கருத்தடை மாத்திரைகள் பாஸ் பாஸ்!
ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் பற்றி வலைத்தள நிறுவனர் அன்பரசு மாங்கு மாங்கென்று குங்குமத்தில் குவியலாக டைம் கட்டுரையை காப்பியடித்து டப்பிங் செய்தார். எடிட்டோரியலில் காமெடியாக பார்க்கப்பட்ட அந்த கட்டுரையில் கூறியிருந்த விஷயங்கள் இன்று நிஜமாகியுள்ளது.
சோதனையில் அந்த கருத்தடை மாத்திரைகள் பாஸ் ஆகிவிட்டன. ஹூர்ரே என குதிக்க தேவையில்லை. டைம் கட்டுரையில் நிறைய வழிமுறைகள் கூறப்பட்டன. தோளில் தடவும் க்ரீம் அல்லது ஜெல், ஊசி, மூன்றாவதாக மாத்திரைகள். இதில் மூன்றாவதாக கூறப்பட்ட மாத்திரைகள் சோதனையில் வென்றுள்ளன.
50 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் உலகில் அறிமுகமாயின. அப்போது அது புரட்சிகரமான மாற்றம், கண்டுபிடிப்பு என புகழப்பட்டது. இன்று ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் வெளியாகின்றது. கர்ப்பம் என்பதற்கு ஆண், பெண் என இருபாலினத்தவரின் பங்கும் உண்டுதானே?
இனி வலியை, வேதனையை பெண்களைப் போலவே ஆண்களும் ஏற்றுக்கொள்வார்களான என்பது இனிமேல்தான் தெரியும். அமெரிக்கா இதிலும் முன்னோடிதான். 2010 ஆம் ஆண்டு அமெரிக்கா 13.6 பில்லியன் டாலர்கள் செலவு செய்து, கருத்தடை மாத்திரைகளை ஆண்களுக்காக கண்டறிய முயற்சித்தது. என்ன காரணம், தேவையில்லாத கர்ப்பங்களால் நபருக்கு தலா 7.09 டாலர்கள் வீணாகின்றதே என்ற வயிற்று எரிச்சல்தான் காரணம்.
28 நாட்கள் நடைபெற்ற சோதனையில் டெஸ்ட்ரோஸ்டிரோன், ஆன்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன் ஆகிய ஹார்மோன்களை முடக்கி சிறப்பாக செயல்புரிந்திருக்கிறது இந்த மாத்திரை. இந்த மாத்திரையை 11-beta-methyl-19-nortestosterone dodecylcarbonate, or 11-beta-MNTDC என்ற பெயரில் குறிப்பிடுகிறார்கள்.
இப்போது பக்கவிளைவாக முகப்பரு, ரத்த அழுத்தம் அதிகரிப்பது போன்ற பிரச்னைகளை அடையாளம் கண்டு குறைக்க முயற்சித்து வருகின்றனர். தற்போது 60 அல்லது 90 நாட்களில் இம்மாத்திரை வேலை செய்ய தேவைப்படுகிறது. இனி வரும் நாட்களில் இந்த காலம் குறையலாம். எப்படி? ஆராய்ச்சி மூலம்தான்.
நன்றி: good.is