அசத்தும் ஜப்பான் மலையாள அகராதி! - அரசு அதிகாரி சாதனை
Add caption |
பெருமை பேசும் உழைப்பு - ஜப்பான் மலையாள அகராதி
கொச்சியைச் சேர்ந்த கேபிபி நம்பியார், அரிய சாதனை ஒன்றை செய்துள்ளார். ஏறத்தாழ 1500 பக்கங்களுக்கு ஜப்பான் மலையாள அகராதியை தொகுத்துள்ளார்.
ஆறு லட்சம் வார்த்தைகளைக் கொண்ட இந்த அகராதி, பதினைந்து ஆண்டுகள் உழைப்பில் தயாரானது. இதிலுள்ள மலையாள வார்த்தைகளின் எண்ணிக்கை 53000. அனைத்து வார்த்தைகளையும் கையில் எழுதியிருக்கிறார் மனிதர். மொத்தம் கையெழுத்தி பிரதியாக 3 ஆயிரம் பக்கங்கள் வந்திருக்கிறது.
எழுதியவுடன் அதனைப் பதிப்பிக்க பல்வேறு பதிப்பகங்களை நாடியுள்ளார். ஆனால் ஜப்பான் எழுத்துரு யாரிடமும் இல்லை என்பதால் உடனே நிராகரித்துள்ளனர். உடனே ஜப்பானின் டோக்கியோவுக்கு சென்றவர், டோக்கியோ அயல் உறவுகள் பல்கலைக்கழகத்தின் உதவியை நாடினார். அங்கு மொழி சார்ந்த மென்பொருளை பேராசிரியர்கள் ஜூன் தகாசிமா, மகாடோ மினேகிஷி ஆகியோர் உருவாக்கி உதவினர்.
அப்போதுதான் நம்பியார் செய்த தவறு ஒன்று தெரிய வந்திருக்கிறது. ஜப்பான் - மலையாள அகராதிக்கு அவர் பயன்படுத்திய ஜப்பான் அகராதி அறுபது ஆண்டுகள் பழமையானது. உடனே தினசரி ஏழு மணிநேரம் உழைத்து, அகராதி சொற்களை மாற்றி திருத்தி எழுதி 81 வயதில் சாதனை படைத்திருக்கிறார்.
இதன் முதல் பிரதியை கலாசாரத்துறை அமைச்சர் ஏகே பாலன் மூலம் டெல்லியிலுள்ள ஜப்பானின் துணைத்தலைவர் ஹிடேகி அசாரியிடம் வழங்கச் செய்தார். இந்த நூலை கேரள கலாசாரத்துறையும், ஜப்பான் மொழிகள் ஆராய்ச்சி பல்கலைக்கழகமும்(ஆசியா, ஆப்பிரிக்கா) இணைந்து பதிப்பித்து வெளியிடுகிறது.
1965 ஆம் ஆண்டு ஜப்பானில் கடல்சார்ந்த படிப்புக்காக, டோக்கியோ பல்கலைக்கழகம் சென்றார் நம்பியார். அங்கு ஜப்பான் மொழியை ஒசாகா பல்கலையில் கற்றார். பின்னர் இந்தியாவுக்கு திரும்பிய நம்பியார்(1969), கடல்பொருட்கள் ஏற்றுமதி நிறுவன இயக்குநராக 1981 ஆம் ஆண்டு ஜப்பான் சென்றார். அம்மொழி மீது தீராத காதல் பிறந்தது அப்போதுதான். ஜப்பான் குறித்து கேரள நாளிதழ்களில் பல்வேறு கட்டுரைகளை எழுதினார். பின்னர் நோபல் பரிசு வென்ற யாசுநாரி கவபாடாவின் சவுண்ட் ஆஃப் தி மவுன்டைன் என்ற நூலை மலையாளத்தில் மொழிபெயர்த்தார். இப்பணியிலிருந்து ஓய்வு பெற்றபிறகு, கேரளத்தின் மீன்வளத்துறை, விவசாய ஆராய்ச்சித்துறை ஆகியவற்றில் இயக்குநராக பணியாற்றினார். கிடைத்த ஓய்வுநேரத்தில் அகராதி பணியைத் தொடங்கினார்.
திராவிட மொழிகள் ஜப்பானின் மொழியோடு தொடர்புடையன என்று பலர் நம்புகின்றனர். ஆனால் அது தவறு. மலையாள வார்த்தையான தும்பி, ஜப்பான் வார்த்தையான தும்போ என்பது ஒன்றுபோல ஒலித்தாலும் வேறுமாதிரியானவை என்கிறார் நம்பியார்.
ஜப்பான் மொழியில் கெட்ட வார்த்தைகள் மிக குறைவு. பேசுவதிலும் மொழியின் மென்மை தெரியும். ஆண்களும், பெண்களும் பயன்படுத்தும் வார்த்தைகள் மாறுபடும். வார்த்தைகளுக்கு பல்வேறு பொருட்கள் உண்டு. அமைதியை விரும்பும் மக்களின் மொழி இது என்று புன்னகைக்கிறார் நம்பியார்.
நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - ஷெவ்லின் செபாஸ்டியன்
படங்கள்: டெய்லி ஹன்ட், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்