காமெடி திருடர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?
காமெடி திருடர்கள்!
உழைத்து சம்பாதிப்பது எவ்வளவு கஷ்டமோ, அதைவிட கஷ்டம் அதைத் திருடிக் கொள்ளையடித்து சென்று சோக்காளியாக வாழ்வது. திருடர்களின் அசகாயர்களும் உண்டு, அசடுகளும் உண்டு. அதில் சிலர்...
கேட்காத காது!
ஜெர்மனியில் நடந்த திருட்டுக் கதை இது. பெர்லினில் உள்ள வங்கியில் நுழைந்த திருடர் துப்பாக்கியைக் காட்டி பணத்தை பேக்கில் நிறைக்கச் சொன்னார். கேஷியரும் வியர்த்து வழிந்தபடி, பணத்தை பேக்கில் போட்டார். அப்போது பேக் நிரம்ப, இன்னொரு பேக் வேண்டுமா என ஊழியர் கேட்டார். அதற்கு, அத்திருடர், கையில் வைத்திருக்குக்கும் துப்பாக்கி ஒரிஜினல்தான் என்று பதில் சொல்லியிருக்கிறார். காது டமாராமா? என புன்னகைத்தவர் உடனே போலீசை அழைக்கும் அலாரத்தை ஒலிக்கவிட, திருடர் மாட்டிக்கொண்டார்.
இலவச வலை!
இங்கிலாந்தின் டெர்பிஷையரில் இருந்த சிலருக்கு தபாலில் வந்த கடிதம் ஆச்சரியமளித்தது. அவர்கள் போட்டியில் வென்றுள்ளதாகவும், அதற்குப் பரிசாக பீர் வழங்கப்படும் என்று எழுதியிருந்ததைப் படித்ததும் உச்சி குளிர்ந்து போயினர். சொன்ன இடத்திற்கு வந்தவர்களை போலீஸ் லத்தியில் முட்டிக்கு முட்டி தட்டி கெட்டியாய் காரில் ஏற்றி சிறையில் தள்ளியது. இது நியாயமா என்று கேட்பீர்கள். அத்தனை பேரும் தேடப்படும் குற்றவாளிகள். அவர்களைப் பிடிக்க போலீஸ் செய்த இலவச பீர் தந்திரத்தில் மாட்டியவர்கள் மட்டும் 19 பேர்.
அழைத்தால் வருவேன்!
சிகாகோவில் 2008 ஆம் ஆண்டு மஃப்ளர் கடை ஒன்றில் துப்பாக்கியோடு நுழைந்தார் ரூபன் ஸராடே. ஊழியர்கள் பயத்தில் நடுங்க, அதிரடியாகப் பணத்தைக் கேட்டார். மேலாளரிடம்தான் சாவி இருக்கிறது பதில் வர, ரூபன் தில்லாக ஒரு வேலை செய்தார். அதன் விளைவாக, ஒரு ரூபாய் அழைப்பில் போலீஸ் ரூபனைக் கைது செய்துவிட்டது. என்ன செய்தார்? ”மேலாளர் வந்ததும் ரிடர்ன் வந்து திருடுறேன். அவர் வந்ததும் எனக்கு போன் பண்ணுங்க” என போன் நம்பரை தாளில் எழுதிக் கொடுத்துவிட்டு வந்தார் அந்த ஐக்யூ திருடர்.
காரை எப்படித் திருடுவது?
அமெரிக்காவின் நெப்ராஸ்காவில் மெலிசா, தன் மகனை பள்ளிக்கு அழைத்துச்செல்ல காரை உசுப்பினார். அப்போது முகத்தருகே துப்பாக்கியின் நிழல். எம்கங்கா என்ற திருடர், மெலிசாவை கீழே இறக்கிவிட்டு காரைத் திருடினார். ஆனால் காரைக் கிளப்ப முடியவில்லை. காரின் விளக்கு எரிகிறது, வைப்பர் அசைகிறது கார் முனங்கினாலும் கியரைப் போட்டு காரை முன்னுக்கு தள்ள எம்கங்காவுக்கு யோசனை வரவில்லை. மெலிசா மெல்லிய புன்னகையுடன் 911 அழுத்த போலீஸ் சராலென வந்து தப்பியோட முயன்ற காமெடித் திருடரை பிடறியில் போட்டு கைது செய்தது.
-ச.அன்பரசு
வெளியீடு: தினமலர் பட்டம்