இலவச பிளாஸ்டிக் சர்ஜரி !- டாக்டர் யோகி ஆரோனின் சாதனை



Image result for plastic surgeon dr yogi aeron



மக்களுக்கு மறுவாழ்வு தரும் டாக்டர் யோகி- .அன்பரசு

தீக்காய நோயாளிகளைப் பற்றிய செய்திகளை படிக்கும்போது சாதாரணம்தான். ஆனால் அக்காயங்கள் ஒருவரின் முகத்தில் ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நேரும் சமூக புறக்கணிப்பை எதிர்கொள்வது சாதாரணமல்ல. இதை தீர்ப்பதே டாக்டர் யோகி ஆரோனின் லட்சியம். தான் கற்ற பிளாஸ்டிக் சர்ஜரியின் சிகிச்சை மூலம் டேராடூனைச்சேர்ந்த மக்களின் மறுவாழ்வுக்கு உதவி வருகிறார் இந்த ஆச்சரிய டாக்டர்.  

உத்தராகண்டின் டேராடூனைச் சேர்ந்த மருத்துவர் யோகி ஆரோன், கடந்த 47 ஆண்டுகளாக நெருப்பு காயங்கள், விலங்குகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரியை விலையின்றி செய்து வருகிறார் என்பது ஆச்சரிய செய்தி. "உத்தரகாண்ட் மாநிலத்தில் தீக்காயம் என்பது பிராக்டிகல் நிகழ்வு. இங்குள்ள கிராமங்களில் சமையல் அடுப்புகளில் விறகுகளைப் பயன்படுத்துவதால் குழந்தைகள், பெரியவர்கள் என பலரையும் தீக்காயங்களின்றி பார்க்கவே முடியாது" என்று விவரிக்கும் மருத்துவர் யோகி, அமெரிக்காவைச் சேர்ந்த இன்டர்பிளாஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் இலவச கேம்ப்களை நடத்தி மக்களுக்கு சிகிச்சையளித்து அவர்களின் துயர் துடைக்கிறார்.

1967-1971 இல் உத்தரப்பிரதேசத்திலுள்ள கிங் ஜார்ஜ் மருத்துவக்கல்லூரியில் இளங்கலையும், பீகாரிலுள்ள பிரின்ஸ் வேல்ஸ் மருத்துவக்கல்லூரியில் பிளாஸ்டிக் சர்ஜரி படிப்பையும் நிறைவு செய்த யோகி ஆரோன், மேல் அன்னப்பிளவு சிகிச்சையும் துலக்கமாக கற்றவர். 2000-2006 ஆம் ஆண்டு பிளாஸ்டிக் சர்ஜரி குறித்த நுட்ப நுணுக்கங்களை கசடற கற்ற யோகி
டேராடூனிலுள்ள தனியார் மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி துறைத்தலைவராக பணியாற்றினார். டாக்டர் யோகி பணியாற்றிய காலத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி பலரும் அறியாத ஐடியா.

"2006 ஆம் ஆண்டில் நாங்கள் டாக்டர் யோகியை பிளாஸ்டிக் சர்ஜரி விழிப்புணர்வு திட்டம் மூலமாக சந்தித்தோம். அப்போதே அவர் 1,800 நபர்களுக்கு மேல் சிகிச்சையளித்திருந்தார். கிராம மருத்துவர்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரியை அறிமுகப்படுத்தும் அத்திட்டத்தில் நாங்கள் டாக்டர் யோகிக்கு புதிதாக சொல்ல ஏதுமில்லை என்பதை அவரின் சிகிச்சை மற்றும் ஆலோசனைக்கு வரும் நோயாளிகளின் கூட்டத்தை பார்த்த நொடியே தெரிந்துகொண்டோம்" என ஆச்சரியம் குறையாமல் பேசுகிறார் மருத்துவர் கேரி ஃப்யூடம்.

 தன் வீட்டிலேயே குட்டி ஆபரேஷன் தியேட்டரை அமைத்து மக்களுக்கு ஃப்ரீயாக சிகிச்சையளிக்கும் மருத்துவர் யோகிக்கு அவரது மனைவியும், மகன் குஷ் ஆரோனும் பெரும் உறுதுணை. தற்போது உத்தரகாண்டின் அரசுடன் அமெரிக்காவின் இன்டர்பிளாஸ்ட் நிறுவனமும் இணைந்து குழந்தைகளுக்கு ஏற்படும் தீக்காயங்களுக்கு சிகிச்சையளிக்கும் திட்டத்தில் மருத்துவர் யோகி ஆரோனுக்கு முக்கிய பங்குண்டு. "சர்வ சிக்ஷான் அபியான்(SSA) திட்டத்தின் கீழ் உத்தரகாண்ட் அரசு, 6-18 வயது வரையிலான குழந்தைகளுக்கு சிகிச்சை கட்டணமாக ஒரு குழந்தைக்கு தலா 8 ஆயிரம் ரூபாயை வழங்குகிறது" என்கிறார் மருத்துவர் யோகி ஆரோன்.

முதலில் சிறிய மண்ணெண்ணெய் ஸ்டவ்வில் அறுவை சிகிச்சை கருவிகளை மனைவி சுத்தம் செய்து தர, ஏழை மக்களுக்கு சிகிச்சையளிக்க  தொடங்கிய மருத்துவர் யோகியை பின்தொடர்ந்து தற்போது அவரது மகன் குஷ் ஆரோன் முக அறுவை சிகிச்சை நிபுணராக தந்தையுடன் இணைந்து மக்களின் துயர்போக்கி மறுவாழ்வு பணிசெய்வது அர்ப்பணிப்பான அழகு காட்சி.

மறுவாழ்வுக்கு முதல் முயற்சி!

1969 ஆம் ஆண்டில் Interplast(தற்போது ReSurge International) அமைப்பு மூலம் பிளாஸ்டிக் சர்ஜரியால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் ஐடியாதாரர், ஸ்டான்ஃபோர்டு பல்கலையின் டாக்டர் டொனால்ட் லாப். உள்ளூர் மருத்துவர்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி பற்றிய பயிற்சி அளித்து மக்களுக்கு சிகிச்சையளிக்க உதவும் இவ்மைப்பு, உலகம் முழுக்க 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரிகளை செய்துள்ளது. ReSurge  என்ற சொல்லின் ஸ்பானிய அர்த்தம், மறுஉயிர்ப்பு.


பிரமிப்பூட்டும் பிளாஸ்டிக் சர்ஜரி

முன்னணி நாடுகள் - தாய்லாந்து, பிரேசில், துபாய், மொரிஷியஸ், இந்தியா, ஈரான்.
அறுவை சிகிச்சையில் முதலிடம்(2016) - அமெரிக்கா(4.2மில்லியன்), பிரேசில்(2.5 மில்லியன்)
2025 இல் வளர்ச்சி - 43.9 பில்லியன் டாலர்கள்
(theconversation.com, www.statista.com 2016, grandview research)

தொகுப்பு: ஆரோன் பெரோஸ்
நன்றி: குங்குமம்