கல்யாணச் சரக்கா பெண்கள்? - ஆஃபேட் சீரிஸ் சொல்வது என்ன?


Image result for aafat web series
news bugz

ஆஃபேட்(AAFAT)
எம்எக்ஸ் பிளேயர்
இயக்கம்: சஷாந்த் ஷா

எழுத்து:  ஸ்ருதி மதன்
சித்தாந்த் மாகோ, இஷிதா மிஸ்ரா


கதை, திருமணம். ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க ஆண் வீட்டார் என்னென்ன விஷயங்களைப் பார்ப்பார்கள் என்று ஆறு எபிசோடுகளில் உரி உரி என உரித்துவிட்டார்கள்.

ரிக்கி மல்ஹோத்ரா(சித்தார்த் பரத்வாஜ்), உடம்பு வளர்ந்தளவு மூளை வளராத ஆள். ஒரே தகுதி ஆண். அதை வைத்தே குடும்ப பிசினஸ் செய்துகொண்டு அம்மா ஆதரவில் பெண் தேடுகிறார்.

அந்த பெண்தேடும் முயற்சியில் உதவுகிறார் ரிஸ்தே பரிஸ்தே எனும் கல்யாண மாலை கம்பெனி ஓனர் ரீதா மொகந்தி(சீமா பாவா). இவர் காட்டும் ஐந்து பெண்களின் கதைதான் ஆஃபேட். இதில் வரும் அதிதி(புஷ்டி சக்தி), ஆயிஷா(அன்சுல் சௌகான்), ஃபைஸா (சித்ராஷி ராவத்), அனு(நீலம் சிவியா), டிட்லி (நிகிதா தத்தா)  இவர்களின் ஆங்கிலப்பெயரே வெப் சீரிஸ் டைட்டில்.

Image result for aafat web series
movieskickkz




ஐந்து பெண்களில் அதிதிக்கு உடல் எடைதான் பிரச்னை. அறிவு சூரியன் போல. சொந்த பிசினஸே இருந்தாலும் வெளிக்கம்பெனியில் அறிவைத் தேடுபவர். உடல் எடையால் தன்னம்பிக்கை குறைந்த தடுமாறுகிறார்.

ஆயிஷா, குறையொன்றுமில்லாத குரல். உடல் ரோமங்கள்தான் வாழ்க்கையைக் குறைக்கின்றன. ஹார்மோன் பெருக்கத்தால் ரோமங்கள் வளர்ந்துகொண்டே இருக்க, அனைத்து இடங்களிலும் வேக்சிங் செய்யலியா என சங்கடங்களைச் சந்திக்கிறார்.


Related image
hdmovie24



ஃபைஸா, போலிச் சமூகத்தின் உண்மையாக இருக்க ஆசைப்படும் ஆசிரியை. போலிகளை அவர்கள் வேலை பார்க்கும் இடத்திலேயே உடைத்து போட்டால் சும்மா விடுவார்களா? வேலை போகிறது. ஆனாலும் ஸ்டாண்ட் அப் கவிதை, காமெடியில் வெளுத்து வாங்குகிறார். ஊர் கைதட்டினாலும் வக்கீல் அப்பா முறைக்க நம்பிக்கை தளருகிறார்.

அனு, துணிச்சலாக தலையை ஷேவிங் செய்யும் தைரியலட்சுமி. காதலனுக்காக இழுத்த இழுப்புக்கு எல்லாம் சென்றாலும், முடியைக் காரணம் காட்டி புறக்கணிப்பது கோபம் தர அவனை விட்டு விலகுகிறாள். தனக்கான சுதந்திரத்தை மிக கறாராக வீட்டிலேயே கடைபிடிக்கும் பைரவி.
Related image
twitter


டிட்லி, இட்லியாய் மெலிந்த மேனி மயக்குகிறது. அதுதான் பிரச்னையும் கூட. போலிக் காதலுக்கு மயங்கி திருமண வாழ்வு பொய்த்துப்போக, குடும்பமே பெண் பார்க்கிறது. இதில் டிட்லி கழுத்தை மட்டுமே நீட்ட வேண்டும். கணவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை கிடையாது என அவரின் குடும்பமே முடிவு செய்கிறது. அது மட்டுமல்ல, அவர் அணியும் வளையலைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து குடும்பத்தின் வன்முறை தொடங்குகிறது. சமூகமே இவரை செகண்ட்ஹேண்ட் பெண்ணாகப் பார்க்கிறது.

ஒவ்வொரு எபிசோடும் ஐந்து பெண்களின் வாழ்க்கையைப் பற்றி பேசுகிறார்கள். இதில் அதிதி, ஆயிஷா பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். அதிதி, உடல்தான் பருமனே ஒழிய புத்தியில் தீ. வேலையும் கிடைக்கிறது. ஆனால் அப்போது திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். வாழ்நாள் முழுக்க கிண்டல்களை எதிர்கொண்ட அதிதி திருமணம் தன் வாழ்க்கைய மாற்றும் என நம்புகிறார். இது பற்றி ஹெச்ஆரிடம் பேசும் காட்சி அருமை.  ஆனால் பெண்பார்க்கும் படலத்தில்  அதிதி தன்மானம் உடைந்து வியாபாரத்திற்கான பொருளாக மாறும்போது, கொதித்தெழுவது அவள் அல்ல. அவளின் அம்மா. பிரமாதமான காட்சியாக வந்திருக்கிறது.

ஆயிஷா, ரேடியோவில் விளம்பரம், டிவி நிகழ்ச்சி என குரலால் உயிர் கொடுப்பவள். ஒரே பிரச்னை உடலில் அம்பாரமாய் வளர்ந்து தொலையும் ரோமங்கள். ஆம் முடிகள்தான். பெண்ணுக்கு இந்த முடி எப்படி பிரச்னை தருகிறது என துல்லியமாக சொல்லியிருக்கிறார்கள். பெண் பார்க்கும் இடத்திலும் ஒரு கட்டம் வரை பொறுத்தவள், பொங்கி எழுந்து நாயகனை நீயே வேக்சிங் செஞ்சுக்கோடா என்று சொல்லிவிட்டு கிளம்புகிறாள்.

அனு, டிட்லி, ஃபைஸா ஆகியோருக்கான காட்சிகள் சமூக அழுத்தம் சார்ந்தவையாக பார்க்கலாம். அனு, பெண்ணுக்கான அழகு என்பதை தலையை ஷேவ் செய்து உடைக்கிறாள். தன்னை ஏற்பதை விட முடியைப் பற்றியே பேசும் காதலனைக் கூட வெறுக்கிறாள். இறுதியில் தன்னை விரும்பும் ஒருவருடன் காபி டேட்டிங் செய்கிறாள். அப்போது அவளை பெண் பார்க்க ஹோட்டலில் காத்திருக்கிறார்கள். அவள் அங்கிருந்தபடியே வீடியோ காலிங் பேச, முடிந்தது கதை.

 ஃபைஸா, பொய்யான உலகில் தடாலடி உண்மையை பேசுவதோடு, கிரியேட்டிவிட்டியாக யோசிக்கிறாள். ஆனால் இதெல்லாம் பள்ளியில், கோடிகோடியாக சம்பாதிக்கும் இடத்தில் பேசுகிறாள். இதனால் வேலை பறிபோகிறது.

வீட்டில் அவளது கனவான வேலைக்கும் தந்தை ஆதரவளிப்பதில்லை. தாய் இல்லாத நிலையில் அவள் கோழிக்குஞ்சாக தன்னை கருதிக்கொள்கிறாள். அதேசமயம் சமூகம் பற்றி நிறைய யோசித்து பேசுபவள் இவளே.


டிட்லிக்கு சொந்த வாழ்க்கையையே காப்பாற்ற முடியாத நிலை. இதில் எங்கிருந்து சமூகம் குறித்து கவலைப்பட. ஆனாலும் அவளுக்கு ஒரு காதல் கிடைக்கிறது. ஆனால் அதனைக் காப்பாற்ற முடியுமா என்று தெரியவில்லை.


பெண்களின் சுதந்திரம் பற்றிய கவனத்தை திருமணம் என்ற ஒரு நிகழ்வை உதாரணமாக்கி பேசியிருக்கிறது இந்த ஆஃபேட் வெப் சீரிஸ். இசை, காட்சிகள் என எதுவும் சோடை போகவில்லை. தைரியமான முயற்சி. இலவசம் என்றாலும் தரத்தை டைம்ஸ் மறக்கவில்லை.

- கோமாளிமேடை டீம்












பிரபலமான இடுகைகள்