அரசியலமைப்புச்சட்டம் எப்படி உருவானது தெரியுமா?
அரசியலமைப்பு சட்டத்தின் ஓவியர்!- ச.அன்பரசு
குடியரசு இந்தியாவில் அரசின் கடமைகள்,அதிகாரங்கள், மக்களின் அடிப்படை உரிமைகள், நிர்வாக அமைப்புகளின் அதிகாரங்கள் என அனைத்திற்குமான ஆதாரம் அரசியலமைப்பு சட்டநூலேயாகும்.
பாராளுமன்றத்திற்கும் மேலான அதனைக் கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரம் கொண்டது
இதன் ஸ்பெஷல். பிரிட்டிஷ் அரசின் காலனியாதிக்க அதிகாரங்களை
(Government of India Act 1935) களைந்து முழு இந்தியாவுக்குமான தனித்துவ
சுதந்திரம் பிராக்டிக்கலாக கிடைத்த தினம், 1950 ஆம் ஆண்டு ஜனவரி
26.
பொக்கிஷ தயாரிப்பு!
ஆங்கிலேய இந்தியாவின் சுதந்திரச்சட்டத்திற்கு மாற்றாக
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அரும்பாடுபட்டு உருவாக்கிய பி.ஆர்.அம்பேத்கர், 1949 ஆம் ஆண்டு
நவம்பர் 25 அன்று குடியரசுத்தலைவர் ராஜேந்திர பிரசாத்திடம் அரசியலமைப்பு
நூலை ஒப்படைத்தார்.
இன்று பிரிவினைவாதிகள் அரசியலமைப்பு சட்டத்திலிருந்து
நீக்க கோரும் சோசலிச, மதச்சார்பற்ற, இறையாண்மை கொண்ட சுதந்திர குடியரசு வார்த்தைகள் முன்னர் பல்வேறு கலாசார வேற்றுமை
கொண்ட மக்கள் சகோதரத்துவத்துடன் சுதந்திரப்போராட்டத்தில்
ஈடுபட உதவின. இத்தனை பெருமைமிக்க அரசியலமைப்பு சட்டத்தை இடாலிக்
ஸ்டைலில் கையெழுத்து பிரதியாக ஒரு பைசாவைக்கூட கூலியாக பெறாமல் உருவாக்கிய தந்த அதிசய
மனிதர் பிரேம் பெஹாரி நரைன் ரைஸாதா.
சித்திரமொழி வித்தகர்!
1901 ஆம் ஆண்டு டிச.17 அன்று
பாரம்பரிய சித்திர எழுத்துக்கலையில் தேர்ச்சி பெற்ற குடும்பத்தின் வாரிசாக பிறந்தார்
பிரேம். சிறுவயதில் பெற்றோர் மரணிக்க மாமா நாராயண் சக்சேனா,
தாத்தா பர்ஷாத்ஜி சக்சேனா ஆகியோரின் பராமரிப்பில் வளர்ந்தார்.
ஆங்கிலம் மற்றும் பெர்சிய மொழியில் வல்லவரான தாத்தா பர்ஷாத்ஜி,
ஆங்கில அதிகாரிகளுக்கு ட்யூஷன் வைத்து பெர்சியன் மொழியை சொல்லித்தந்த
பெருமைக்குரியவர். டெல்லியின் புகழ்பெற்ற செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில்
பட்டம் பெற்ற பிரேம், தாத்தாவிடம் சித்திர எழுத்துக்கலையை கசடறக்கற்று
மாணவன் நிலையிலிருந்து மாஸ்டராக உயர்ந்தார். அப்போது பிரேம் பற்றி
கேள்விப்பட்ட பிரதமர் நேரு, அரசியலமைப்பு சட்டத்தை சித்திர எழுத்தாக
எழுதிதர கோரினார். யாருக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பு என உடனே
ஒப்புக்கொண்ட பிரேம் போட்டது ஒரே கண்டிஷன்தான்.
அழகு செய்த பேனா!
"நான் செய்யும் இந்தப்பணிக்கு ஒரு பைசாகூட
சம்பளமாக வேண்டாம். ஆனால் அரசியலமைப்பு சட்டத்தின் ஒவ்வொரு பக்கத்திலும்
எனது பெயரும், எனது தாத்தா பெயரும் இடம்பெறவேண்டும் என்பதே என்
ஒரே கோரிக்கை" என்றார் பிரேம். நேரு
சரி என தலையசைக்க, பிரேமின் வரலாறு போற்றும் பணி உடனே தொடங்கியது.
ஆறுமாதங்களில் சட்டவிதிகளை பல்வேறு புராண, வரலாற்று
சம்பவங்கள் சகிதமாக வரைந்து பணியை நிறைவு செய்தார் சித்திரக்கலைஞர் பிரேம்.
அதிகம் பயன்படுத்தப்பட்டது எண்.303 பேனா நிப்தான்;
இவை தவிர 254 பேனாக்கள் இப்பணிக்கெனவே இங்க் சிந்தி
உழைத்து ஸ்பெஷல் கௌரவம் பெற்றன.
1950 ஆம் ஆண்டு ஜன.24 அன்று
சித்திரக்கலைஞர் பிரேமின் ஆறுமாத உழைப்பில் உருவான அரசியலமைப்பு பிரதியில் அரசியலமைப்பு
குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர். இதில் முதல் கையெழுத்தை
பிரதமர் நேருவும், அரசியலமைப்பு அவையின் தலைவரான ஃபெரோஸ் காந்தி
இறுதி கையெழுத்தையும் இட்டுள்ளனர். பெரும்பாலானோம் கையெழுத்திட்ட
மொழி ஆங்கிலம்.
விதிவிலக்காக, புருஷோத்தம்தாஸ்
டாண்டன் ஹிந்தியிலும், அபுல்கலாம் ஆசாத் உருது மொழியிலும் கையெழுத்திட்டுள்ளனர்.
உறுப்பினர்கள் கையெழுத்திட்ட சட்டநூலின் தாள்கள் டேராடூனிலுள்ள சர்வே
ஆஃப் இந்தியா அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டன. இந்நூல் தற்போது
நாடாளுமன்ற நூலகத்தில் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இதிலுள்ள பல்வேறு ஓவியங்களுக்கு நந்தலால்போஸ் பொறுப்பு. வேதகாலம், மொகஞ்சதாரா முதல் காந்தியின் தண்டி யாத்திரை
வரை ஓவியங்கள் ஒவ்வொரு பக்கங்களிலும் தனித்துவ அழகு சேர்க்கின்றன. பக்கவடிவமைப்பு அனைத்தும் சாந்திநிகேதனின் கலைக்குழுவின் வசீகரமான கைவண்ணம்.
அசத்தல் கலைஞன்!
1882 ஆம்
ஆண்டு பிறந்த நவீனத்துவ கலைஞர்களில் குறிப்பிடத்தக்கவர் நந்தலால் போஸ். 1922
ஆம் ஆண்டு சாந்திநிகேதன் பள்ளியின் கலாபவனின் இயக்குநராக பணியாற்றினார்
நந்தலால். அஜந்தா ஓவியங்களின் மேல் தீராக்காதல் கொண்ட போஸ்,
இந்திய புராண நிகழ்வுகளை கிளாசிக் ஓவியங்களாக தீட்டுவதில் புகழ்பெற்றவர். சாந்திநிகேதன்
பள்ளியில் கலாபவன் இயக்குநராக 1922-1951 ஆம் ஆண்டுவரை பணியாற்றியவர்,
1954 ஆம் ஆண்டு பத்மவிபூஷன் விருது வென்றார். நேருவின்
வேண்டுகோளின்படி பத்மஸ்ரீ,பாரத ரத்னா ஆகிய விருதுகளின்
டிசைன்களை உருவாக்கினார் போஸ். குறைந்தபட்சம் 25 பைசா வரை ஓவியங்களை விற்றுள்ள போஸ், 1930 ஆண்டு
வரைந்த காந்தியின் போர்ரைட் புகைப்படம் அகிம்சை போராட்டத்திற்கு மிகப்பெரும்
உந்துவிசை.
தொகுப்பு: ரிச்சர்ட் வில்லீஸ், அன்னா ரீடா
நன்றி: குங்குமம்