குளோனிங் உலகம்!



Image result for cloning



டிஸ்கோ சாட்டிலைட்!

அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான ராக்கெட் லேப், தன் எலக்ட்ரான் ராக்கெட்டில் டிஸ்கோ வடிவ சாட்டிலைட்டை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. "இனி விண்வெளியில் மனிதன் உருவாக்கிய நட்சத்திரத்தை அனைவரும் காணலாம்" என பெருமிதமாக ராக்லெட் லேப் நிறுவனர் பீட்டர் பெக் கூறினார்.


டிஸ்கோபால் போல பளபளப்புடன் 3 அடி அகல கார்பன் ஃபைபரால் செய்யப்பட்ட சாட்டிலைட் இது. சூரியஒளியை பிரதிபலிக்கும்படியான 65 பேனல்கள் இதில் பதிக்கப்பட்டுள்ளன. ஒளியை தொடர்ந்து பிரதிபலிக்கும் தன்மையால் இதனை பூமியிலிருந்து வெறும் கண்களால் பார்க்க முடியும். "நீங்கள் உலகின் எந்த இடத்திலிருந்தாலும் எங்களின் நட்சத்திரம் மின்னுவதை பார்க்கமுடியும். நாம் என்ன நிலையில் வாழ்ந்தாலும் விண்வெளி பற்றிய ஆச்சர்ய எண்ணத்தை இந்த நட்சத்திரம் உங்களுக்கு ஏற்படுத்தும்" என்கிறார் ராக்கெட் லேப் இயக்குநரான பீட்டர் பெக். இதனை மேலே கொண்டு சென்ற எலக்ட்ரான் ராக்கெட் சிறு செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்ப ஸ்பெஷலாக உருவாக்கப்பட்டது. தோராயமாக ஒன்பது மாதங்கள் விண்வெளியில் டிஸ்கோ சாட்டிலைட் உயிர்ப்பாக இருக்கும்.

2

ஊட்டச்சத்து தரும் பறவைகள்!

கடற்பறவைகளின் எச்சம் கடற்புர நிலப்பரப்பை ஊட்டச்சத்து கொண்டதாக மாற்றுகிறது என இடிஹெச் ஆராய்ச்சிமையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பறவைகளின் எச்சத்திற்கு quano என்று பெயர். இக்கழிவில் நைட்ரஜன், பாஸ்பரஸ் ஆகியவை ஏராளமாக நிறைந்துள்ளன. ஆண்டுதோறும் இம்முறையில் கடற்பறவைக்கூட்டங்களால் 1.3 பில்லியன் பவுண்டுகள் நைட்ரஜன், 218 மில்லியன் பவுண்டுகள் பாஸ்பரஸ் கிடைக்கிறது. தற்போது பறவைகளால் சூழலுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துகளின் அளவை ஆய்வாளர்கள் அளவிட முயற்சித்து வருகின்றனர். கழிவுகளிலுள்ள நைட்ரஜன், பாஸ்பரஸ் நீர்நிலையில் விழும்போது ஆல்காக்களின் வளர்ச்சி கூடுகிறது. இது நீரிலுள்ள ஆக்சிஜன் அளவை குறைக்கிறது. மீன்கள் மற்றும் பீன்ஸ் உற்பத்தியை நைட்ரஜன், பாஸ்பரஸ் ஊக்குவிக்கிறது. இதுபற்றிய ஆராய்ச்சிக்கட்டுரை Nature Communications இதழில் வெளியாகியுள்ளது.

3

சாம்சங்கின் வளர்ச்சி!

இன்டலின் சிப் சாம்ராஜ்யம் மார்க்கெட்டில் வீரநடை போட்டுக்கொண்டிருந்தாலும் கடந்தாண்டு முதல் சாம்சங் அந்த பெருமையை தட்டிப்பறித்துள்ளது. ஆதாரம் இரு நிறுவனங்களின் நிதி அறிக்கைகள்தான்.

இன்டலின் ஆண்டு வருமானம் 62.8 பில்லியன் டாலர்கள். சாம்சங் அதற்கும் மேல் சம்பாத்தியம் பார்த்து 69.1 பில்லியன் டாலர்களை வாரியுள்ளது. கரன்சி பார்த்த பிரிவு சாம்சங்கின் செமி கண்டக்டர் டிவிஷன் என்பதுதான் முக்கியச்செய்தி.  X86 புரோசஸர் பிரிவுகளில் இன்டல் ராஜாதான் என்றாலும் ஃபிளாஷ் மற்றும் நினைவகங்களின் தயாரிப்பில் சாம்சங் பந்தயக்குதிரையாக டாப்பில் உள்ளது. இன்று சேல்சில் உள்ள டேப் மற்றும் ஸ்மார்ட்போன்களில் சாம்சங்கின் ரேம் நீக்கமற இடம்பிடித்துவிட்டது. மேலும் டிவி உள்ளிட்ட பொருட்களோடு முக்கியமான போன் தயாரிப்பாளர் என்பதும் சாம்சங்கின் சூப்பர் பிளஸ் பாய்ன்ட்.

4

3டி ஸ்மார்ட் ஜெல்!

அமெரிக்காவிலுள்ள ரட்ஜெர்ஸ் பொறியியல் பள்ளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 4டி பிரிண்டிங் முறையை ஸ்மார்ட் ஜெல் மூலம் சாத்தியப்படுத்தியுள்ளனர்.

ஸ்மார்ட் ஜெல்லைப் பயன்படுத்தி 3டி முறையில் பொருளை உருவாக்கி அதன் உருவத்தை மாற்றிக்கொள்ள முடியும். கான்டாக்ட் லென்ஸ், டயப்பர் ஆகியவற்றிலுள்ள ஹைட்ரோஜெல்லை போன்றதுதான் இந்த பிரிண்டிங் முறைக்கு பயன்படுத்தும் வேதிப்பொருட்களும்.
"ஸ்மார்ட் ஜெல்லை இதுபோல ஆய்வுகளுக்கு பயன்படுத்துவது யாரும் யோசிக்காத கோணம். நெகிழ்வான, உருவம் மாறும் இயல்பு கொண்ட ஸ்மார்ட் மெட்டீரியல் இது" என்கிறார் ஆராய்ச்சியாளர் லீ. 32 டிகிரி செல்சியஸ் வெப்பத்திற்கு அதிகமாகும்போது, ஜெல்லின் நீர் வெளித்தள்ளப்பட்டு சுருங்குகிறது. "ஜெல்லின் உருவத்தை சரியாக வைத்திருந்தால் நீங்கள் அதன் செயல்பாடு பற்றி யோசிக்க முடியும். ஸ்மார்ட் ஜெல்லின் பிளஸ் பாய்ன்ட்டும் அதுதான்" என்கிறார் லீ.

5

குளோனிங் உரிமை!

அண்மையில் சீன ஆராய்ச்சியாளர்கள் இரண்டு பெண் மக்காவ் வகை குரங்களை குளோனிங் செய்துள்ளனர். 1996 ஆம் ஆண்டு டாலி என்ற செம்மறி ஆட்டுக்கு பயன்படுத்திய செல் நியூக்ளியர் பரிமாற்றம்(somatic cell nuclear transfer) ஐடியாவில்தான் இந்த குளோனிங் நடைபெற்றது.

குளோனிங் செய்யவேண்டிய விலங்கின் செல்லிலிருந்து நியூக்ளியஸ் எடுக்கப்பட்டு தான முட்டையில் வைக்கப்பட்டு மின்சாரம் பாய்ச்சப்படுகிறது. ஆனால் இம்முயற்சிகள் பிளாஸ்டோசிஸ்ட் எனும் கருவளர்ச்சி நிலையில் தோல்வியுற்றன. ஆர்என்ஏ மற்றும் ட்ரைசோஸ்டைன் ஆகியவற்றை சீன ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். இதில் ஸ்பெஷல் என்ன? எண்ணற்ற குளோனிங் உயிர்களை இதில் உருவாக்கலாம். அமெரிக்காவைச் சேர்ந்த AAAS அமைப்பு, 2002 ஆம் ஆண்டு இதற்கான தடைவிதிகளை வகுத்துவிட்டது. மனிதர்களின் உறுப்புகளை குளோனிங் செய்தால் உயிரிழப்புகளை கட்டுப்படுத்தலாம் என்ற நோக்கில் எதிர்காலத்தில் குளோனிங் விதிகள் தளர்த்தப்பட வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

compiled by : komalimedai team
நன்றி: முத்தாரம்


பிரபலமான இடுகைகள்