சமூகத்தில் பெண்கள் கன்னியாஸ்த்ரீயாக தானாக முன்வந்து
மாறுவது பெரிய கௌரவம். இதன் மூலம் உயர்கல்வி வாய்ப்பும்,
இந்தியா முழுக்க பயணிக்கும் வாய்ப்பும் பெண்களை ஈர்க்கிறது என்பது சேதியின்
கருத்து. ஒவ்வொரு தீக்ஷை விழாக்களில் கூடும்
மக்களிடம் அடுத்தடுத்த விழாக்களுக்கான நிதி பெறப்படுகிறது.
விழாவை தலைமையேற்று நடத்திவைத்த பண்டிட் மகராஜ், மரமேஜையின் முன்பு வெள்ளுடை உடுத்தி
அமர்ந்திருந்தார். அவரைச் சூழ்ந்திருந்த அனைத்திலும் வெண்ணிறமே
பிரதானம்.
பக்தரின் பனையோலை விசிறியில் காற்றுவாங்கியபடி நாளிதழை
வாசித்தபடி ஏறிட்டு பார்த்தவர், "அகிம்சை நாடுவதால் மின்சாரத்தையும்
ஏற்பதில்லை" என குழந்தையாய் புன்னகைக்கிறார் குருஜி.
எட்டு வயதிலிருந்து சமணத்தில் தீக்ஷை வழங்கப்படுகிறது.
"பற்றின்மையோடு வரும் அனைத்து சமூகத்தினருக்கும் ஒரே வாசல்தான்.
இதில் இணைபவர்களுக்கு நாங்கள் தீக்ஷை தவிர வேறு
எதுவும் வழங்குவதில்லை" மெல்லியதாய் வாக்கியத்திற்கிடையே
தலையசைத்து பேசுகிறார் குருஜி. இணையத்தில் தம் கொள்கைகளை விளக்கவும்,
செய்திகளை பகிரவும் ஜெயின் சமூகத்தினருக்கு என தனியே விவாத குழுக்களையும்
ஏற்படுத்தி உள்ளனர்.
சரி நல்லவேலையிலிருந்து, சொகுசு வாழ்க்கையிலிருந்து திடீரென துறவியானால் எப்படியிருக்கும் என ஐஐடி எஞ்சினியராக
இருந்து, துறவியான முனிராஜிடம் கேட்டோம். "சிறிய வீட்டிலிருந்து மிக பிரமாண்ட பங்களாவில் நுழைந்ததுபோல" என தனது தீக்ஷை நாளை நினைவுகூர்கிறார். நவீன வாழ்க்கையில் என்னதான் பிரச்னை ஏன் திடீரென துறவு முடிவு?
" இன்றைய சமூகம் பல்வேறு ஆசைகள் தேவைகள் என மனிதனை இடையறாது ஏமாற்றுகிறது.
உதாரணத்திற்கு முன்பு நான் பிஸினஸிற்காக விமானங்களில் பதட்டத்தோடு அலைந்து
திரிந்தேன். வெற்றுக்கால்களில் நடந்து சென்றாலும் மனதளவில் இறகுபோல
மகிழ்ச்சியாக உணர்கிறேன்" என்கிறார்.
நியூஜென் துறவிகள்!
வர்ஷில் ஷா(17)
பனிரெண்டாம் வகுப்பில் 99%
மார்க் எடுத்து சாதித்தவர், இன்று சுவிர்ய ரத்னா
விஜய்ஜி மகராஜ் என்ற பெயரில் துறவியாகிவிட்டார்.
மனாலி ரத்தோட்(24)
கோயம்பத்தூர் வர்த்தகரின் புதல்வி, இன்டீரியர் டிசைனர். 2013 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் தீக்ஷை எடுத்து துறவியானார்.
நிஷா கபாஷி(29)
அமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்த ஃபேஷன் வணிகர். பல முன்னணி ஃபேஷன் நிறுவனங்களில் பணியாற்றியர், இந்தியா
வந்து ஜெயின் தத்துவத்தில் ஆர்வமாகி, கன்னியாஸ்த்ரீயானார்.
ஸ்மித், அனாமிகா ரத்தோர்
நூறுகோடி சொத்துக்கள், மூன்று வயது குழந்தையை கைவிட்டு துறவு வாழ்க்கையை தேர்ந்தெடுத்த தம்பதி,
முன்னாள் குழந்தைகள் நல செயல்பாட்டாளர்கள்.
தொகுப்பு: வின்சென்ட் காபோ அண்ட் கோ
நன்றி: குங்குமம்