'படி' க்க கதைகள்
படி !
டேய் ராம், பாத்து போ, நிலைப்படி முட்டிடப் போகுது என எச்சரித்தாள் கனகம். இன்று மட்டும் இப்படி எச்சரிப்பது, இதோடு நான்காவது முறை. புதிதாக வீடு மாறியதில் நிலைப்படியை மட்டும் சரியாக கணிக்கமுடியவில்லை.
காலையில் யாரோ வாசலில் கூப்பிட்டார்கள் என வேகமாக வந்ததில், கனகத்திற்கு இருமுறை தலை இடித்துவிட்டது. அந்த வலிதான் எச்சரிக்கைக்குக் காரணம். எச்சரித்த 30 நிமிடங்களில் கதவருகில் ராமின் அலறல் கேட்டது. ”குனிஞ்சு வா ன்னு சொன்னா கேட்கிறானா?” என்று அலுத்துக்கொண்டு எழுந்து சென்றாள்.
2
வெங்கட் எங்கே? இன்னைக்கு அவனோட ரூமை காலி பண்றேன்னு சொன்னானே? என்று லஷ்மியம்மா, பாலாஜியைக் கேட்டார். பாலாஜி, அதைக் கவனிக்காமல், பப்ஜி ஜூரத்தில் "உன் பக்கத்துல வந்துட்டான், சுடு என கத்திக்கொண்டிருந்தான். அப்போது வெளியே இருந்து கார்த்தி படிக்கட்டில் ஏறி உள்ளே நுழைந்தான்.
லஷ்மியம்மாவைப் பார்த்ததும், ”கொஞ்சம் திங்க்ஸ்தான் இருக்கு, எடுத்துக்கிறேன். நியூஸ்பேப்பரை எடைக்குப் போட்டுட்டு வர்றேன். அதான் லேட்” என்றான். ”அதுக்கு இவ்வளவு நேரமா?” என்றவரை எரிச்சலாகப் பார்த்தான்.
”கிலோவுக்கு 8 ரூபான்னு சொல்லி எடைமெஷின்ல நிறைக்கல்ல தப்பா வெக்கிறாங்க என்ன செய்யறது? ரெண்டு மூணு கடை அலைஞ்சு திரிஞ்சு போட்டுட்டு வந்தேன். அதான் லேட். சாரிம்மா”என்றவனின் பதிலைக் கேட்டபடியே, உள்ளே சென்றார் லஷ்மியம்மா.
3
அன்று சனிக்கிழமை.பெருமாள் கோவிலுக்கு முன்னே நின்றபடி, பக்தர்களுக்கு பொங்கலைக் கொடுத்துக்கொண்டிருந்தாள் ஜானகி. கோவிலின் கொடிமரத்தருகே மாதவ், விளையாடிக் கொண்டிருந்தான்.
“மாதவ், இங்க வாப்பா உன்னோட கையால கொஞ்சம் கொடு” என்ற பாட்டியை ஆச்சரியமாகப் பார்த்தான்.
விளையாட்டை விட்டு வரவேண்டுமா என்றுதான் முதலில் நினைத்தான். ஆனால், தான் விரும்பியதை அப்பாவிடம் கேட்டு வாங்கித் தருபவளாயிற்றே? என அரைமனதோடு வந்தான். கரண்டியைக் கையில் எடுத்து, உணவைத் தட்டில் நிரப்பினான். நன்றி நிறைந்த கண்களோடு பக்தர்கள் நகர்ந்தனர்.
“பாட்டி நாம ஏன் இவங்களுக்கு சாப்பாடு கொடுக்கணும், அவங்களே வாங்கி சாப்பிட்டுக்கலாமே?” என்றவனின் தலைக்கோதினார் ஜானகி. “நம்மால முடிஞ்சதை அடுத்தவங்களுக்கு நாம கொடுக்கணும் சேது. பல தலைமுறையாக நாம் இதை செஞ்சிட்டு வர்றோம்” என்று புன்னகைத்தார்.
4
வகுப்பில் விஷ்ணுவின் ஜாமெட்ரி பாக்ஸில் இருந்த காம்பஸை,விஷ்ணு இல்லாத சமயம் பார்த்து சேது எடுத்துவிட்டான். அந்த செய்தியை பக்கத்து டெஸ்க்கிலிருந்த ராஜவேல்தான் அவனுக்குசொன்னது. கேட்டவுடன், விஷ்ணுவின் கண்களில் பகை மின்னியது.
”போன மாசம் மன்த்லி டெஸ்ட்ல, நான் பேனா எழுதலைன்னு கேட்டப்போ, லக்கி பேனாவைத் உனக்குத் தரமாட்டேன்னு உதார்விட்டான். இப்போ என் காம்பஸை என்கிட்ட கேட்காம எப்படி எடுக்கலாம்?”என்று பேசிக்கொண்டிருந்தான். இதைக் கேட்ட வகுப்புத் தலைவன் ஆனந்தன், அறிவியல் மிஸ் பூங்கோதையிடம் சொல்லிவிட்டான்.
உடனே இருவரையும் அழைத்த பூங்கோதை, ”சேது, விஷ்ணு உன் பிரெண்டா இருந்தாலும் அவனோட பொருளை அவன்கிட்ட கேட்டு வாங்கி யூஸ் பண்ணு. விஷ்ணுகிட்ட சாரி கேளு என்றார். அப்புறமென்ன? கமர்கட்டை காக்கா கடி கடித்து தின்றபடி உற்சாகமாக வலம்வருகிறது விஷ்ணு-சேது அண்ட் கோ.
5
“முத்துக்குமார் போஸ்டல்ல வந்த கதைகளைக் கொடுங்க” என்றார் ஆசிரியர் திருமேனி. பெண்களுக்கான பிரச்னைகளைப் பேசும் இதழ் அது. கதைகளை மேலோட்டமாகப் பார்த்த திருமேனி, “இந்த கதையை பிரசுரிக்கலாமா? ” என்ற சொன்ன கதையைப் படித்துப் பார்த்த முத்துக்குமார் அதிர்ந்தார்.
”சார் இந்தக் கதையை போனமாசம்தான் மோகினி இதழ்ல போட்டிருந்தாங்க. நான் படிச்சிருக்கேன்.”
யோசனையுடன் இணையத்தில் செக் செய்த திருமேனி, “நமக்கு அனுப்பின பிரதி மாதிரியே பல பத்திரிகைகளுக்கும் அனுப்பியிருப்பார் போல. கதையை போட வேண்டாம் சார். வேற கதைகளைப் பாருங்க”என அலுப்பு மேலிடச் சொன்னார்.
படி- நிலைப்படி, படிக்கட்டு, தராசின் நிறைக்கல், பரம்பரை(தலைமுறை), பகை, பிரதி
நன்றி: தினமலர் பட்டம்
படங்கள் உதவி: in.pinterest.com