நாடோடி வாழ்க்கையின் மகிழ்ச்சி! - டேஸ் ஆஃப் ஹெவன்
சினிமா விமர்சனம்
டேஸ் ஆஃப் ஹெவன் (ஆங்கிலம்)
இயக்கம் - டெரன்ஸ் மாலிக்
ஒளிப்பதிவு: நெஸ்டர் அல்மென்ட்ரோஸ், ஹாஸ்கெல் வெக்ஸ்லர்
இசை: என்னியோ மோரிகோன், லியோ கோட்கே
எந்த பொறுப்புமின்றி எதையும் என்னுடையது என்று சொல்ல முடியாத வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறீர்களா? அதுதான் டேஸ் ஆஃப் ஹெவன் சொல்லுகிற வாழ்க்கை.
அமெரிக்காவின் சிகாகோவில் வாழும் பில் நொடியில் கோபம் கொள்ளும் முரடன். அதனால் வேலை செய்யும் தொழிற்சாலையில் முதலாளியை குமட்டில் குத்தி நினைவிழக்கச் செய்கிறான். அப்புறம் வேலை எப்படி அங்கு இருக்கும்? உடனே தன் தங்கை லிண்டாவை கூட்டிக்கொண்டு கூடவே காதலி அப்பியுடன் டெக்ஸாஸ் செல்கிறான்.
அங்கு மூவருமாக பணக்கார பண்ணைக்காரரின் கோதுமை வயலில் வேலை பார்க்கின்றனர். அங்கு சந்திப்பவர்களிடம் அப்பியை தன்னுடைய தங்கை என்று பில் சொல்லிவிடுகிறார். பணக்கார விவசாயி, அப்பியை முதல் பார்வையில் இருந்து காதலிக்கிறார்.
அப்போது அதனை சில நிகழ்ச்சிகள் மூலம் அறிகிறார் பில். அப்போது பணக்கார விவசாயி குறித்த சில செய்திகளை அறிகிறார். உடனே அவரிடமிருந்த பணத்தை ஆட்டையைப் போல முடிவு செய்கிறார். இதற்காக காதலி அப்பியை விவசாயியை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறார். காதலனுக்காக அதையும் அப்பி ஏற்கிறாள்.
பணம் என்றாலும் காதலியை எப்படி விட்டுக்கொடுப்பது என பில் மனம் துடிக்கிறது. இருவருக்குமான உறவை ஒருகட்டத்தில் பணக்கார விவசாயி அறிகிறார். அப்போது ஏற்படும் திருப்பம் அனைவரது வாழ்க்கையையும் மாற்றிப் போடுகிறது. அது என்ன என்பதுதான் கதை.
எந்த ஓனர்ஷிப்பும் இல்லாத நாடோடி வாழ்க்கையின் வசந்தகாலத்தையும் இலையுதிர்காலத்தையும் பிரமாதமாக குறைந்த வசனங்களுடன் எடுத்த டெரன்ஸ் மாலிக்கை கட்டித்தழுவி பாராட்டலாம்.
ஒளிப்பதிவு மாயாஜாலமே நிகழ்த்துகிறது. அவ்வளவு துல்லியம். செடி மெல்ல முளைவிட்டு எழுவதையும், கோதுமையை வெட்டுக்கிளி அழிப்பதையும் பிரமாதமாக காட்சி படுத்தி இருக்கிறார்கள்.
நடிகர்கள் ஜெரார்டு கெரே, ப்ரூக் ஆடம்ஸ் ஷெப்பர்டு என உறுத்தாத நடிப்பு. படத்தின் மையக்கருத்தை ஆழமாக மனதில் விதைக்க உழைத்திருக்கிறார்கள்.
படத்தின் இறுதிவரை கதாபாத்திரங்கள் ஏதோ ஒருவகையில் காலத்தின் வேகத்திற்கு ஏற்ப வந்து சேரும் நண்பர்களோடு பயணித்தபடியே இருக்கிறார்கள். அப்பி இறந்த கணவரின் சொத்துக்களுடன் லிண்டாவை பள்ளியில் சேர்த்துவிட்டு டிரெயினில் ஏறி கிளம்பிவிடுகிறாள். லிண்டா பள்ளியிலிருந்து வெளியேறி தோழியின் ஆண்தோழனைப் பார்க்க ரயில் பாதையில் நடக்க படம் முடிவடைகிறது.
ஆனால் படம் தரும் அனுபவத்தை நிச்சயம் தவறவிடாதீர்கள்.
- கோமாளிமேடை டீம்
நன்றி: த.சக்திவேல்
படம்: ஆர்ட் ஆப் தி டைட்டில்