கோஷம் போட்டால் இந்தியாவில் வாழ முடியாது - நிதின்கட்கரி




Mahagathbandhan Is Politics Of Opportunism: Nitin Gadkari
அவுட்லுக்



பாஜகவின் மனசாட்சியாக பேசுவது நிதின் கட்கரியின் பாணி. ஆர்எஸ்எஸ் சேவகராக இருப்பது முதல் பாஜகவின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக தொடர்வது வரையில் எதைக்கேட்டாலும் தெளிவான பதில் கிடைக்கிறது நிதின் கட்கரியிடம். பதில் கிடைத்தால் விடுவோமா?


காங்கிரசின் நியாய் திட்டம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நபர் ஒருவருக்கு பனிரெண்டாயிரம் என்பது சாத்தியம் கிடையாது. உங்களது மாத வருமானம் ஒன்பதாயிரம் என்றால் மூவாயிரம் ரூபாய் அரசு வழங்கும். இது தேர்தல் காலம் என்பதால், ஒவ்வொரு கட்சியும் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். நாங்கள் 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் டெல்லி மும்பை எக்ஸ்பிரஸ் வழித்தடத்தை உருவாக்கி உள்ளோம்.


வறுமை, விவசாய விலைகள் குறைவு என்பது உங்களுக்கு பிரச்னையாக தெரியவில்லையா?

நானும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன்தான். ஆனால் இன்று விளைபொருட்களுக்கான விலைகளை நிர்ணயிப்பது இந்தியா அல்ல. வணிக கழகத்தில் இடம்பெற்றுள்ள நாடுகள். எனவே, விளைவித்த பொருட்களுக்கான விலை கிடைக்காதது, இந்தியாவிற்கு மட்டுமல்ல இது உலகளாவிய பிரச்னை. உபரியாக கிடைக்கும் தானியங்களிலிருந்து எத்தனால், எரிவாயு உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கலாம். இதனால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும்  எரிபொருள் விலை குறையும்.


75 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சீட் கொடுப்பதில்லை என முடிவு எடுத்துள்ளீர்களே?

எந்த தொழிலாக இருந்தாலும் துறையாக இருந்தாலும் இளைய தலைமுறைக்கு வழிவிட்டு ஒதுங்குவது நடந்துதானே வருகிறது. நாங்கள் மூத்த தலைவர்களிடம் கேட்டுக்கொண்டுதான் இந்த முடிவை எடுத்தோம்.

வேலைவாய்ப்பு பிரச்னை இல்லையா?

வேலைகள் குறைந்திருக்கலாம். ஆனால் வேலைவாய்ப்புகள் குறையவில்லை. நம்மிடையே உள்ள பிரச்னை, வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்கள் எண்ணிக்கை சரிந்து வருவதுதான். இப்போது பத்தாயிரம் கோடி ரூபாயை நாங்கள் நேரடியான மறைமுகமான வேலைவாய்ப்புகளுக்காகச்  செலவழித்து வருகிறோம்.

பாஜக வளர்ச்சி என பேசி வரும்போதும் ஆர்எஸ்எஸ், இந்துத்துவா என்றுதானே செயல்பட்டு வருகிறது?

இல்லை. அது சிலர் வலிந்து உருவாக்கும் கருத்து. நான் நாக்பூரைச் சேர்ந்தவன். சங்கத்திலிருந்து வந்தவன். சங்கத்தின் அடிப்படை கருத்துக்கள் மூன்று. கல்வி, கலாசாரம், பாதுகாப்பு.

ராமர் கோவிலை இந்துத்துவாவுடன் இணைக்காதீர்கள். அலகாபாத் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ராமர் கோவில் அங்கு கட்டப்படலாம் அல்லது இல்லை. இந்து மன்னர்களின் ஆட்சியில் மசூதிகள் இடிக்கப்படவில்லை. ஆனால் மொகலாயர்கள் காலத்தில் கோயில்கள் உடைக்கப்பட்ட வரலாறு நமக்கு உள்ளது. பார்சிகள், யூதர்கள் கூட இந்தியாவில் வாழ்கிறார்களே! பன்மைத்துவம் எங்கு அழிந்துபோனது. ஆனால் வேறு ஒரு நாட்டிற்காக இங்கே கோஷம் போடுபவர்கள் இனியும் இங்கு வாழமுடியாது.