காணாமல் போன மனைவிகள் - க்ரைம் ஆய்வு!
பெண், பணம், நிலம் ஆகியவை எப்போதும் பிரச்னையானவைதான். இதிலும் திருமண உறவு பொய்க்கும் போது நொடியில் ஏற்படும் கோபம், திருமணம் கடந்த உறவுகளின் இன்பம், சொத்துக்கான துரோகம் என வழக்குகளில் பல ட்விஸ்டுகள் உண்டு. இதுவும் அப்படியான வழக்குகளில் சில விஷயங்கள்தான்.
மாயமாய் மறைந்தவள் - மிச்செல் ஹாரிஸ்
2001 செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. கூடுதலாக ஒரு கொலையும் நடந்தது. மிச்செல் என்ற பெண்மணி ஓட்டி வந்த கார் தனியாக ரோட்டில் நிற்க, ஆளை எங்குமே காணோம். வீட்டில் சில துளிகள் ரத்தம் மட்டும் இருக்க, அங்கு அப்பாவியாக நின்ற கணவர் கல் ஹாரிஸை குற்றவாளி என கைது செய்து கோர்ட்டில் நிறுத்தினர். அப்போது ஆண்டு 2005.
கணவரைக் கைது செய்ய ரத்தம் மட்டுமே ஆதாரம். இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பின்னர், சாட்சிகள் அவரை காரினருகில் வேறொரு ஆணுடன் பார்த்ததாக பல்டியடிக்க, விசாரணை நீதிபதியையே பங்கம் செய்தது. அதுவரையில் மட்டுமல்ல இன்றுவரையிலுமே மிச்செல்லின் நகத்துணுக்கைக் கூட போலீஸ் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் சாட்சிகளில் கபடி ஆட்டத்தால் கல் ஹாரிஸ் 2005 ஆம் ஆண்டு 2015 ஆம் ஆண்டு வெளியே வந்துவிட்டார்.
வன்முறை, விவாகரத்து, மனச்சிதைவு - ஜோன் ஹான்சன்
1962 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் பத்து அன்று நிகழ்ந்த சம்பவம் அது. வாஷிங்க்டனிலுள்ள கிங் கவுன்டி பண்ணை நிலத்தில் ஜோன் வேலை செய்துகொண்டிருந்தாள். அப்போது, தன் தோழிக்கு போன் செய்து ஜாலியாக பேசிக்கொண்டிருந்தாள். அப்போது திடீரென ஜோனின் குரலில் மாற்றம். அவன் கீழேதான் நிற்கிறான். ஐயோ என்னைப் பார்த்து வருகிறான் என்று அலற, போன் கட்டாகிறது. தலை கிறுகிறுத்த தோழி, போலீசுக்கு போக, ஜோன் வண்டி சியாட்டில் அருகே நிற்பதாக தகவல் கிடைக்கிறது.
அப்போது அடித்து உதைத்து வந்த கணவரை வீட்டைவிட்டு வெளியேற்ற ஜோன் முயற்சித்துவந்தார். இதனால் போலீசார் ஜோனின் கணவர் ராபர்ட்டை கைது செய்ய நினைத்தனர். ஜோன் இறந்த இரு நாட்களில் ராபர்ட் மீதான வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. ஜோன் இல்லாததால் அவரின் சொத்துக்களும் நான்கு குழந்தைகளும் ராபர்ட்டின் பராமரிப்புக்கு வந்தனர்.
ஜோனை ராபர்ட் அடித்துக்கொன்று சடலம் கூட போலீசுக்கு கிடைக்காதபடி தானியக்களஞ்சியத்தில் புதைத்துவிட்டதாக வதந்திகள் றெக்கை கட்டிப் பறந்தன. ராபர்ட் எதற்கும் கவலைப்படவில்லை. சந்தோஷமாக வாழ்ந்தவர், 84 வயதில் தற்கொலை செய்துகொண்டார். எப்படி தெரியுமா? கார் கதவுகளை அடைத்து பிராணவாயு கிடைக்காமல் போய் இறந்தார். அதோடு அவரின் சொத்துக்கள் பிள்ளைகளுக்கு சேராமல் இருக்கவும் சில தந்திரவழிகளை செய்தார்.
அப்படியும் குழந்தைகள் வழக்குத் தொடர்ந்து தங்களுக்கான உரிமையைப் பெற்றனர். ஆனால் அவர்களும் ஒருகட்டத்தில் தாய்க்கு என்ன ஆனது என்பதை அறிவதை கைவிட்டுவிட்டனர்.
பிராங்க்ஸ் நகரில் வாழ்ந்த ரீடா, சரியான சரக்குப் பார்ட்டி. ஆனால் அதே சமயம் வேலை பார்ப்பதிலும் கறாரான ஆள். இன்டர்நேஷனல் பேப்பர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். ஆகஸ்ட் பத்து அன்று(1986), முக்கியமான மீட்டிங்குக்கு செல்ல முடிவெடுத்தார்.
சிகாகோ சென்று மீட்டிங்கில் கலந்துகொள்ள வேண்டியவர் ஆளே காணோம். என்னாச்சு என பலரும் தேடியபோதுதான் ரீடா மிஸ் ஆனது தெரிய வந்தது. அப்போது ரீடா மட்டும் தனியாக வாழ்ந்து வந்தார். ரீடாவின் கணவர், ராபர்ட் தன் பெண் தோழி மற்றும் ரீடாவின் குழந்தைகளோடு வாழ்ந்து வந்தார்.
ரீடா இறந்த சில நாட்களிலேயே பெண் தோழியை மணந்தார் ராபர்ட். போலீஸ்காரர் என்றாலும் தில்லாலங்கடி ஆள். ரீடாவை அவருக்கே தெரியாமல் கையெழுத்து வாங்க விவாகரத்து செய்துவிட்டு(1974) அவருடன் வாழ்ந்து வந்தார். எதற்கு? பைசா வேணுமே வாழ....
ஏறத்தாழ 17 ஆயிரம் டாலர்களை ரீடாவின் பெயரில் வாங்கி விஜய் மல்லையா, நீரவ் மோடி போல எஸ்ஸாக நினைத்தார். ஆனால் வங்கிகள் மோசடி வழக்குப் போட்டு அவரின் பெயரை காலி செய்தன.
அதோடு ராபர்ட், ரீடாவுக்கு பிறந்த மகளை பாலியல் வன்புணர்வும் செய்து வந்த உண்மை உலகிற்கு தெரிய வந்தது. ரீடாவைக் கொன்றதற்கு இவர் காரணமா என்று தெரியவில்லை. ஆனால் மோசடி, பாலியல் வன்புணர்வுக்காக 15 ஆண்டுகள்(1992 தொடங்கி) மாமியார் வீட்டில் இருக்க வேண்டி வந்தது. போலீசார் உறுதியாக ராபர்ட் ரீடாவை கொலை செய்துள்ளார் என நம்பினாலும் ஆதாரம் கிடையாது.
நன்றி: லிஸ்ட்வெர்ஸ்
படங்கள்: சிபிஎஸ் நியூஸ், பிக்ஸ்11.காம்,WTAE Pittsburgh