ஃபோர்ப்ஸ் 30 / 30
ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் இடம்பெறுவது என்பது பலரின் கனவு.
இதில் ஆசியாவைச்சேர்ந்த முப்பது முன்னோடி தொழில்முனைவோர் இடம்பெற்றுள்ளனர். 23 நாடுகளிலிருந்து வந்த 2000 விண்ணப்பங்களிலிருந்து 300 பேர்களைத்தேர்ந்தெடுத்துள்ளனர்.
அதில் சிலரைப் பார்ப்போம்.
லியு லியுவான்(29), லியாவோ வென்லாங் (29)(கவாரோபாட், சீனா)
தானியங்கி தொழில்நுட்பம்தான் லியு, லியாவோவின் ஐக்யூ சொத்து. 2015 ஆம் ஆண்டு கார்களை தானியங்கி முறையில் உருவாக்க முயற்சித்தவர்களுக்கு கைகூடியது சூட்கேஸ்தான். ஆம் சூட்கேஸை நீங்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இழுத்து வருகிறீர்கள் அல்லவா? இனி அது தேவையில்லை. அதுவே உங்களை ஃபாலோ செய்யும். தொந்தி அங்கிள் இடிக்கிறா, மயிலாப்பூர் மாமி தடுக்கிறாரா அத்தனையையும் ரோவர் சூட்கேஸ் சமாளித்து உங்களை பின்பற்றும்.
சீனாவில் 800 டாலர்களுக்கு விற்கும் இந்த சூட்கேஸ் வெளிநாடுகளில் 66 டாலர்கள் அதிகமாக சேல்ஸ் ஆகிறது. 12 ஆயிரம் சூட்கேஸ்களை விற்று சாதனை செய்தவர்கள் அதோடு நிற்கவில்லை. அடுத்து ட்ரக்குகளை தானியங்கி முறையில் செயல்படுத்தி விற்கத் தொடங்கிவிட்டனர். 50 ட்ரக்குகளை விற்றவர்கள், தானியங்கி பயணிகள் கார்தான் அடுத்த கனவு என்று சொல்லியிருக்கிறார்கள். இதற்காக 50 மில்லியன் டாலர்கள் முதலீடும் கிடைத்துள்ளது.
செப், சோடாபாட்டில் ஓபனர் வாலா, இந்தியா
அனஹிதா லண்டனில் லெ கார்டன் பிளியு என்ற மையத்தில் சமையல் கலை பயின்றவர். ஆனால் ஹோட்டல் வைத்தால் இட்லி, தயிர்சாதம் என சமைத்து போரடிக்க கூடாது என தனது பாரம்பரிய இரானி உணவுவகைகளை சமைக்கத் தொடங்கினார். முதல் கடையை டெல்லியில் போட்டார். உதவியது பிரபல உணவக ஆளுமை ஏ.டி.சிங். இப்போது ஐ.நாவின் ஜீரோ ஹங்கர் திட்டத்தையும் தனது உணவகம் வழியாக பிரசாரம் செய்து வருகிறது பொண்ணு.
ஹூசைன் எலியஸ் 29,
பதாவோ, வங்கதேசம்
அமேசானில் பொருட்களை வாங்குகிறீர்கள். அதனை யாரோ ஒரு இளைஞர் கொண்டு வந்து தருகிறார். அவர் போன்ற இளைஞர்களை பணியமர்த்தி வேலை செய்கிறார் ஹூசைன் எலியஸ். இதுபோன்ற இகாமர்ஸ் நிறுவனங்களின் தேவைகளை தனது பைக்கர்ஸ் மூலம் பூர்த்தி செய்வது இவரின் டூட்டி. 2 லட்சம் ட்ரைவர்களைக் கொண்டுள்ள கம்பெனிக்கு 12 மில்லியன் டாலர்கள் முதலீடு கிடைத்துள்ளது. நாட்டிலுள்ள 10 ஆயிரம் உணவகங்களுக்கான உணவு டெலிவரி சேவை எங்களுக்கு கிடைத்துள்ளது. நிச்சயம் ஜெயிப்போம் என்கிறார். ஜெயிச்சிட்டீங்கன்னுதானே நாங்களே எழுதிக்கிட்டிருக்கோம். அப்புறம் என்ன ப்ரோ!
நவோமி ஒசாகா, 21
டென்னிஸ் வீரர், ஜப்பான்
களத்தில் புலி, வெளியே பூனை என்ற மேடமின் கேரக்டருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இப்போது தரவரிசையில் நம்பர் இடத்தில் சிறகடிக்கிறார். 11 மில்லியன் டாலர்களை சம்பாதித்துள்ளார் இந்த ஜப்பான் வீரர். செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி அவரின் வாயாலேயே ஆபத்தான விளையாட்டு வீரர் என்று சொல்லவைத்தவர். கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை வென்ற முதல் ஜப்பான் நாட்டுக்காரர் என்ற சாதனையையும் படைத்தார். நைக், நிசான், ஆல் நிப்பான் ஏர்வேய்ஸ் என பல கம்பெனிகளின் விளம்பரத்தூதரும் அம்மணிதான்.
கென்னி வாங், 29
ஐக்ளூஹோம் ஸ்மார்ட் பூட்டுகள், சிங்கப்பூர்.
ஒரே சம்பவம்தான் இவரது வாழ்க்கையை மாற்றியது. கென்னி வாங்கின் தாத்தா, வீட்டில் உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். இவர் வீட்டை பாதுகாப்பாக பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். தாத்தா, தவறிவிழுந்து இடுப்பு எலும்பு உடைந்துபோக நினைவிழந்து கிடந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த கென்னியின் அத்தை ஆம்புலன்சுக்கு போன் போட்டு தாத்தாவை காப்பாற்றினார்.
அப்போதுதான் கென்னி வாங், ஐக்ளூ ஹோம் என்ற நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அவரின் தலைமையில் உருவாக்கியதுதான் ஸ்மார்ட் பூட்டு. இதில் கைரேகை, கண், செக்யூரிட்டி கோடு முறையில் பூட்டித் திறக்கலாம். இதில் சிம் கார்ட்டையும் பயன்படுத்திக்கொள்ளும் வசதியை உருவாக்கி உள்ளனர்.
நன்றி: ஃபோர்ப்ஸ்