அசுர குலம் - ரிச்சர்டு ராமிரெஸ்
இரவில் பாய்ந்த கரும்புலி!
1980களில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பலரின் தூக்கத்தை ஒருவர் கெடுத்துக்கொண்டிருந்தார். சினிமாவில் நடிக்கும் கனவுக்கண்ணன் அல்ல. கொலைகாரர். அவரின் குறி, பெரும்பாலும் ஆன்டிகள்தான்.
மத்திய வயதிலுள்ளவர்கள் ஃபிளாட்டில் தூங்கும்போது உள்ளே நுழைந்து மெல்ல சித்திரவதையை தொடங்குவார். எல்லாம் ஷங்கரின் கருடபுராணம் போலத்தான். மெல்ல அடித்து உதைத்து துவண்டு பயந்து வீறிடுபவர்களை மெல்ல ரசித்து கொல்வது ராமிரெசின் பாணி.
கொலையான உடல்களில் கண்கள் இருக்காது. பற்கள் உடைக்கப்பட்டிருக்கும். இந்த பாணி, சாத்தானின் சித்திரவதை என்று கூறப்பட்டிருப்பதை ஒத்திருக்கும் என கிசுகிசுக்கிறது எஃப்பிஐயின் கோப்புகள்.
ராமிரெசின் வருகை தந்த பயத்தினால் லாஸ் ஏஞ்சல்ஸில் வாழ்ந்தவர்கள் பலர், படுக்கையில் படுக்காமல், ஆண் தனியாக பெண் தனியாக தூங்கி உயிரைக்காப்பாற்றிய கதைகள் வெகு பிரபலம். பின்னே உசுரு போனா வருமா?
தடயம் லேது!
அத்தனை கொலைகளிலும் பிணங்களை தூக்கி வந்து மார்ச்சுவரியில் போட்ட போலீசாருக்கு நயா பைசா துப்பு கூட கிடைக்கவில்லை. மிச்சம் ஒன்றுதான். அவர் அவியா என்ற ஷூக்களை அணிந்தார் என்ற தகவல் மட்டுமே லாபம்.
ராமிரெஸ் ஆண்களை கொல்வது என்றால் சித்திரவதையும், பெண்கள் என்றால் வல்லுறவு செய்து கூடுதல் ஆஃபராக சித்திரவதை செய்து கொல்வதையும் மிக இயல்பாக செய்து வந்தார். ஒருகட்டத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் போரடிக்க, சான்பிரான்சிஸ்கோ சென்றார்.
அங்கும் சட்டம் தன் கடமையைச் செய்தது. ராமிரெசும் பெண்களை சூறையாடி, ரத்த வேட்டையாடி வந்தார். ஒருகட்டத்தில் புகார்கள் குவிய, விட்டுடங்கடா ங்கொய்யால என எங்களிடம் இருக்கும் ஒரே ஆதாரம் அந்த ஷூதாங்க என்று பொதுமக்களுடனான உரையாடலில் பேசிவிட்டார் மேயர். அதை டிவியில் பார்த்து ஷூக்களை மாற்றிக்கொண்டார் ராமிரெஸ்.
ஆனாலும் மாட்டிக்கொண்டார். எப்படி, 1985 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 இல் மெக்சிகோ பெண்களின் மீது வேட்கை கொண்டு வெறியாய் பாய்ந்தபோது மாட்டிக்கொண்டார்.
மரணப் பாதை!
சான்டா அனா பாதையில் சேசிங் செய்தவரை மக்கள் குமட்டில் குத்தி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் உண்மை பேசியவருக்கு 1989 நவ.7 அன்று விஷவாயுவில் சாவு என்று தீர்ப்பு எழுதினர்.
ஆனாலும் அப்பீல்களால் வழக்கு தள்ளி தள்ளி 2013 ஆம் ஆண்டுக்கு சென்றது. இதற்கிடையே 1996 ஆம் ஆண்டு சான் க்வான்டின் சிறையில் கல்யாணம் ஆகிவிட்டது. பின் புற்றுநோய் வந்துவிட 2013 ஆம் ஆண்டு 53 ஆம் வயதில் அவராகவே இறைவனின் திருப்பதம் அடைந்தார்.
ரத்தம் குளித்த வாழ்க்கை!
அமெரிக்காவின் டெக்சாஸில்(எல் பாஸோ) 1960 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 இல் பிறந்தவர் ராமிரெஸ். ஏழாவது பிள்ளை. ரயில்வே வேலை செய்யும் அமைதியான கத்தோலிக்க பெற்றோர்கள் இவருக்கு கிடைத்தனர். ஆனால் மைக் என்ற சகோதரரை நாடிப்போக ராமிரெசின் வாழ்க்கை மாறிப்போனது. அவர் போரில் தான் செய்த வக்கிரங்களை புகைப்படங்களாக்கி அதை சிறுவன் ராமிரெசிடம் காட்ட, அவன் மூளையில் உணர்ச்சிகள் மெல்ல குறைந்துகொண்டே வந்தன.
வியட்நாம் போரில் பங்கேற்ற ராமிரெஸின் உறவினர், தன்னிடம் சிக்கியவர்களை எல்லாம் சித்திரவதை செய்து கொன்றார். பெண்ணை வல்லுறவு செய்து கொன்று அவரின் தலையை வெட்டி அதை புகைப்படம் பிடித்தும் வைத்திருந்தார்.
இதையெல்லாம் சிறுவரான ராமிரெசிடம் காட்ட அவருக்கு பாலுறவு மற்றும் வன்முறை மீதான ஆர்வம் மெல்ல மனதில் உருவானது. விடுதி ஒன்றில் வேலைக்குச் சேர்ந்த ராமிரெஸ் அங்கு தங்கிய பயணிகளின் பொருட்களை மெல்ல திருடத் தொடங்கினார். இதோடு கோகைன், கஞ்சா புகைத்தத் தொடங்கினார். அன்றிலிருந்து பெற்றோரிடமிருந்து விலகத் தொடங்கினார்.
பின் திருடுவதில் தேர்ச்சி பெற்றதும், ஓட்டலில் தங்கிய திருமணமான பெண்ணை வலுக்கட்டாயமாக வல்லுறவு கொள்ள முயற்சித்தார். ஆனால் அப்போது அவரின் கணவர் வந்துவிட, ராமிரெஸ்ஸை அடித்து துவைத்துவிட்டார். ஆனாலும் எதுவும் மாறவில்லை. கார் திருட்டு, கோகைன் புகைப்பது என ஆளே மாறினார்.
பின் திருட்டு குற்றச்சாட்டுக்கு மட்டும் கோர்ட்டில் அபராதம் கட்டி தப்பித்துவிட்டார் அவர். மனைவியை கைமா செய்ய நினைத்த மேட்டரை சொல்லாமல் விட்டது அவரின் தன்மானப் பிரச்னையாக இருக்கலாம். ஆனால் அந்த தவறு பின்னாளில் பலரின் உயிருக்கே உலைவைக்குமாறு மாறியது.
1984 ஆம் ஆண்டு ராமிரெஸ் தன் முதல் கொலையைச் செய்தார். 79 வயதான கிழவியை வல்லுறவு செய்து கத்தியால் குத்தி சாய்த்தார். கிழவியின் வீட்டிலேயே அதனை செய்தார். பின்னர், ஓராண்டில் 25 கொலைகளை சலிக்காமல் செய்தார். 1989 ஆம் ஆண்டு கூட அவர் செய்த 13 கொலைகளுக்கு மட்டுமே தண்டனை கிடைத்தது. மைக் தன் மனைவியை அடித்துக் கொலை செய்வதை நேரில் பார்த்த பரவசம் இறக்கும் வரை அவருக்கு குறையவே இல்லை.