கட்டுக்கடங்காத கோபம்! - நா பேரு சூர்யா
பின்டிரெஸ்ட் |
நா பேரு சூர்யா, நா இல்லு இந்தியா
இயக்கம்: வக்கந்தம் வம்சி
ஒளிப்பதிவு: ராஜீவ் ரவி
இசை: விஷால் சேகர்
சண்டைப்பயிற்சி: பீட்டர்ஹெய்ன், ராம் லக்ஷ்மண், கெச்சா கெம்பக்டி, ரவி வர்மா
எல்லையில் பணிபுரிய விரும்பும் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத வாலிபரின் காதல், கோபம், தேசப்பற்று என அத்தனை எமோஷன்களையும் ப்ரீத்தி ஜாரில் போட்டு மைய அரைத்தால் படத்தின் கதை ரெடி.
ஏபிஹெரால்டு |
படத்தை எக்சர்சைஸ் செய்த உடம்பு மூலம் தாங்குவது அல்லு அர்ஜூன்தான். படம் முழுக்க கோபத்தை அடக்க முடியாமல் தவிப்பதும் ஆக்சனில் வெடிப்பதுமாக முற்றிலும் வேறு லெவல் அல்லு அர்ஜூன். ஆக்சன் காட்சிகள் அமர்க்களமாக இருக்கின்றன. ஆனால் ஊரில் நடக்கும் ஆக்சன்களுக்கு ராணுவப்பயிற்சிகளை ஒப்பிட்டுக்காட்டுவது எரிச்சலாக இருக்கிறது. அது சண்டையை ரசிப்பதையே தடுக்கிறது டைரக்டர் சார்.
கோபத்தை அடக்கமுடியாத நாயகனால் வரும் பிரச்னையை சமாளிக்க முடியாத மேலதிகாரி, அவரை உளவியல் மருத்துவரிடம் கையெழுத்து பெற்றுவந்தால் ராணுவத்தில் சேர்ப்பேன் என்று கூறிவிட, அர்ஜூன் சரி என்கிறார். கையெழுத்து வாங்க சென்றபின்தான் தெரிகிறது, அது அவரின் தந்தை என்பது. சிறுவயதிலிருந்தே எரிமலையாக வெடிக்கும் அர்ஜூனை அவரது அப்பா கைகழுவிவிட ராணுவத்தில் சேரும் கதையைப் பார்க்கிறோம்.
இந்துஸ்தான் டைம்ஸ் |
22 நாட்கள்.. குணத்தை மறைத்து அடக்கி ஒழுக்கமாக இருந்தால் உனக்கு கையெழுத்து என்கிறார் தந்தை. தந்தையாக அல்ல மருத்துவராக... அல்லு அர்ஜூனால் அப்படி இருக்க முடிந்ததா, ராணுவத்தில் சேர்ந்தாரா என்பது க்ளைமேக்ஸ்.
தேசபக்தி படம் என்று விளம்பரம் செய்தாலும் நாயகனுக்கு இருப்பது குடும்பம் தன்னை புறக்கணித்த கோபம்தான். தன்னை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காத அவரின் ஈகோ, குடும்பம், வேலை என அனைத்து இடங்களிலும் அவரை பிரச்னைகளுக்குரியவராக்குகிறது. அல்லு அர்ஜூனின் கேரக்டருக்காக வக்கந்தம் வம்சி பிரமாதமாக மெனக்கெட்டிருக்கிறார். சந்தேகமில்லை. ஆனால் கதையில் பெரிய ட்விஸ்ட் கிடையாது.
காதலியைக் கூட அர்ஜூன் தன் ஈகோ நெருப்பால் சுட்டு அவமானப்படுத்தி பேசுவது அவரின் கோபத்தீ எவ்வளவு ஆபத்தானது என்பதற்கான சாட்சி. காதலியோடு சண்டையிடும்போது பேசும் வசனங்களை பேசினால் சாமி சத்தியமாக அந்த உறவு திரும்ப சேருவதற்கான வாய்ப்பே கிடையாது.
படத்தில் அல்லுவின் கோபத்தை நரம்பு வழியாக மூளைக்கு கடத்தும் காரியத்தை விஷால் சேகரின் இசை பார்த்துக்கொள்கிறது. சைரன் போல ஒலிக்கும் இசை கோபத்தின் அபாயத்தை சரசரவென ரத்த ஓட்டத்தில் சேர்த்து ஆக்சனுக்கு தயார் படுத்துகிறது.
முஸ்லீம்கள் ஏன் தீவிரவாதிகள் ஆகிறார்கள் என்பதை நேர்த்தியாக படம்பிடித்த தன்மைக்காக இயக்குநரே ஆரத்தழுவி பாராட்டலாம். தன்னுடைய கேரக்டரை இழக்க விரும்பாத இளைஞர்களுக்கான படம் இது.
-கோமாளிமேடை டீம்