ஆன்லைன் ஆர்மி!


Related image




ஆன்லைன் ஆர்மி!- .அன்பரசு


இன்று மிஸைல்களை ஏவி தாக்கும் விர்ச்சுவல் போர் ஒருபுறம் நடந்தாலும், இணையம் மூலம் சைபர் போர் நடத்தி நாட்டின் அரசு தளங்களை துளைத்து சீக்ரெட்ஸை அள்ளி தளத்தை காயலான் கடையாக்குவது எதிரி நாடுகளின் சாணக்கிய யுக்தி. தென்கொரியாவில் நடந்துவரும் ஒலிம்பிக் போட்டி கூட ஃபேன்சி பியர் உள்ளிட்ட சைபர் குழுக்களின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க முடியவில்லை.

Image result for Fancy Bear




சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேலுக்கும் அதே சிக்கல்தான். அந்நாட்டில் மின்சார பட்டுவாடா தானியங்கி முறையில் ஸ்மார்ட் கிரிட் தொழில்நுட்பத்தில் இயங்கி வந்தது. அதாவது, வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தில் ஏதேனும் பிரச்னை எழுந்தால் தானாகவே அதனை சரிசெய்யும தொழில்நுட்பத்தை கொண்டிருந்தது இஸ்ரேல் எலக்ட்ரிக் கார்ப்போரேஷன்(IEC).
பல்வேறு ஹேக்கர்களால் தொடர்ச்சியாக தாக்குதலுக்குள்ளாகி வந்த ஐஇசியைக் காப்பாற்ற என்ன செய்வதென தெரியாத நிலை. நேஷனல் இன்பர்மேஷன் செக்யூரிட்டி அத்தாரிட்டி(Nisa) யைச் சேர்ந்த முன்னாள் பணியாளர்கள் சைபர்ஜிம் நிறுவனத்தை தொடங்கினர். 2015 ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த சாண்ட்வார்ம் என்ற ஹேக்கர் குழு நடத்திய  இணைய தாக்குதலில் உக்ரைன் மின்சார நிறுவனத்தின் இரண்டு லட்சத்து இருபத்தைந்தாயிரம்  மக்களுக்கான மின்சப்ளையே நின்றுபோனது.

 2013 ஆம் ஆண்டு இச்சிக்கல்களை தீர்க்கவே ஹெஃப்ட்ஸிபா பண்ணை வளாகத்தில் சைபர்ஜிம் நிறுவனம் தொடங்கப்பட்டது. 49 ஆயிரத்து 440 கோடி மதிப்பு கொண்ட ஐஇசி நிறுவனத்தின் இணை நிறுவனராக சைபர்ஜிம் பொறுப்பேற்று நிர்வகித்து வருகிறது. "சைபர்ஜிம் மின்சார நிறுவன ஊழியர்களுக்கு இணைய கொள்ளையர்களுக்கு எதிராக போராட பயிற்சி அளிக்கிறது" என்கிறார் சைபர்ஜிம்மின் இயக்குநரான ஆஃபிர் ஹாசோன். நீலம்,சிவப்பு,வெள்ளை என மூன்று நிறங்களைக் கொண்ட கட்டிடத்தில் சைபர்ஜிம் கத்தியின்றி ரத்தமின்றி செயல்பட்டு வருகிறது.
இஸ்ரேல் பாதுகாப்பு படை(IDF) மற்றும் பிற சைபர் பாதுகாப்பு பிரிவு ஜாம்பவான்கள் சிவப்பு நிற கட்டிடத்திலுள்ள யூனிட் 8200 அமைப்பில் பணிபுரிகிறார்கள். இது அமெரிக்காவின் NSA வுக்கு நிகரானது என  கிசுகிசுக்கிறார்கள். நீலநிற பில்டிங்கில் தொழில்நுட்ப, தொழில்நுட்ப திறனற்ற என இரு பிரிவினரும் வேலை செய்கிறார்கள். விமான நிலையங்கள், மின்சார நிலையங்கள், குடிநீர், தொழிற்சாலைகள் ஆகியவற்றை காக்க இவர்கள் மெனக்கெடுகின்றனர். சைபர்ஜிம் நிறுவனம் உலக நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரம் பேர்களுக்கும் மேல் சைபர் தற்காப்பு பயிற்சி அளித்துள்ளது. செக், போர்ச்சுக்கல், லிதுவேனியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பிரான்ஞ்சுகளைக் கொண்டுள்ள இந்நிறுவனத்தின் கோச்சிங் பீஸ் " 1 கோடியே 93 லட்சத்து 84ஆயிரத்து 500 ரூபாய்".

வெள்ளை நிற பில்டிங்கில் நிஷா அமைப்பைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் பயிற்சி வகுப்புகளை நடத்துவதோடு நீலம் மற்றும் சிவப்பு படையை ஒருங்கிணைக்கிறார்கள். "சிலர் கம்பெனியிலுள்ள கணினிக்கு சாப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்தால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஊழியர்களுக்கு பயிற்சி இருந்தால் மட்டுமே சைபர் தாக்குதல்களை சமாளிக்க முடியும். 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் எங்கள் சைபர்ஜிம் நிறுவனத்தை தொடங்கும் திட்டமிருக்கிறது" என்கிறார் ஆஃபிர் ஹாசோன். டீம் 8, ஐடிஎஃப் சைபர், சைபர் ஆர்க் ஆகிய பிற பாதுகாப்பு அமைப்புகளும் சைபர் ஜிம் அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. "இணையம் மக்களை எளிதாக இணைத்துள்ளதால் நான்காம் தலைமுறையாக தொடரும் இணையத்தாக்குதல்களும் அதிகமாகிவிட்டன.

இரானின் அணு ஆயுதம் எதிர்கால அபாயம் எனில், இஸ்ரேல் அணு ஆராய்ச்சி விஞ்ஞானிகளின் கணினிகளையும் அரசு தளங்களையும் இரானிய சைபர் திருடர்கள் தொடர்ந்து தாக்கி வருவது தடுக்கப்படவேண்டிய இன்றைய தேவை." என்கிறார் ஜெருசலேம் வென்ச்சர் பார்ட்னர்ஸ் நிறுவன தலைவரான எரல் என். மார்கலித்.

அட்டாக் குழு!

Fancy Bear

2005 ஆம் ஆண்டின் மத்தியில் இருந்து அதிரடியாக செயல்பட்டுவரும் ஃபேன்சி பியர் குழு, ரஷ்யாவின் GRU உளவுத்துறையின் சகோதர அமைப்பு. இதன் இதர பெயர்கள் APT28, Pawn Storm, Sofacy Group, Sednit. டிமிட்ரி ஆல்பரோவிட்ச் என்ற விஞ்ஞானி கண்டறிந்த கோடிங் அமைப்பிலிருந்து ஃபேன்சி பியர் உருவானது. பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து என பாய்ந்து தற்போது தென்கொரியா வரை தாக்கியிருக்கிறார்கள்.
Lazarus Group 
 இந்த சைபர் அட்டாக்குழுவிற்கு Hidden Cobra என்று பெயர். 2009 ஆம் ஆண்டிலிருந்து ஆக்டிவ்வாக உள்ள அமைப்பின் முதல் குறி தென் கொரியா. 2014 ஆம் ஆண்டு சோனி பிக்சர்ஸ் இணையதளத்தின் மீதான தாக்குதல் லாசரஸ் குழுவை பிரபலமாக்கியது. போலந்து, மெக்சிகோ, வியட்நாம், ஈகுவடார் ஆகிய நாடுகளில் வங்கிகளை பல கோடி ரூபாய்களை கொள்ளையடித்து ரெக்கார்ட் செய்தனர். தற்போது பிட்காயின் உலகை டார்க்கெட் செய்து தாக்கி வருகின்றனர்.

Comment Crew

 2006 ஆண்டிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு குடைச்சல் கொடுக்கும் சீனாவின் மக்கள் விடுதலை படை சைபர் குழு. இதன் பிற பெயர்கள், ஷாங்காய் க்ரூப், ஆப்ட்1. கோக்கோலா, லோகீட் மார்ட்டின் ஆகிய நிறுவனங்களை கமெண்ட் க்ரூ தாக்கியதாக அமெரிக்க அரசு விசாரணையை தொடங்கியபோது இந்த அமைப்பு உலகிற்கு வெளித்தெரிந்து புகழ்பெற்றது.

Equation Group(TAO)

2015 ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும் அமெரிக்காவின் NSA உருவாக்கிய சைபர் டீம் இது. அட்டாக்கை கண்டுபிடித்த ரஷ்ய நிறுவனம் காஸ்பர்ஸ்கை வைத்த பெயரே ஈக்குவேஷன். இரான் அணு உலை கணினிகளை தாக்கிய சாதனை குழு, பின்னாளில் ரஷ்ய ஹேக்கர்களிடம்(Shadow Brokers) தன் கணினிகளை இழந்தது வேறு கதை.


தொகுப்பு: கிரான் பெனிரோ, வில்லியம்சன் க்ரீஸ்

நன்றி: குங்குமம்