வயதான அம்மா திடீர் கர்ப்பிணியாகி, மூத்த மகன் கல்யாணம் நின்றால்? - பதாய் ஹோ
பதாய் ஹோ(Badhaai Ho) இந்தி
இயக்கம்: அமித் சர்மா
கதை-வசனம்: சாந்தனு ஸ்ரீவஸ்தவா, அக்ஷத் கில்தியால், ஜோதி கபூர்
ஒளிப்பதிவு: சானு வர்க்கீஸ்
இசை: தனிஷ் பக்ஷி, ரோசக் கோலி, ஜாம் 8, சன்னி பாரா, இந்தர் பாரா
நகுல், நடுத்தர குடும்ப வாரிசு, அவனுக்கு ஒரு தம்பி, பாட்டி ஒரே ஒரு அம்மா, அப்பா என கச்சிதமாக குடும்பம் இருக்கிறது. ஆபீசில் வேலை செய்யும் ரெனியைக் கூட கல்யாணம் செய்துகொள்ளும் முடிவுக்கு வந்துவிட்டான். அப்போது டிடிஆர் வேலை பார்க்கும் அவனின் அப்பா, இரவில் செய்யும் மன்மத லீலையால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை அவன் எப்படித் தீர்க்கிறான் என்பதே கதை.
படத்தைத் தூக்கி நிறுத்துவது நீனா குப்தா, கஜ்ராஜின் நடிப்புதான். கர்ப்பம் தரித்ததற்கு சந்தோஷப்படுவதா, இந்த வயதில் கர்ப்பம் தரித்திருக்கிறாயே என மிரட்டும் குடும்பம், சமூகம் என அத்தனை பிரச்னைகளையும் நகைச்சுவை தெளித்து பரிமாறி இருக்கிறார்கள். சோறு மணக்கிறது. அதனால் வெறும் 29 கோடியில் எடுத்த படம் இருநூறு கோடி தாண்டி வசூல் எடுத்திருக்கிறது.
வெறும் காமெடி என்றில்லாமல், சமூகத்தை எப்படி எதிர்கொள்வது, காதலியே மூச்சுவிடாமல் சிரித்தால் நகுல்(ஆயுஸ்மான் குரானா) என்னதான் செய்வார்? நகைச்சுவை, அழுகை, குடும்ப பாசம்(ரெனியின் தாயிடம் பேசுவது) என அனைத்து இடங்களிலும் ஸ்கோர் செய்கிறார் குரானா. நாயகி ரெனி(சான்யா) பெரிய நடிக்கும் வாய்ப்புகள் இல்லை. இவருக்கும் சேர்ந்து குரானாவின் குடும்பத்தின் ஒவ்வொரு கேரக்டர்களும் நடித்துவிடுவதால் கவலை வேண்டாம்.
இசை ஒவ்வொரு இசைப்பாளர்களுக்கும் ஒன்று என பிரித்துக்கொடுத்துவிட்டதால், யாருடையது எது என்றே புரியவில்லை. ரைட் அனைத்து பாடல்களுமே படத்தின் நன்மைக்கு உதவுகின்றன.
காட்சி, வசனம் என கிடைக்கின்ற இடங்களிலெல்லாம் நகைச்சுவை பரவசப்படுத்துகிறது.
- கோமாளிமேடை டீம்
நன்றி: மீகா