முதுகெலும்பு உடைந்து போன வைர பிஸினஸ்!
முதுகெலும்பு உடைந்து போன வைர பிஸினஸ்!
-கே.என்.சிவராமன்- ச.அன்பரசு
வைரத்தை
வைரத்தால்தான் அறுக்க முடியும் என்பார்கள்.
இன்று அமானுஷ்ய மௌனம் நிலவும் சூரத்தின் மினி பஜார் நிலையும் அப்படித்தான். நீரவ்மோடி விவகாரத்தால் அவருடைய கடை மட்டுமல்லாது மும்பை,
டெல்லியிலுள்ள அனைத்து நகைக்கடைகளிலும் போலீஸ் ரெய்டு தொடங்கிவிட்டது. ஏற்கனவே குறைந்தவிலை, குறைந்த கிராக்கி,
ஜிஎஸ்டியால் தடுமாறி மீண்டுவந்துகொண்டிருந்த வைர பாலீஷ் தொழில் வாராக்கடன் பிரச்னையால் இம்முறை குப்புறவே விழுந்துவிட்டது.
வைர பிஸினஸில் டாப் நாடான இந்தியாவில் வைர உற்பத்தி கிடையாது;
இறக்குமதியாகும் வைரங்களை அறுத்து பாலீஷ் செய்தே சூரத், சௌராஷ்ட்ரா ஆகிய இரண்டு நகரங்களும் உலகப்புகழ்பெற்றதோடு இருபது லட்சம் பேர்களுக்கு மேல் பணிவாய்ப்பும் கொடுத்தது.
மூவாயிரம் சிறிய தொழில்கூடங்களும், ஆயிரம் மெகா தொழில்கூடங்கள் என
செயல்பட்டுவந்த சூரத்தில் அரசு வைரத்தொழிலை உலகளவில் விரிவுபடுத்தி 2,400 கோடி ரூபாயை
2020 ஆண்டு அக்டோபரில் அளிக்க பிளான் செய்திருந்தது. சீனா, பெல்ஜியம், அமெரிக்கா நாடுகளில் பயன்படுத்தும் 75 சதவிகித வைரங்கள் இந்தியர்களால் பாலீஷ் செய்த பெருமையுடையவை(GJEPC அறிக்கை).
"கடந்தாண்டு வெளிமார்க்கெட் மற்றும் உள்ளூர் மார்க்கெட் என
இரண்டிலும் நல்ல முன்னேற்றம் இருந்தது.
அமெரிக்காவில் 4-5 சதவிகிதம் விற்பனை முன்னேறியதோடு சீனாவிலும் நிலைமை மேம்பட்டிருந்தது." என்கிறார் வைரநகை ஏற்றுமதி சங்க முன்னாள் தலைவரான சஞ்சய் கோத்தாரி.
ஒருங்கிணைக்கப்படாத தொழில்துறை என்றாலும் நன்றாக முன்னேறும் நிலையில் லோன் கொடுப்பதில் என்ன தவறு என்று நினைத்த வங்கிகள் மக்கள் பணத்தை சூரத்தில் கொட்டின.
ஆனால் பிரச்னை தொடங்குவதே இங்குதான்.
வைரத்தின் மதிப்பை மதிப்பிடுவது எப்படி?
யார் என்ற கேள்வி எழுகிறது.
ஒரே வைரத்தை இரு கடைக்காரர்களிடம் காண்பித்து விலை கேட்டால் அவர்கள் சொல்லும் விலை வித்தியாசம் 40 சதவிகிதம் மாறுகிறது. இந்நிலையில் வைர மார்க்கெட் சூழலைப் புரிந்துகொள்ளாமல் வாரிவழங்கிய கடன்களும்,
அரசின் கிடுக்குப்பிடியும் இன்று ஒட்டுமொத்த வைர சந்தையின் கழுத்தை நெரிக்க தொடங்கியுள்ளன.
"வங்கிகள் வைரவியாபாரி சொன்னதை அப்படியே நம்பியதால் வந்த பிரச்னை இது. வைரத்தின் அதீத விலையை அவர்கள் வேறிடத்தில் சோதித்திருந்தால் உண்மை தெரிந்திருக்கும்" என்கிறார் தொழில்துறை சங்க தலைவரான விஜய் கலாந்திரி.
பெரிய நிறுவனங்களுக்கு கிடைப்பது போன்ற கடன்கள் சிறிய கடைகளுக்கு கிடைக்காத நிலையில்,
உலக மார்க்கெட்டில் பாலீஷ் வைரங்களுக்கான டிமாண்டும் விலையும் சர்ரென குறைந்தது நிலைமையை இன்னும் மோசமாக்கிவிட்டது. " மார்க்கெட் தேவையை புரிந்துகொள்ளாமல் வங்கியில் கடன் வாங்கி உற்பத்தி செய்தது பெரும் சரிவை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் வங்கிகளின் கடன்களை வியாபாரிகள் எப்படி கட்டுவார்கள்?" என்கிற சூரத் வைர சங்க செயலாளரான தாம்ஜி மாவனி. 2015
ஆம் ஆண்டிலிருந்து சூரத், சௌராஷ்டிரா பகுதியில் 350 வைர பாலீஷ் கடைகள் மூடப்பட்ட நிலையில்,
கடன் சிக்கலும், அரசின் கெடுபிடிகளும் சிறிய கடைகளை காப்பாற்றுமா என
காலம்தான் பதில்சொல்லும்.
தொகுப்பு: கோமாளிமேடை டீம்
நன்றி: குங்குமம்