அகதிகளை கடத்தும் கடத்தல் குழு!
அகதிகளை கடத்தும் பார்டர் கடத்தல் குழு!- மர்மங்களும் பின்னணியையும் தடமறியும் முயற்சி - ச.அன்பரசு
"அடுத்த செவ்வாய்க்கிழமை உங்களுக்கு ஆறு பாக்ஸ் வந்து சேரும்"
என்ற கரகர குரல் போனில் ஒலிக்க,
ஓகே சொல்லி டோனா கதீயா தலையசைக்கிறார். அழகான பங்களாவில் வசிக்கும் கதீயாவின் பிஸினஸ் மனிதர்களை வைத்து மனிதர்களுடனேதான். குழப்புகிறதா? பதினெட்டு ஆப்பிரிக்கர்களை அன்று கொலம்பியாவிலிருந்து நிகரகுவா எல்லையில் விட்டுவருவது இவரின் டாஸ்க்.
ஆனால் உடனே அதை செய்துவிடமாட்டார் கதீயா. உதவிகேட்பவர்களை உடனே நம்பி மேய்ப்பராக உதவினால் அவரின் தங்கமுட்டைத் தொழில் அன்றோடு காலி. உதவி கேட்பவர்கள் சில பாதுகாப்பு செக்போஸ்ட்களை தாண்ட கேள்விகள் உண்டு.
பார்டர் பிஸினஸ்!
எதிர்முனையில் வரும் ரெஃபரென்ஸ் பதிலில் திருப்தியானால் மட்டுமே பயணம் லெமன் அழுத்தி தொடங்கும்.
டவுட்
கலைந்தவராக உடனே ஆப்பிரிக்கர்களை கூட்டிவர வண்டியை ஸ்டார்ட் செய்கிறார் கதீயா.
"என்னை அவர்களின் நண்பர்கள் சிபாரிசு செய்திருக்கிறார்கள். ஏனென்றால் எனது பிஸினஸ் அப்படி"
என நம்பிக்கையுடன் கூட்டிக்கழித்து புன்னகைக்கிறார்.
பகலில் ட்ராவல்ஸ் வேலையை செய்யும் கதீயா, இரவில் செய்வது உலக நாடுகளின் அதிபர்கள் உடனடியாக தடுக்க கோரி அலறும் விஷயம்;
ஆம், அகதிகளை இல்லீகலாக பிற நாடுகளுக்கு கடத்துவதுதான் அந்த சிம்பிள் தொழில்.
இந்த இருட்டுத் தொழிலில் இரண்டரை ஆண்டு எக்ஸ்பீரியன்சான கதீயா,
600 நபர்களை வெற்றிகரமாக பார்டர் தாண்ட வழிகாட்டியுள்ளார். என்ன கிடைக்கும்?
யோக்கியத் தொழிலைவிட தேறும் மேக்சிமம் பைசாதான்.
ஜிஎஸ்டி கட்டாமல் கதீயா லம்ப்பாக பெறுவது மாதத்திற்கு 51 ஆயிரத்து 810 ரூபாய். கதீயாவோடு மொத்தம் பதினான்கு பேர் கொண்ட டீம்தான் போலீஸ்களுக்கு மாமூல் தள்ளி சீரும் சிறப்புமாக
நடத்துகிறது. இவர்களை ஓநாய் என்று அழைத்துக்கொள்கிறார்கள்.
ரிஸ்க் அதிகம் என்றால் லட்டுபோல டப்பு இல்லாமலா? அகதிகள் கடத்தல் தொழிலின் பிஸினஸ் மதிப்பு
2 லட்சத்து 27 ஆயிரத்து 500 கோடி. கிறுகிறுப்பு தட்டினால், தண்ணீர் ஒரு சிப் அடித்துவிட்டு படியுங்கள்.
இனி எழுதுவதெல்லாம் இன்ச் பை
இன்ச் நிஜங்கள்தான்.
மேல்நாட்டு குடிமகன்!
அமெரிக்காவிற்கு போயே தீருவேன் என
அடம்பிடிக்கும்
அகதிகளில் பெரும்பான்மை யார் தெரியுமா? டவுட்டே வேண்டாம்!
சாட்சாத் நம்மவர்களான இந்தியர்கள்தான். கதீயாவுடன் நாம் பேசிக்கொண்டிருந்தபோது ஹாலில் உலாவிக்கொண்டிருந்தது இந்தியாவின் அஸ்லி பஞ்சாப் சிங்கமேதான். சரி, ரூட் எப்படி?
வங்காளிகள், இந்தியர்கள், ஹைதியர்கள் உள்ளிட்டோரை பனாமா-கோஸ்டா ரிகா எல்லையில் பிக் செய்யும் கதீஜா அவர்களை கூட்டிவந்து நிகரகுவாவுக்கு படகுகளில் அனுப்பிவைப்பார். நிகரகுவா சென்றவுடன் அங்கிருந்து ஹோண்டுரா செல்ல பஸ் பிடித்தால் மெக்சிகோவில் அகதியாக அரசுக்கு மனுபோடுவதா அல்லது அமெரிக்க சிட்டிசனா என்பது அகதிகளின் சாய்ஸ்.
அகதிகளைப் பற்றிய தகவல்கள் கடத்தல் குழுவின் மெம்பரிடமிருந்து கதீயாவின் போனுக்கு வந்துவிட,
பெயரைவிட பயணிகளின் முகத்தை பார்வையால் ஸ்கேன் செய்து மனதில் பதித்துகொள்கிறார். "இவர்களை நாங்கள் பொலிட்டோஸ் என்போம்"
பொலிட்டோஸ் என்றால் கோழிக்குஞ்சுகள் என்று அர்த்தம்.
லாபம் சுபம்!
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,
இங்கிலாந்தின் தெரசா மே
ஆகியோர் அகதிகளுக்கு எதிராக நாட்டைச் சுற்றி சுவர் கட்டுவது ரேஞ்சுக்கு பேசினாலும் கடத்தல் தொழில் உலகெங்கும் கறாரான கமிஷன்களால் ஸ்மூத்தாக நடந்துவருகிறது. உள்நாட்டுப் போர்களால் மக்கள் அமெரிக்கா வருகிறார்கள் என்று உலகம் நம்பினாலும் பத்துக்கு ஒன்பது பேர்(93%)
இல்லீகலாக வாழ்வதற்கான வழிதேடிதான் பார்டர் தாண்டி அமெரிக்க மண்ணை மிதிக்கிறார்கள் என்கிறது அகதிகளுக்கான தேசிய அமைப்பு(IOM).
இதில் அமெரிக்காவின் கணக்கு எட்டு லட்சம் பேர். என்ன காரணம்? "சட்டவிரோத குடியேற்றம் உலகெங்கும் சவ்வூடு பரவல் போல நடந்துவருகிறது. வளமழிந்த பரப்பைச் சேர்ந்த மக்கள் வளமான நிலப்பரப்புக்கு இடம்பெயர்வது வரலாறு முழுக்க நடந்துவரும் காட்சிதான்"
என்பது உலக பன்னாட்டு குற்றத்தடுப்பு அமைப்பு துணைத்தலைவர் ட்யூஸ்டே ரெய்டனோவின் வாதம்.
கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி இனவெறுப்பை தூண்டிவிட்டு அரசியல் குளிர் காயும்
அதிபர் ட்ரம்ப் மனமறிந்து மறைக்கும் நிஜமொன்று உண்டு. அது, அகதி மக்கள் தாங்கள் பெறும் அரசு உதவிகளை விட வரியாக அளிக்கும் வருமானம் அதிகம் என்பது.
அகதிகள் தங்கள் உழைப்பிலிருந்து தம் குடும்பம் வாழும் ஏழை நாடுகளுக்கு அனுப்பிய தொகை கடந்தாண்டில் மட்டும் 444 பில்லியன் டாலர்கள் என்கிறது உலகவங்கி அறிக்கை. கடந்த பதினைந்து ஆண்டுகளோடு ஒப்பிடும்போது ஐந்து மடங்கு உயர்ந்துள்ள வருமான வளர்ச்சி,
அந்நிய அல்லது தனியார் முதலீடாக கூட எந்த நாட்டுக்கும் கிடைக்கவில்லை என்பது பலருக்கும் ஷாக் நியூஸ்.
குற்றங்களின் வழித்தடம்!
வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த கட்டிடத்தொழிலாளியான
முல்கித் குமார், கதீயாவின் புதிய விருந்தாளி.
தன் சகோதரிகளிடம் திரட்டிய பணத்தை வைத்து டெல்லி வந்து அங்கிருந்து அமெரிக்காவுக்கு
செல்லவிருக்கிறார். அதற்கு வழி, ஈகுவடார்
தலைநகரான கொய்டோவுக்கு அறுபதாயிரம் ரூபாய்க்கு டிக்கெட் எடுப்பதுதான். முன்பு தென் அமெரிக்கா அரசு, தன் நாட்டின் வழியாக அகதிகளை
அமெரிக்கா செல்ல அனுமதித்தாலும் தற்போது விதிகளை டைட் ஆக்கியுள்ளது.
அதேசமயம் கொலம்பிய அரசு, தன் நாட்டின் வழியே செல்லும் பயணத்தை முறைப்படுத்தியுள்ளது, கொலம்பியாவை அகதிகள் தேர்ந்தெடுக்க முக்கியமான காரணம். அரசின் பர்மிட் பாஸை ஐந்து நாட்களுக்கு பயன்படுத்தலாம். டர்போ பகுதியிலிருந்து பயணித்து உரபா வளைகுடா பகுதியில் படகு பிடித்தால் மாஃபியாக்களின்
பிடியிலுள்ள கேபர்கானா நகரை அடையலாம். கொலம்பியா -பனாமா நாட்டின் எல்லையான டேரியன் கேப் என்ற 96 கி.மீ நீள பருவக்காட்டை கடந்து சென்றால் மட்டுமே அமெரிக்காவை எட்டிப்பார்க்கலாம்.
கடத்தல், கொள்ளை, கற்பழிப்பு,
கொலை என அத்தனை க்ரைம்களும் வகைதொகையின்றி நடக்கும் ஸ்பாட் இது.
பாராமிலிட்டரியின் வன்முறைகள், போதைப்பொருள் கடத்தல்
என இரண்டு விஷயங்களும் நடக்கும் இந்த காடு மத்திய மற்றும் தென் அமெரிக்காவை கடப்பதற்கான
ஒரே குறுக்குவழி. ஆபீசர்களுக்கு பதில் சொல்லி யோக்கியமாக பார்டர்
தாண்டி பயணித்தால் பயணதூரம் 30,577 கி.மீ.
சதுப்பு நிலம், ஜிலீர் ஆறுகள், பிரமிப்பூட்டும் மலைகள், பதுங்கும் ஜாக்குவார்,
சீறும் பாம்பு என அத்தனை ஆபத்துகளையும் தாண்டி உயிரைப் பணயம் வைத்து
அமெரிக்க கனவோடு பயணிக்கிறார்கள் அகதிகள்.
கொழிக்கும் காசு!
கொலம்பியா டூ கோஸ்டாரிகா வரை ரூ.1,23,310
கோஸ்டாரிகாவிலிருந்து மெக்சிகோவுக்கு ரூ.1,49,270, என அகதி ஒருவருக்கு பில் போடுகிறார் கதீயா. நிகரகுவாவுக்கு
ரூ.51,820, ஹோண்டுராசுக்கு ரூ.45,400 என
வசூலிக்கும் பணத்தில் உணவு, தங்குமிடம், ட்ரைவர் சம்பளம் அனைத்தும் உள்ளடங்கும். ஒரு அகதியின்
மூலம் ஏஜண்டிற்கு கிடைக்கும் லாபம் மட்டும் 7 ஆயிரத்து
788 ரூபாய். ஏஜண்டுகளின் சொந்தக்காரர் போல பேசும்
போலீசுக்கு தரும் லஞ்சப்பணம் ரூ.2 ஆயிரத்து 600 என்பது அடிக்கடி மாறும். அகதிகளின் வண்டி நம்பர்பிளேட்,
ஆட்களின் எண்ணிக்கை, போட்டோ அனைத்தும் செக்போஸ்ட்
ஆபீசர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
செக்போஸ்டுகளில் ஏஜண்டுகள் போட்டோக்களில் அகதிகளை
அடையாளம் காட்டி கமிஷன் வெட்டினால், பாதுகாப்பு கேரண்டி.
"மற்றவர்கள் எப்படியோ அகதிகள் கொள்ளையடிக்க அல்லது கடத்தப்பட்டால்,
கற்பழிக்கப்பட்டால் அதற்கு நான்தான் பொறுப்பு என்பதால் பார்டர்களை கடந்தபின்
வரும் போன்கால் வரை பதற்றமாகவே இருக்கும்" என்கிறார் கதீயா.
விதிவிலக்கான சில சம்பவங்கள் தவிர்த்து கற்பழிப்பு, கொள்ளை போன்ற க்ரைம்களில் ஈடுபட்டு தன் பெயரை சிதைத்துக்கொள்ள ஏஜண்டுகள் விரும்புவதில்லை.
"கடத்தல் தொழிலில் தோல்விகளையோ, அசம்பாவிதங்களையோ
ஏஜண்டுகள் மட்டுமல்ல, அகதிகளும் விரும்புவதிலை. விபத்துகளால் ஏஜண்டுகளுக்கு காசு தட்டிப்போகிறது என்றால் அகதிகளுக்கு வாழ்க்கை"
எனும் உலக பன்னாட்டு குற்றத்தடுப்பு அமைப்பு துணைத்தலைவர் ட்யூஸ்டே ரெய்டனோ, பீட்டர்
டின்டியுடன் இணைந்து அகதிகளின் வாழ்க்கை அனுபவங்களை Migrant,
Refuge,Smuggler, Saviour என்ற நூலை எழுதியுள்ளார். அரசு, ராணுவம், கொள்ளை என அத்தனையும்
தாங்கிக்கொண்டு அகதிகள் எதற்காக பயணிக்கிறார்கள்? நாளையாவது வானம்
நமக்காக விடியாத என்ற ஆசைதான்.
அமெரிக்காவுக்கு டிக்கெட்!
பனாமா(பனாமா நகரம்)
- ரூ.1,23,310
கோஸ்டாரிகா(சான் ஜோஸ் வரை)-
ரூ.25,960
நிகரகுவா(மனாகுவா)
-ரூ.51,920.
ஹோண்டுராஸ்(டெகுசிகால்பா)
- ரூ.45,430
குவாத்தமலா(குவாத்தமலா நகரம்)
- ரூ.25,960
(கொலம்பியா டூ மெக்சிகோ வரையிலான தோராய தொகை)
தொகுப்பு: ஆலன் வான்கா, கவிதா துரைசாமி
நன்றி: குங்குமம்