ஹலோ சொல்லலாமா? அகிலின் இளமைத் தாண்டவம்
ஹலோ (தெலுங்கு, 2017)
இயக்கம்: விக்ரம் கே குமார்
கேமரா: பி.எஸ்.வினோத்
படத்தொகுப்பு: பிரவின் புடி
அனுப் ரூபென்ஸ்
சின்ன வயதில் உருவான காதல், இளம் பருவத்தில் ஒன்றாக சேர்வதுதான் படம் சொல்லும் கதை.
தெருவில் வாழும் சிறுவன் சீனு, தெருவில் இந்திப் பாடல்களை வாசித்துக் காட்டி பானிபூரி சாப்பிட்டு வருகிறான். அதாவது படத்தில் அப்படித்தான் காட்டுகிறார்கள்.
அங்கே அதே கடையில் பானிபூரி சாப்பிட சிறுமி ஜூன்னு(மைரா தண்டேகர்) வருகிறாள். அவளுக்கும் சீனுவுக்கும் இடையில் ஒருவித இணக்கம் வருகிறது. இசையை வாசித்துக் காட்டும்போது, ஜூன்னு அவனை இடைமறித்து நீயே ட்யூன் ஒன்றை உருவாக்கு.அதுதானே டேலண்ட் என்று சொல்லிவிட்டு பானிபூரியை சாப்பிட்டு போய்விடுகிறாள்.
நம்மீது அக்கறை கொள்பவர்கள் மீது நாமும் பரஸ்பரம் அக்கறை காட்டுவோம் அல்லவா? அதேதான் இங்கும் நிகழ்கிறது. அப்போது சீனு, ஜூன்னு இருவரும் பிரியும்போது என்ன நிகழ்கிறது, இருவரும் ஒன்று சேர்ந்தார்களா என்பதே கதை.
விக்ரம் குமாரின் மேக்கிங், படம் பார்க்கும் அனுபவத்தை மிக இனிமையாக்குகிறது. அதுவும் வினோத்தின் ஒளிப்பது படத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் ரசிக்க வைக்கிறது. கல்யாணி, அகில் என இருவரையும் பளிச்சென காட்டுகிறது படம். படம் முன்னும் பின்னும் சென்று வருகிறது இயக்குநர் 24 படம் எடுத்தவர் என்பதை நினைவுபடுத்துகிறது. ஒரேநாளில் நடைபெறும் கதை. ஆனால் பரபரப்பு நெஞ்சில் பற்றமாட்டேன்கிறதே விக்ரம் சார்.
அகில், தனக்கு என்ன தெரியும் என்பதை சொந்தப் பணத்தைப் போட்டு நிரூபித்து காட்டியிருக்கிறார். நடனம், ஆக்சன் என அசத்துபவர், உணர்ச்சிகரமாக காட்சிகளுக்கு என கேள்வி கேட்டால் கேள்வியா பாஸ் செஞ்சுரலாமா ப்ரோ என்கிறார். முட்டுச்சந்தில் வரும் பார்கூர் ரக ஃபைட்டுக்கு ஒன்ஸ்மோர் கேட்கலாம். மாலில் வரும் சண்டைக்காட்சி பீதியூட்டுகிறது. அவ்வளவு வேகம்.
மற்றபடி பாட்டு பாடி ரயில்வே ஸ்டேஷனில் ஒன்று சேரும் க்ளைமேக்ஸ் காட்சியை நவீனமாக்கி இசைவிழாவாக்கி இருப்பது புதுமையான ஐடியாவா என்ன? ஐயகோ!
அனுப் ரூபனின் இளமை எனர்ஜி ஏற்றும் இசைக்கு, அற்புதமாக காட்சிகளை வினோத்தின் கேமரா படம் பிடித்திருக்கிறது. கதை ரொம்ப பழசு. ஆனாலும் சரி, அகிலின் ஆண்மையையும், கல்யாணியின் புத்துணர்வாக பாவனைகளையும் ரசிக்கலாம்.
-கோமாளிமேடை டீம்
நன்றி: சேதுமாதவன் பாலாஜி